சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் படைத்த விருந்து! (Post No.7820)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7820

Date uploaded in London – – 13 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் படைத்த விருந்து! (Post No.7820)

அருமையான உண்மை வரலாறு ஒன்றை நமது பழம் பெரும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அது சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் படைத்த விருந்து பற்றியதாகும்.

அவிநாசியில் ஒரு வீட்டில் அழுகைக் குரல் கேட்க, அதன் காரணத்தை வினவினார் சுந்தர மூர்த்தி நாயனார்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வீட்டிலிருந்த குழந்தையை குளத்தில் இருந்த ஒரு முதலை பிடித்துக் கொண்ட சம்பவத்தை அவரிடம் சொல்லவே, மனம் இரங்கிய அவர், நேராகக் குளக்கரை சென்றார். அங்கு  சுந்தரர் ஒரு பதிகம் பாட மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதலை விழுங்கிய குழந்தை மூன்று ஆண்டுகளுக்குண்டான வளர்ச்சியுடன் குளத்திலிருந்து மீண்டு வந்தது. அனைவரும் மகிழ்ந்தனர்.

(இதை கொங்குமண்டல சதகம் 16ஆம் பாடலை விளக்கும் கட்டுரையில் முன்னர் படித்து விட்டோம்)

    அவிநாசியிலிருந்து கிளம்பிய சுந்தரர் செல்லும் வழியில் ஒரு காட்டைக் கடக்க நேர்ந்தது. காடோ அடர்ந்த காடு. சுந்தரருக்கு வழி தெரியவில்லை.

உடனே உலகைப் படைத்த அன்னையான பார்வதி வேடச்சி வேடம் பூண்டாள். சிவபிரானோ ஒரு வேடன் வேடம் பூண்டார். இருவரும் சுந்தரர் முன் தோன்றி வழியைக் காட்ட ஆரம்பித்தனர். காட்டிலிருந்து வெளியேறி துடியலூரை அடைந்தார் சுந்தரர். அப்போது வழிகாட்டி வந்த வேடனும் வேடச்சியும் மறைந்தனர்.

அங்குள்ள ஆலயம் சென்ற சுந்தரர் அகத்தீசரையும் அருந்தவச் செல்வியம்மையையும் முறைப்படி வணங்கினார்.

அசரீரி எனப்படும் ஆகாய வாக்கு ஒன்று ஒலித்தது: “உணவருந்திச் செல்க” என்று!

கணநாயகர் பலவகையான உணவுடன் காட்டு முருங்கையிலைக் காய்க்கறியும் ஆக்கிப் படைத்தார். கூடவந்த பரிவார ஜனங்களுடன் நல்ல விருந்தை உண்டு மகிழ்ந்த சுந்தரர் இறைவனைப் பாடி விடை கொண்டு ஆறை நாட்டை விட்டகன்றார்.

இதை கொங்குமண்டல சதகம் 21ஆம் பாடலில் இப்படி விளக்குகிறது :

வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியிளங்

காட்டு முருங்கை யிலைகாய்நெய் பெய்து கறிசமைத்துப்

பாட்டு முழக்குவன் றொண்டருக் கன்னம் படைத்துநரை

மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : வழி தெரியாது மயங்கும்  வன்தொண்டருக்கு வேட வடிவு கொண்டு வழி காட்டிக் கூட்டி வந்து, காட்டு முருங்கையிலை காய்க் கறியுமாக்கி விருந்து செய்த விருந்தீசுரர் விளங்கும் துடியலூரும் கொங்குமண்டலமே என்பதாம்.

இதைத் துடிசைப் புராணம் இப்படி விளக்குகிறது:-

சொல்லருங் கிராத வேடந் துணைவியுந் தானுங் கொண்டு

மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ வன்று

ஒல்லுநர் தம்மை நோக்கி யுயங்குத லொழித்தி யென்று

வல்லுரந் தன்னி னல்ல வழிதனைக் காட்டி யாங்கே

கடிய தானமுட் கான முருங்கையி

னெடிய காயட காதிய நெய்சுவைப்

பொடி விராய பொறித்த புளிக்கின

முடிவி லாத முதிர்கறி பாகரோ – துடிசைப் புராணம்

திரு அவிநாசிப் புராணம் தரும் பாடல் இது:

 நெட்டிசையின் றமிழ்முனிபூ சனையுகந்த துடிசையில்வாழ் நிமலர்ப் போற்றி

அட்டில்வினைப் புனமுருங்கை யடகவிநல் லமுதுவிருந் தளிக்க வுண்டார்

( திருவவிநாசிப் புராணம்)

சுந்தரர் தேவாரத்தில் திருவாழ்கொளிபுத்தூர் தேவாரப் பதிகம் 12 பாடல்களைக் கொண்டது. ‘தலைக்கலன் தலைமேல்’ என இந்தப் பதிகம் ஆரம்பிக்கும். இதில் ஆறாவது பாடலில் இந்த வரலாறைச் சுந்தரர் குறிப்பிடுகிறார். பாடல் இதோ:-

திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு

       அருள்கள் செய்திடும் தேவர்பிரானை

உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா

      மூர்த்தியை விசயற்கு அருள் செய்வான்

செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று

     செங்கண் வேடனாய் என்னொடும் வந்து

மருவினாந்தனை வாழ்கொளிபுத்தூர்

    மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே (ஏழாம் திருமுறை)

“இதில் செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று

 செங்கண் வேடனாய் என்னோடும் வந்து” என்பதில் இந்த வரலாறைக் குறிப்பிடுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

tags –  சுந்தரமூர்த்தி நாயனார், .சிவபிரான்,  விருந்து

****