
WRITTEN BY DR M S SRI LAKSHMI, SINGAPORE
Post No. 9966
Date uploaded in London – 12 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுந்தரர் வாழ்வில் அருளும் பொருளும்
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

மூவர்தமிழ் எனப்போற்றப்படும் தேவாரத்தில் சுந்தரர் தேவாரத்தைத் “திருப்பாட்டு” என்று சொல்லும் வழக்கம் உண்டு. தேவாரம் பாடிய இம்மூவரையும் ஒப்பிட்டுச் சொல்லும்போது “சம்பந்தர் தன்னைப் பாடினார்; அப்பர் என்னைப் பாடினார்; சுந்தரர் பொன்னைப் பாடினார்” என்று இறைவனே சொன்னதாகச் சொல்லப்படும் வழக்கும் உண்டு. கைலாயத்தில் இறைவனின் அணுக்கத்தொண்டராய் விளங்கிய ஆலாலசுந்தரர் பூவுலகில் சுந்தரமூர்த்தியாக அவதரித்தார்.சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள். சுந்தரர் போலவே சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் அழகானவை;இசைநயம் மிக்கவை;இலக்கியச்செழுமை கொண்டவை. பொன்வேண்டிப் பாடியவை, வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடியவை என்பனவற்றைச் சுந்தரர் தேவாரத்தின் சிறப்பு இயல்புகளாகக் கூறினாலும் இவருடைய பக்திச்சிறப்பு வியக்கத்தக்கது. “மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்” எனச் சிவனடி மறவாச் சிந்தையும், “ “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்று ஐந்தெழுத்தை உச்சரிக்கும் நாவும் கொண்டவர் சுந்தரர். தன்முனைப்பு சிறிதும் இல்லாத காரணத்தால் சிவபெருமான் அவருக்கு எளிவந்த பிரான் ஆனார்; சுந்தரரோ தம்பிரான் தோழர் ஆனார். பொதுவாகச் சிவனடியார்கள் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குபவர்கள். அப்படியிருக்க சுந்தரர் தேவாரத்தில் அருளும் பொருளும் என்ற தலைப்பில் நான் பேசத் துணிந்ததற்குத் “ திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் “ என்று பாடிய பக்திப்பெருநோக்கே காரணமாகும்.
மாதொருபாகனாம் சிவபெருமானுக்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலவிளக்கான சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சுந்தரரின் அவதார நோக்கத்தை “ தீதகன்று உலகம் உய்யத் திருவவதாரம் செய்தார் “ என்று பாடுகிறார். திருத்தொண்டத்தொகை என்னும் சீரிய நூலைப் பெறுவதற்காக “ மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத்தொகை தர” நம்பியாரூரர் அவதரித்தார் என்கிறது பெரியபுராணம்.சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பக்திமேம்பாடு காரணமாக அவர் ‘வன்தொண்டர்’ என்னும் சிறப்புப்பெயரால் அழைக்கப்பட்டவர். இவர் சகமார்க்கம் தோழமை நெறியால் இறைவனை வழிபட்டவர். சைவசமயக்குரவர் நால்வருள்ளும் ஒப்பீட்டு முறையில் நோக்கும்போது இவர் மற்ற மூவரை விடவும் உலகவாழ்வின் இன்பங்களைப் பெற்று மகிழ்ந்து சிவனைப் பாடி மகிழ்ந்தவர். பெரியபுராணத்தின் பெருந்தலைவராய் விளங்கும் இப்பெருமானின் பாடல்களில் மற்ற மூவரின் பாடல்களைப்போலப் பேரளவில் உலகவெறுப்பையோ, துறவையோ காணமுடியாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சுந்தரர் அறக்கருத்துகளாகக் கூறியுள்ளார்.
“ பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா !
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய்பெண்ணைத்தென்பால்வெண்ணெய்நல்லூர்
(அருள்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே”
எனப் பாடிச் சிவபெருமானுக்கு மீளா அடிமை ஆனவர். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்னும் மணிவாசகர் மணிவாக்கை உள்ளத்தில் நினைந்து சுந்தரரின் பித்தா பிறைசூடி என்னும் பதிகத்தை நோக்கினால் சுந்தரரின் பக்திச்சிறப்பும் அவர் பெற்ற அருள்திறமும் நமக்குப் புலப்படும். சுந்தரரின் உள்ளத்தில் இறைவன் பேரருளோடு தன்னை வைத்து ஆட்கொண்டதால் இப்பதிகம் “பேரருள் பேசும் பதிகம்” என்று சமயச்சான்றோர்களால் போற்றப்படுகிறது.
திருத்தலப்பயணங்களை மேற்கொண்டு பல தலங்களுக்கும் சென்ற நம்பியாரூரர் திருத்துறையூர்ப் பதியில் எழுந்தருளி உள்ள சிட்டகுருநாதப் பெருமானிடம் “ உன்னை வேண்டிக்கொள்வேன் தவநெறியே “என வேண்டுகிறார்.நம்பியாரூரர் இறைவனைவழிபட்டு நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார். சுந்தரரின் வழிபாட்டு நெறியை நமக்குக் கண்முன்னே சித்திரமாக வடித்துக்காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.
“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருச்சாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும்
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் “

இறைவனின் அருட்கருணையைப் பெற ஐம்புலன்களும் அந்தக் கரணங்களும் பேரின்பவெள்ளத்துள் திளைத்து மகிழ்ந்திருக்கவேண்டும். “ஆரூரில் அம்மானுக்கு ஆளாகிய ஆரூரன் அடியவர்க்கெல்லாம் அடியவன்” என்று இறையடியார்களை வழிபடும் சங்கமவழிபாட்டிலேயும் தலைநின்றவர். மிகுந்த தன்னடக்கத்துடன் ஆண்டவனின் பெருமையை அறியாதது போலவே அடியார்களின் பெருமையையும் அறியாத எளியேன் என் சொல்லிப் பாடுவேன் என்றபோது தியாகேசப்பெருமான் அவருக்கு “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”என்று அடிஎடுத்துக் கொடுக்கிறார். திருவாரூரில் இறைவன் தன்னைச் சுந்தரருக்குத் தோழனாகக் கொடுத்தான். இது எப்பேர்ப்பட்ட பேறு! சாமான்யமாகக் கிடைக்கக்கூடிய பேறா? உலகுக்கே தலைவனாய் இலங்கும் ஒப்பற்ற பரம்பொருள் சுந்தரரின் தோழர் ஆகிறார். சுந்தரருக்கு இறைவன் அருளிய திறத்தை “ முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்,சித்தமெலாம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே “ என மணிவாசகர் வியப்பதுபோல நாமும் வியக்கிறோம். இறைவனே தோழனாகிவிட்டார்.அப்புறம் என்ன ! சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் காதல் தூது செல்கிறார்.ஆகவேதான் சுந்தரர் ”பரவை என்னும் என் காதலிக்கும் எனக்கும் பற்றாக உள்ள பெருமானே” என்று பாடுகிறார். நட்பின் உரிமையால் சிவபெருமானிடம் பொருளை வேண்டிப்பெறுகிறார். இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகின்ற திருமுதுகுன்றத்தில் “நஞ்சியிடை” என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொருள் வேண்டுகிறார். உன்னுடைய அருள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று காத்துக்கிடக்கும் உன் அடியார்கள் இறந்துபோய்விட்டால் நீ வழங்கும் அருள் பயன் இல்லாமல் போய்விடும்.பஞ்சியிடைப் புட்டில் கீறுமோ?ஆகவே இன்றே இப்போதே அருள்செய் என்று பன்னீராயிரம் பொன்னை வேண்டிப்பெற்றார்.அதுவும் அந்தப் பொன் எல்லாம் பரவையார் வீட்டில் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறார். பரம்பொருளும் அசரீரியாக இங்குள்ள மணிமுத்தா ஆற்றி ல்போட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் பெற்றுக்கொள்க என்கிறார். இந்தத் திருவிளையாடலைக் குறிக்கும் வகையில் “ ஆற்றிலே போட்டுவிட்டுக் குளத்திலே தேடுவதுபோல்” என்ற சொலவடையே மக்களிடம் வழங்கப்பெறுகிறது.
பங்குனி உத்திரப் பெருவிழாச் செலவுக்காகப் பொருள் வேண்டும் சுந்தரர் பெருமானுக்கு. அவர் திருப்புகலூர்த் தலத்திலே இறைவனை வழிபட்ட பின் அங்குள்ள மண்டபத்தில் தலைக்குச் செங்கற்களை வைத்தபடி உறங்கிவிடுகிறார். அவர் நித்திரை கலைந்து விழித்துப் பார்க்கும்போது செங்கற்கள் தங்கக் கற்களாக மாறிவிடுகின்றன. உடனே பரம்பொருளின் அருள்திறம் வியந்து பொன்செய்த புனிதனைப் பாடுகிறார்.
“தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர்கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே “
என்று பாடுகிறார். சுந்தரர் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அல்லது அவர் வாயிலாக இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்பல. பொன்னும் பொருளும் பெறுவதற்கு மட்டும் இறைவனைப் பாடியதாக இளையர்கள் எண்ணிவிடக் கூடாது. இரு கண்பார்வையையும் இழந்தபோது ஒரு கண் பார்வையைத் திருவாரூரிலும் மற்றொரு கண்பார்வையைக் காஞ்சிபுரத்திலும் பெற்றார். இவர் அவினாசியில் முதலை உண்ட பாலனை எழுப்பினார். இவருக்காகக் காவிரி ஆறு இரு கூறாகி நின்றது. வெள்ளை யானை மீது அமர்ந்து சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலாயம் சென்றது போன்ற அற்புதங்கள் சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்ததற்கு இறையருளே காரணம் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ?. இந்த அற்புதங்கள் எல்லாம் சிவபக்தியாலும் சிவனருளாலுமே சுந்தரர்க்கு வாய்த்தன.வீரத்தின் மிடுக்கு இல்லாதவனை வீமன் என்றும் அர்ஜுனன் என்றும் புகழ்வதால் பயன் என்ன? கொடுக்கிலாதானைப் பாரி என்று புகழ்வதால் பயன் என்ன? இப்படிப் பல கேள்விக்கணைகளைத் தொடுத்து “மன்னா மனிசரைப் பாடாமல்” பரம்பொருளைப் பாடி உய்திபெறுங்கள் என்பதே சுந்தரர் வாழ்வு நமக்குச் சொல்லும் பாடமாகும்.

முற்றும்
tags- சுந்தரர் வாழ்வு