சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு! (Post No.8579)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8579

Date uploaded in London – – –27 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!

ச.நாகராஜன்

சுந்தர மூர்த்தி நாயனார் சிவபிரானைத் தோழனாக நினைத்து வழிபட்ட ஒரு அபூர்வமான சிவ பக்தர்.

இவர் வாழ்வில் நடந்த திருவிளையாடல்கள் ஏராளம்! அனைத்தும் ஆச்சரியமூட்டுபவை.

ஒரு விளையாடல் இதோ:

பேரூர் உள்ளிட்ட மேல் கொங்கு நாட்டுத் தல வழிபாட்டை மேற்கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவருக்குப் பொன் கொடுக்கத் திருவுளம் கொண்டார் சிவபிரான் – விக்ருதேசுரர்! ஒரு முதிய அந்தணர் வேடம் பூண்டார் விக்ருதேசுரர்! மூத்த பிள்ளையார் முதலிய திருக்குமாரர்கள் பின் தொடர்ந்து வர, தினந்தோறும் உள்ளார்ந்த அன்புடன் தன்னைப் பூஜித்து வரும் ஒரு கிழமையுற்ற ஆய்மகளிடம் அவர் சென்றார். இந்தக் குழந்தைகளை ஈடாக வைத்துக் கொண்டு பொன் தர வேண்டுமென்று வேண்டினார் அவர். அதற்கு இசைந்த அந்தக் கிழ மாது அந்த முதிய அந்தணர் குறிப்பிட்ட அளவுக்குப் பொன் கொடுத்து உதவினாள். அதைப் பெற்றுக் கொண்ட அந்தணர் தன் முன்

திருப்பதிகம் பாடிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு அந்தப் பொன்னைக் கொடுத்தருளினார்.

இந்த நிகழ்வு வெங்கால நாட்டில் நிகழ்ந்தது.

இதை திருவெஞ்சமாக் கூடற்புராணம் பாடிச் சிறப்பிக்கிறது.

பாடல்:-

கொள்ளை வண் டியிரு நாட்பூங் கோதையோர் பாகர் முன்பு

கள்ளமி லுள்ளத் தன்பு கனிந்துள கிழவி யார்பாற்

பிள்ளைக ளீடு காட்டிப் பெற்றசெம் பொன்னை யெல்லாந்

தெள்ளிய தமிழ்ப்பா சொன்ன திருத்தொண்டர்க் குவந்த ளித்தார்

                           (திருவெஞ்சமாக்கூடற் புராணம்)

இந்த அருமையான நிகழ்ச்சியைப் போற்றிப் பதிவு செய்கிறது கொங்கு மண்டல சதகம் தனது பத்தாம் பாடலில்!

கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியெந்தன்

அழகாகு மக்க ளடகு கொண் டம்பொ னருடியென்றேற்

றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு

மழுவேந் தியவிகிர் தேசுரன் வாழ்கொங்கு  மண்டலமே

பொருள் :-

சுந்தர மூர்த்தி நாயனார்க்குப் பொன் கொடுக்க வேண்டும் என்று அருளுள்ளம் கொண்டு, மூத்த பிள்ளையார் உள்ளிட்ட திருக்குமாரர்களை ஈடு வைத்துப் பொன் பெற்று அதை ஈந்த விகிர்தேஸ்வரர் விளங்குவதும் கொங்கு மண்டலமே தான்!

tags — சுந்தர மூர்த்தி நாயனார், பொன்

***