Compiled by London swaminathan
Article No. 1793;11th April 2015
Uploaded from London at 5-34 am
ஒரு ஊரில் ஒரு கோமுட்டிச் செட்டி இருந்தார். அவர் மஹா கஞ்சன். அதே ஊரில் புரோகிதம் செய்யும் ஒரு பிராமணர் இருந்தார். அவர் மிகவும் பேராசைக்காரர். ஒரு ஆடி அமாவாசை அன்று எல்லோரும் நதிக்கரையில் நீத்தார் நினைவாக தர்ப்பணம்-திதி கொடுத்தனர். கோமுட்டி செட்டியாரும் அவ்வாறு செய்ய எண்ணினார். காலையில் போனால், ஐயருக்கு நாலு அணா தட்சிணை கொடுக்க வேண்டி இருக்கும், நாம் மெதுவாக உச்சிப் பொழுதில் போவோம் என்று உச்சிப் பொழுதில் நதிக் கரைக்குப் புறப்பட்டார்.
அப்போதுதான் பிராமணர் தர்ப்பைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். செட்டியாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி. வாங்கோ செட்டியார்வாள், என்ன தாமதம்? அதனால் என்ன, வாங்கோ, உங்களுக்கும் பண்ணி வைக்கிறேன் என்று தர்ப்பைக் கட்டை அவிழ்த்து ஆயத்தமானார்.
செட்டியார் பொம்மை (கொலுவில்)
செட்டியாருக்கு தர்ம சங்கடமான நிலை. பிராமணரிடம் மாட்டேன் என்று சொல்லி அவர் சாபத்துக்கு ஆளாக முடியாது. அடடா, இடுப்பில் பணத்தை முடிந்துகொள மறந்துவிட்டேனே, என்றார்.
அட, செட்டியார்வாள், உமது கிருஹம் (வீடு)தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. நாளை நானே வீட்டுக்க்கு வந்து தட்சிணை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவருக்கு தர்ப்பணம் செய்துவைத்தார். செட்டியார் மனதில் பலா ஐடியாக்கள் உதித்தன. சரி என்று சொல்லி உட்கார்ந்து எல்லாம் முடிந்தபின்னர் விடை பெற்றுக் கொண்டார்.
அந்தப் பிராமணர், மறுநாள் அதிகாலையில் செட்டியார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார். ஜன்னல் வழியாகப் பிராமணரைப் பார்த்தவுடன் மனைவியிடம், “நான் செத்துப் ஓய்விட்டேன் என்று சொல்லி விடு, அவர் பணம் வாங்க வந்திருக்கிறார்” என்று சொன்னார். மனைவியும் அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக வந்து கதவைத் திறந்து, ஐயஹோ, அவர் போய்விட்டாரே என்று கதறினார்.
பிராமணர் மனதில் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கென்ன நானே காரியம் எல்லாம் செய்து முடிக்கிறேன், கவலைப் படாதீர்கள் என்று சொல்லி ஈமக் கிரியைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்தார். செட்டியார் கொஞ்சமும் பயப்படவில்லை. பிணமாகக் கிடந்தார். வீட்டின் முன்னால் பாடை தயாராகி, அவரைத் தூக்கி வைத்தனர். சங்கு ஊதியது, மணி அடித்தது, இறுதி ஊர்வலமும் புறப்பட்டது. ஐயர் முன்னே செல்ல நெருங்கிய உறவினர்கள் பின்னே வர, ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது.
அந்தப் பிராமணர் எல்லா கிரியைகளையும் முடித்த பின்னர் சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. சுடுகாட்டில் பிணத்துக்கு தீ வைத்த பின்னர் யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற சம்பிரதாயம் உண்டு. ஆகவே பிராமணர் திரும்பிப் பார்க்காமல் சென்று ஒரு மரத்தின் பின்னர் ஒளிந்து கொண்டார். சிதைத் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. யாரும் இல்லை என்பதை ஓரக் கண்ணால் பார்த்த செட்டியார், தாவிக் குதித்து வெளியே வந்தார். அப்பாடா, அந்தப் பிராமணனுக்குக் காசு கொடுக்காமல் தப்பிக்க எவ்வளவு சிரமப் பட்டுவிட்டேன் என்று சொல்லி பெருமூச்சு விட்டார். மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிராமணருக்குச் செட்டியாரின் குரல் தேன் போல ஒலித்தது. செட்டியார் முன்னால் தாவிக் குதித்து வந்து, எங்கே என் நாலணா? என்று கேட்டார்.
“கள்ளனுக்குக் குள்ளன்” — என்பது தமிழ்ப் பழமொழி
நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது – கன்னடப் பழமொழி!
swami_48@yahoo.com



You must be logged in to post a comment.