
Nataraja picture- posted by Karthik
Date: 29 JANUARY 2018
Time uploaded in London- 6-12 am
Written by S NAGARAJAN
Post No. 4675
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)
தென்னாடுடைய சிவன்!
சைவத்தை விளக்குவது, சிம்பிளா, சிக்கலா?!
ச.நாகராஜன்

1
சைவம் என்றால் என்ன?
அட, இது தானா கேள்வி! சிவனைக் கும்பிட்டு வழிபாடு செய்வது சைவம். சிவனைத் துதிப்போர் சைவர்கள்.
எளிய, சரியான விளக்கம் தான்! ‘சிம்பிளான’ விளக்கம்.
ஆனால் உண்மையில் சைவ சித்தாந்தத்தையும், சிவனின் பெருமையை உள்ளபடி அறியவும், சிவனை உரிய முறையில் வழிபடும் வழிபாட்டு முறைகளையும் அறிவது எளிதான ஒன்று அல்ல.
மனதைச் செலுத்தி அதில் தேர்ந்த பெரியோரை அணுகி அனைத்தையும் அறிய வேண்டும்.
சிக்கலான பல விஷயங்களை அறிவது சுலபமல்ல; ஏராளமான நூல்கள் இந்த விளக்கத்தைத் தர முனைந்துள்ளன. இவற்றிற்குள்ளும் இவற்றிற்கு அப்பாற்பட்டும் அமைவதே சிவனின் வழிபாடு!
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா?
அவனைப் பற்றிய தமிழ் இலக்கிய நூல்கள் ஏராளம். அந்த நூல்களில் ஒரு சிறு நூலில் ஒரு சிறு துளியைப் பார்ப்போம்!

Dance before Nataraja, picture by Taitini Das
2
திருவேட்டீசுவரர் புராணம்
தொண்டை நாட்டில் திருவொற்றியூர், திருமயிலாப்பூர் ஆகிய திவ்ய தலங்கள் இரண்டிற்கும் இடையில் அமைந்துள்ளது திருவேட்டு நகர். இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் திருவேட்டீடுவரர். அவரது புராணத்தை திருவேட்டீசுவரர் புராணம் என்று பண்டிதர் வெங்கடாசலம் பிள்ளை என்ற புலவர் பெருமான் இயற்றியுள்ளார்.
10 படலங்களில் 423 பாடல்களைக் கொண்டுள்ளது இது. கவிஞர் பிரான் சுமார் 112 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த தலமான இதை வைப்புத் தலமாக அப்பர் பிரான் பாடி அருளியுள்ளார்.
தெண்ணீர் புனற்கெடில வீரட்டமுந் சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையான் விளமா வெண்ணி மீயச்சூர் வீழி மிழிலை மிக்க
கண்ணார் நுதலாள் கரபுரமுங் கபாலியாரவர் தங்காப்புகளே
என்று இப்படி நாவுக்கரசர் காப்புத் திருத்தாண்டகத்தில் இந்தப் பதியைக் குறிப்பிட்டுள்ளார். ஆக தேவார வைப்புத் தலங்கள் 248இல் இதுவும் ஒன்றாக அமைகிறது.

Nataraja Idol- posted by Lalgudi Veda
3
திருவேட்டீசுவரர் புராணத்தில் திருநந்திதேவர் படலத்தில் சில பாடல்கள் சைவத்தில் நாம் அறிய வேண்டிய அருமையான விளக்கங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.
சைவ சமயத்தின் விபாகங்கள் பல என்பதை அறியும் போது நாம் சைவம் பற்றி அறிந்தது ‘கை மண் அளவு’ என்பது புலப்படுகிறது. அறிய வேண்டியது உலகு அளவு!
ஊர்த்வ சைவம் என்பது சிவன் ஒருவன் உண்டெனவும் அவன் தத்வாதீனன் என்றும், சடை, விபூதி, ருத்திராட்ச தாரணத்துடன் சிவபூஜை செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவவேடம் பொருளாகக் கொண்டு சிவத்தை தியானிப்பதே மூர்த்தி என்றும் சொல்லப்படும் சைவம்.
மற்ற சைவங்கள் :- அநாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம்,நிர்க்குண சைவம், அத்துவா சைவம், அவாந்தர சைவம், ஞான சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம், வீர சைவம், சுத்த சைவம் என்பன.
இவற்றில் ஆதி சைவம், அனந்த சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், எண்குணச் சைவம், நிற்குண சைவம் ஆகியவை பற்றி திருவேட்டீசுவரர் புராணம் ஆறு பாடல்களில் குறிப்பிடுகிறது.

ஆதி சைவம் என்றால் என்ன?
ஆதி சைவமாவது, சிவனிடத்து மோகமாய், மோக்ஷ சாதனங்களுக்கு வேண்டிய வேடங்களும், ஒழுக்கமும் பூண்டும் எல்லாம் சிவ போகமாய் அனுபவித்து விபூதி, ருத்திராக்ஷ சிவ வேடத்தின் மேல் நம்பிக்கையுடனிருந்து சிவனை அடைவதாகும்.
அனந்த சைவம் என்றால் என்ன?
அனந்த அல்லது அநாதி சைவமாவது, பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும், விபூதி, ருத்ராக்ஷ, சிவ வேடப் பொருளாகக் கொண்டு சிவத் தியானம் செய்து பாசம் நீங்கிச் சிவனை அடைவதே முக்தி என்பதாகும்.
மகா சைவம் என்றால் என்ன?
மகா சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவ மூர்த்தியை சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானம் செய்து முக்தி பெறுவதேயாகும்.
பேத சைவம் என்றால் என்ன?
பேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து சிவனடியார் ஆசாரியார், சிவலிங்கம் ஆகிய் இவைகளை பூஜித்து முக்திஅடைதல் என்பதாகும்.
அபேத சைவம் என்றால் என்ன?
அபேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷர ஜெபம் செய்து சிவ பாவனை (சிவோஹம்) செய்து சிவம் ஆதல் என்பதாகும்.
அந்தர சைவம் என்றால் என்ன?
அந்தர சைவமாவது, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படியிருத்தலை ஆராய்ந்து நாடுதல் முக்தி எனக் கூறும் சைவமாகும்.
எண்குணச் சைவம் என்றால் என்ன?
இறைவன் எண்குணத்தான் எனக்கூறும் சைவம் இது.
நிற்குண சைவம் என்றால் என்ன?
விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து நிர்குணனான சிவமூர்த்தியை அருவமாகத் தியானித்தல் நிற்குண சைவம் ஆகும்.

4
இவ்வளவு சைவமா என்று மலைக்க வேண்டாம்.
இதற்கு மேலும் ஏராளமான தத்துவங்கள் உண்டு.
ஒரு நல்ல சிவ பக்தன் அறிய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு.
சைவம் ‘சிம்பிள்’ தான்; ஆனால் நுட்பமாக உள்ள தத்துவங்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டால் உரிய பெரியவரையோ அல்லது நூலையோ நாடினால் நல்ல விளக்கம் கிடைக்கும்.
திருவேட்டீசுவரர் புராணத்தில் 203,205,207 முதல் 211முடிய உள்ள பாடல்கள் மேலே கண்டவற்றைக் குறிப்பிடுகின்றன.
‘திருவேட்டீசுவரர் புராணம் – மூலமும் உரையும்’ என்ற நூல் 1976ஆம் ஆண்டு திருவேட்டீசுவரர் தேவஸ்தான திருப்பணிக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
நூலுக்கு சிறந்த உரையை இராவ்சாஹிப் நல். முருகேச முதலியார் அளித்துள்ளார்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
***