WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,610
Date uploaded in London – – 30 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காதலில் டைம் -டைலேஷன்!
ச.நாகராஜன்
கால விரிவு – Time dilation – என்பதை எப்படி விளக்குவது?
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருவர் இதைக் கேட்ட போது அவர் எளிமையாக இதற்கு விளக்கம் தந்தார்.
“உங்களது கையை சூடாக இருக்கும் ஸ்டவ்வின் மீது ஒரு நிமிடம் வையுங்கள். அது ஒரு மணி நேரம் ஆனது போல இருக்கும். ஒரு அழகியுடன் ஒரு மணி நேரம் உட்காருங்கள். அது ஒரே ஒரு நிமிடம் ஆனது போல இருக்கும்”.
“Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That’s relativity.” ― Albert Einstein
இந்த விளக்கம் இருபதாம் நூற்றாண்டின் விளக்கம்.
ஆனால் நமது கவிஞர்கள் இதை எப்போதோ சொல்லி விட்டார்கள் தங்கள் காதல் கவிதைகளில்.
இப்படி ஏராளமான காதல் காட்சிகளை அவர்கள் தந்திருக்கின்றனர்.
ஒரு காட்சியை மட்டும் இங்கு பார்ப்போம்.
நைடதம் என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றான் மன்னன் அதிவீர ராம பாண்டியன்.
அதில் சந்திரோபாலம்பனப் படலத்தில் வரும் ஒரு பாடல் இது:
பணந்தா ழல்குற் பைந்தொடியீர்
பதுமத் திறைக்கும் வானவர்க்குன்
கணஞ்சே ருலகின் மன் பதைக்குங்
காலங் கணித்த கலை வல்லோர்
மணந்தார் தமக்கோ ரிமைப் பொழுது
மாறாக் காதன் மகிழ்நர்புயந்
தணந்தார்க் கூழி யாகுமெனச்
சாற்றா திருந்த தகை யென்னே
(பாடல் எண் 16)
பொருள் :
பணந்தாள் அல்குல் – பாம்பினையுடைய படம் எடுப்பது போன்ற ஜனன உறுப்பைக் கொண்டிருக்கும்
பைந்தொடியீர் – பசுமைப் பொன்னால் ஆன வளையல்களை அணிந்துள்ள மங்கையரே!
பதுமத்து இறைக்கும் – தாமரை மலரின் மேல் இருக்கின்ற பிரமதேவனுக்கும்
வானவர்க்கும் – வானில் உறைகின்ற தேவர்களுக்கும்
கணஞ்சேர் உலகின் மன்பதைக்கும் – கூட்டமாகச் சேர்ந்திருக்கின்ற உலகம் வாழ் மக்களுக்கும்
காலம் கணித்த கலை வல்லோர் – வாழ்நாளைக் கணித்திருக்கின்ற கலை வல்லார்கள்
மணந்தார் தமக்கு – திருமணம் செய்து கொண்டிருக்கும் தம்பதியர்க்கு
மாறாக் காதல் மகிழ்நர் புயம் தணந்தார்க்கு – நீங்காத காதலை உடைய தனது கணவரின் தோளைக் கூடியவர்க்கு அதை விட்டுப் பிரிகின்ற
ஓர் இமைப் பொழுதும் ஊழி ஆகுமென – ஒரே ஒரு இமைப் பொழுது கூட ஊழியளவு காலம் ஆகும் என்று
சாற்றாது இருந்த தகை என்னே?! – சொல்லாமல் இருக்கின்ற முறை என்ன? அது சரியா?
காதலர் ஒருவரை ஒருவர் நெடு நேரம் தழுவிச் சேர்ந்திருந்தாலும் அது ஒரு கணம் தான்; அவர்கள் ஒரு கணம் பிரிந்திருந்தாலோ அது ஒரு ஊழிக் காலம் அளவு ஆகி விடும்!
புராணம் வகுத்தார் தேவர்க்கு ஒரு நாள் என்பது மனிதருக்கு ஒரு வருடம், பிரம்மாவின் ஒரு நாள், மனிதர்களுக்கு பிரளய காலம் வரும் வரையிலுமான காலம் என்றெல்லாம் கணித்துப் புராணத்தில் துல்லியமாகச் சொல்லி உள்ளனர்.
–SUBHAM–
tags- காதல், டைம் டைலேஷன்,