
Compiled by London swaminathan
Date: 4 JULY 2018
Time uploaded in London – 7-45 am (British Summer Time)
Post No. 5180
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
‘மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’
‘தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை’
—வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீரராம பாண்டியன்)
மந்திரிக்கு அழகு என்ன?
இனி நடக்கப்போவதை அறிந்து மன்னனுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன் – குறள் 638
பொருள்-
அறிந்து கூறுவோர் இல்லாமல் மன்னன் தானே அறியும் ஆற்றல் அற்றவன்; அவன் மதிக்காவிட்டாலும் அமைச்சனின் கடமை– நன்மை தருவனவற்றை எடுத்துரைத்தலாம்.
மன்னன் மஹாபலி மிகவும் தயாள குணம் உடையவன். ஆயினும் அரக்கர் குலத்தவன். அவனுடைய ஆற்றல் பெருகினால் ஆபத்து விளையும் என்று கருதி, திருமால் குள்ளன் வடிவத்தில்– வாமனன் வடிவத்தில்- பிராமண கோலத்தில் யாசிக்கச் சென்றார். யாசகம் கேட்டு வந்தவன் சாதாரண பிராஹ்மணன் அல்ல என்பதை அசுர குருவான சுக்ராச்சார்யார் அறிவார்.
ஆகையால் மஹாபலி சக்ரவர்த்தியை எச்சரித்தார். இந்த ஆள் சாதாரணமானவர் அல்ல. அவன் கேட்பதை எல்லாம் தந்து விடாதே. உ னது ராஜ்யத்தில் ஒரு பகுதி மட்டும் கொடுத்து திருப்பி அன்னுப்பிவிடு என்றார். ஆனால் ‘விநாஸ காலே விபரீத புத்தி’ வரும் அல்லவா. விதி கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் அல்லவா? மன்னன், மந்திரியின் சொல்லைக் காற்றில் பறக்கவிட்டான்.
ஐயரே, யாது வேண்டும் ? என்றான்
ஒன்றும் அதிகம் வேண்டாம்; மூன்று அடி மண் போதும் என்றான்.
அரசனோ சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள் என்றான்
வந்திருந்த வாமனனோ ‘ஓங்கி உலகு அளந்த உத்தமனாக’ வடிவு எடுத்து பூமியை ஒரு காலடியாலாலும் ஆகாய த்தை ஒரு காலடியாலும் அளந்து விட்டு, அன்பனே, மூன்றாவது அடிக்கு எங்கே வைப்பது? என்று வினவ, மன்னனும் என் தலையில் வைக்க என்றான்.
அவனுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது. தானம் கொடுத்த பலன் ஒன்று; விஷ்ணுவின் காலடி பெற்ற புண்ணியம் இரண்டு.
மன்னன் மஹாபலி ஒன்றும் தவறிழைக்காதவன் என்பதால் நீ ஆண்டுதோறும் எனது நட்சத்திரமான ஓணம் அன்று இதே பூமிக்கு விஜயம் செய்து மக்களின் வாழ்த்துக்களைப் பெறு என்றான். அதுவே ஓணம் பண்டிகை ஆயிற்று.

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
தந்திரிக்கு– அதாவது சேனைத் தலை வனுக்கு– அழகு என்ன?
போரில் அஞ்சாது ஆண்மையோடு இருத்தல்.
மஹாபரதக் கதை எல்லோருக்கும் தெரியும். துரியோதணனுக்கு எவ்வளவோ நல்ல புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்த முயன்றார் பீஷ்மர். ஆனால் அவன் கேட்ட பாடில்லை. அது மட்டுமல்ல. மஹாபாரதப் போரில் அவரை படைத் தளபதியாக நியமித்தான்; கட்டாயம் அதர்மம் தோற்கும் என்பதை அறிந்தும் அஞ்சாது போரிட்டு மடிந்தார்; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாது உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து உயிர் நீத்தார் பீஷ்மர். போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணனையும் இரண்டாம் நாள் போரில் சக்ர ஆயுதம் ஏந்த வைத்தார். போரெனில் இது போர்; புண்ணி யத்திருப்போர் என்று போற்றும் வ கையில் செயல்பட்டார். இது போல் தமிழ் நாட்டில் சிறுத்தொண்டர் ஆற்றிய சேவையையும் சொல்லலாம்.
-SUBHAM-