மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ??? (Post No.9048)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9048

Date uploaded in London – – 18 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ???

Kattukutty

( கணவன்மார்களேவெட்கப்படாமல் உங்கள் மனைவி,மகள்

மற்றும் சகோதரிகளிடமும் காண்பியுங்கள்)

மனைவிடமிருந்து தப்பிப்பது எப்படி???

“இதைத் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சார்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை.

பாத்திரங்களை விட்டெறியும், அல்லது பயங்கரமான ஆயுதங்களான அதாவது விளக்குமாறு, முறம், தடி, காய் வெட்டும் கத்தி, கரண்டி போன்றவற்றை “பிரயோகிக்கும்போது” தப்பிப்பது எப்படி என்ற சொல்லப் போவதில்லை……….. நாம் வழக்கமாக வாரா வாரம் காய்கறி வாங்கி வந்த பின் “வாங்கிக்” கட்டிக் கொள்கிறோமே அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே பற்றி சொல்லப் போகிறேன்.

மனைவி சொல்கிறாள் :-

“எப்படிய்யா ஒரே முத்தல் வெண்டைக்காயையும், முத்தின கத்திரிக்காயையும் வாங்கிட்டு வந்திருக்கீங்க …… அந்த காய்கறிக்காரி, முத்தலும், தொத்தலுமா இருக்கற காயை உங்க தலையில கட்டிருக்கிறாள்……..”

நாம் குற்ற உணர்வுடன் “இது அவள் கொடுக்கவில்லை, நானே

பொறுக்கி எடுத்தேன்”………” என்கிறோம்.

“உங்கம்மா! உங்கள எப்படித்தான் வளர்த்தாளோ உங்கம்மா…..”

எங்கம்மாவுக்கு ஒரு “அடி”

“ஆமா, உங்கப்பா கூட கடைக்கு போவேளே அவர் கூட சொல்லித் தரல்லயா????”

அப்பாவுக்கும் ஒரு “அடி”

“உங்காத்து பரம்பரையிலேயே யாருக்குமே காய்கறி வாங்கத் தெரியாதா???”

எங்க பரம்பரைக்கே ஒரு “ஆப்பு”…….

“கடவுளே, இவங்களையெல்லாம் எப்படித்தான் படைத்தாயோ???”

கடைசியில் வைத்தாள் ஒரு பெரிய ஆப்பு கடவுளுக்கே!!!

இதோ காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற ஆராய்ச்சியில்

ஈடுபட்டு “மாஸ்டர் டிகிரி”யே வாங்கிவிட்டேன், அதாவது என் மனைவியே பக்கத்து வீட்டு பெண்மணியிடம் “உங்காத்துக்கு

ஏதாவது காய்கறி வேணும்னா சொல்லுங்கோ,

எங்காத்துக்காரரை விட்டு வாங்கிண்டு வரச் சொல்றேன். ஒரு சொத்தை, ஒரு முத்தல் இருக்காது, சுத்தமா புதுசா வாங்கிண்டு வருவார்” என்று சொல்கிறாள் இப்போது!

வெண்டைக்காய் – நுனியை உடைத்தவுடன் படக்கென்று உடைய

வேண்டும் வளையக்கூடாது. அப்படியே உடைந்தாலும் பச்சையாகவும் தொடுவதற்கு மென்மையாகவும் இருக்க வேண்டும்.

பீன்ஸ் – வளைத்தவுடன் படக்கென்று உடையவேண்டும். எல்லா பீனஸையும் உடைக்க முடியாது. ஒருபக்கம் நுனியைக் கிள்ளினால் அதிக நார் இருக்கக்கூடாது, அப்படியே இருந்தாலும் எளிதில் உரிபடும்.(நீங்கள் மனகுவது தெரிகிறது …எப்படி அத்தனையும் உரிச்சு பார்ப்பது) நீங்கள் தொட்டவுடனேயே தெரியும் முத்தலா இல்லையா என்று.

அவரை – விதை புடைத்துக் கொண்டு இல்லாமல் வளைய வேண்டும்.

கொத்தவரங்காய் – பீன்ஸ் மாதிரி படக்கென்று உடைய வேண்டும

வாழைத்தண்டு – வெள்ளையாக இருப்பதுடன், நுனியை நகத்தினால் கிள்ளினால், நார் வரக்கூடாது.

முருங்கைக்காய் – விதைகள் புடைத்துக்கொண்டு இல்லாமல் ஒரே மாதிரி பிரம்பு மாதிரியாகவும் முறுக்கினால் நன்றாக வளைய வேண்டும்

வெங்காயம் – கரு நீலம் இல்லாமல் லைட் ரோஸ் கலரில் இருக்க வேண்டும்

சேனைக் கிழங்கு – வெண்மையாக இருக்க வேண்டும். சிவப்பாக

இருந்தால் அரிக்கும். வாங்கி 2 நாள் கழித்தே சமைக்க வேண்டும்.

சேனையை நறுக்கியவுடன் புளித் தண்ணீரில் போட்டால் அரிக்காது.

கருணைக்கிழங்கு – தோலை உரித்தால் சிவப்பாக இருந்தால் நல்லது, சீக்கிரம் வேகும். சுவையாகவும் இருக்கும்

உருளைக்கிழங்கு- பச்சை நிறம் கூடாது. முளையோ, வேரோ, விட்டிருக்கக் கூடாது. அமுங்கக் கூடாது.

முள்ளங்கி – முடி முளைத்திருக்க கூடாது. கையினால் தொட்டால் சாப்டாக வழ வழ என்று இருக்கவேண்டும்.

பச்சை மிளகாய் – கெட்டியாக, மெலிந்ததாக இருக்க வேண்டும்.

தடியாக இருத்தால் உறைப்பு கம்மியாக இருக்கும்

பூண்டு- சிறியதாக இருக்க வேண்டும்

சேம்பு – கூடிய மட்டிலும் உருண்டையாக இருக்கும் படி பொறுக்கவும்.

முட்டை கோஸ் – கெட்டியாக, பச்சையாகவும் கனமாகவும் இலை பிரியாமலும் இருக்க வேண்டும்.

காலி ப்ளவர் – வெண்மையாகவும் இலைகள் பச்சையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். பூவின் மேல் பிரவுன் நிற

புள்ளியிருந்தாலும் வாங்கலாம். பூ மஞ்சள் நிறமாகவோ, மஞ்சள்

புள்ளிகள் இருந்தாலோ வாங்கக் கூடாது.

தக்காளி -கெட்டியாக, சிவப்பும், பச்சையாகவும் கலந்த நிறமுடையதாக வாங்கவேண்டும் மஞ்சள் நிறம் துளியும்

இருக்கக் கூடாது. மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்காமல் மூங்கில் தட்டில் அல்லது பிளாஸ்டிக் தட்டில் பரத்தி வைக்க வேண்டும்

வெள்ளரிக்காய் – கெட்டியாக பார்த்து வாங்கவும். இரு புறமும்

நறுக்கி அந்த நறுக்கிய பகுதியைத் தேய்த்தால் நுரை வரும். அதன் கசப்புத்தன்மையும் நீங்கி விடும்.

புடலங்காய் – முறுக்கிப் பார்த்தால் நெளிய வேண்டும். கோடு தெரியக் கூடாது.

பீட்ரூட், கேரட் – பசுமையாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பாகற்காய் – நல்ல கரும் பச்சை நிறமாக இருக்க வேண்டும்

வாழைப் பூ – கெட்டியாக, கனமாக, இருக்க வேண்டும் இதழ்கள்

பிரிந்திருக்கக் கூடாது்.

சுரைக்காய் – கனமானதாக வாங்க வேண்டும்

முசுப்பலா – தோல், கிள்ள வர வேண்டும்.

கத்தரிக்காய் – கரு நீலம் கூடாது. வெளிர் நீலம் சுவையாக இருக்கும் பாவாடை( மேல் உள்ள பச்சைத்தோல்) கத்தரிக்காயை ஒட்டி இருக்க வேண்டும். அழுத்தினால் மென்மையாக இருக்க வேண்டும்.

வாழைக்காய் – பட்டையாக மூன்று புறமும் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி கருத்திருக்கக் கூடாது.

கீரைகள் – தண்டு கனமாக இருக்கக் கூடாது. தண்டை ஒடித்தால்

படக்கென்று ஒடிய வேண்டும் சிறிய இலைகளாக இருக்க வேண்டும் இலைகளில் ஓட்டை இருந்தாலும் பரவாயில்லை.

காய்களை நறுக்கும் போது வாழைத்தண்டு, வாழைப்பூவை நறுக்கும் போது, மோர் கலந்த நீரிலும், கத்தரிக்காய், சுண்டைக்காய், பாகற்காய்களை நறுக்கும்போது அரிசி

கழுவிய நீரிலும், போட்டால் அதன் நிறம் மாறாது. கசப்பு துவர்ப்பு, உவர்ப்பு போன்றவை குறையும்.

கருணை, சேனை நறுக்கும்போதே புளித்தண்ணீரில் போட்டு புளித்தண்ணீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நமைச்சல் இருக்காது.

கீரைகளை சமைக்கும்போது மூடி வைக்கக் கூடாது.

முருங்கைக் கீரையை ரொம்பவும் வேக வைக்கக் கூடாது

பச்சை நிறம் மாறக்கூடாது.

அகத்திக் கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும்.

அதாவது பச்சை நிறம் மாற வேண்டும்

பழ மொழி – “வெந்து கெட்டது முருங்கைக் கீரை

வேகாமல் கெட்டது அகத்திக்கீரை”!

வெந்தயக்கீரை சாம்பார் செய்யும்போது, பருப்பு கரைத்து விடும் முன் கீரையை சாம்பாரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்தால் சாம்பார் கசக்காது.

தண்டு கீரையின் தண்டு கனமாக இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அதன் தோலை சற்று லேசாக சீவி மூன்று மூன்று

அங்குலமாக நறுக்கி சாம்பாரிலோ, மோர் குழம்பிலோ போடலாம்.

நாம் காய் வாங்கும்போது “கொசுறு” அதாவது இலவசம் என்று

கொத்தமல்லியும்கறிவேப்பிலையும் தருவார்கள்அது மாதிரிதான் இதுவும் “கொசுறு!!!

சில காய்களின் மருத்துவ குணங்கள்

அவரைக்காய் – நரம்புகள் வலுப் பெறும், மலச்சிக்கலைப் போக்கும்

கத்தரிக்காய் – உடலின் உஷ்ணத்தைத் தணிக்கும்

வெண்டைக்காய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் – ஆண்மைக் குறைவு, கருப்பை கோளாறுகளை நீக்கும்

வெள்ளரிக்காய் – கல்லீரல் பலம் பெற,மஞ்சள் காமாலை குணமாக, தாகத்தை தணிக்க,குளிர்ச்சியைத்தர, எளிதில் ஜீரணிக்க

பூசணிக்காய் – இருமல் காச நோய் குணமாக

சுரைக்காய் – சிறு நீரக கோளாறுகள் நீங்க, பொட்டாசியம் தர

வாழைக்காய் – மலச்சிக்கலைப் போக்க

மணத்தக்காளிக்காய் – குடல் புண்களைப போக்க

பாகற்காய் – வயிற்றிலுள்ள புழு பூச்சிகள் நீங்க, குளிர்ச்சி தர

முட்டைகோஸ் – நெஞ்சுவலி வராமல் தடுக்க, ஜீரணத்திற்கு

சுண்டைக்காய் – நரம்பு வலுப்பெற, எலும்பு வளர்ச்சியடைய

தேங்காய் – கருப்பை, வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற

மாங்காய் – ரத்தத்தை விருத்தி செய்ய

கோவைக்காய் – தொண்டை, நாக்கு வெடிப்பு புண்களை ஆற்ற

நெல்லிக்காய் – கண்ணோய் அகல, மூளை நரம்புகள் பலப்பட

அத்திக்காய் – ரத்த சோகை போக

வாழைத்தண்டு – சிறு நீரக கற்களை கரைக்க

பீட்ரூட் – நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்

உருளைக்கிழங்கு -இரும்பு, பாஸ்பரஸ் சத்து அதிகமாக

சேப்பங்கிழங்கு – எலும்பு, பற்களுக்கு உறுதி தர

கேரட் – மாலைக்கண், கண் கோளாறுகளைப் போக்க

பீனஸ் – புரதச் சத்து அதிகரிக்க, கால்ஷியம் அதிகரிக்க

புடலங்காய் – எலும்பக்க உறுதி தர

கொத்தவரங்காய் – நார்சத்து மலச்சிக்கலைப் போக்க

சௌ சௌ – பற்களுக்கு, எலும்புகளுக்கு உறுதி தர

முள்ளங்கி – பொட்டாசியம் பற்றாக்குறையை நீக்க

தக்காளி – அமினோ அமிலம் உற்பத்தியாக்கும், ரத்த விருத்திக்கும் நல்லது.

பூசணிக்காய் – நீர்ச்சத்தை அதிகரிக்க, ரத்த விருத்தி, குளிர்ச்சி தர

கருணைக்கிழங்கு -மலச்சிக்கல், மூலநோய் தீர, எலும்பு வளர்ச்சிக்கு

குடை மிளகாய் -அஜீரணத்தைப் போக்க

நூல் கோல் – பாஸ்பரஸ் அதிகரிக்க, மலச்சிக்கலைப் போக்க

வெங்காயம் – அதிக பாஸ்பரஸ் உள்ளது கொழுப்பைக் கரைக்க

மணத்தக்காளி -வாய் மற்றும் வயிற்றுப்பண்களை நீக்க

(கீரைகள், மற்றும் பழங்கள் பற்றி நேயர்கள் விரும்பினால் தொடரும்)

***

tags–   மனைவி, தப்பிப்பது, எப்படி,