“கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” – கம்பன்

RAMAYANA-BALLET-WEB-BANNER2

இந்தோநேஷிய ராமாயண நாடகம்

கட்டுரை எண்: 1733 தேதி:- 20 மார்ச் 2015

லண்டன் நேரம்:– காலை 5-13

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

எழுதியவர்: — ச.நாகராஜன்

ராமன் கதை கேளுங்கள் !

 

சீதையின் திருமணம்

 

ராமன் சீதையை மிதிலையில் கண்டு சிவதனுசை ஒடித்து திருமணம் புரிந்து கொள்வதைக் கதையாகக் கேட்பதென்றால் அனைவருக்குமே காலம் காலமாக ஒரே மகிழ்ச்சி தான்!

கம்பன் சீதையின் முழு அழகை வர்ணிக்க முடியாமல் திணறுகிறான். ஏன், சீதையின் முத்துமாலை அணிவதைக் கூடத் தன்னால் திறம்பட வர்ணிக்க முடியவில்லை என்று அவனே கூறுகிறான் இப்படி:-

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?

வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”

கோலங்காண் படலம் பாடல் 8

முத்துமாலை நட்சத்திரங்கள் கோர்த்த ஒன்றா! நகையில் நிலாத் தவழலா! மார்பில் தவழும் முத்து மாலையை என்ன சொல்லிப் புகல்வேன் நான்?”, என்கிறான் அவன்.

இராமன் வில்லை எடுத்து முறித்ததை அவன் சொல்லும் பாணி உலக இலக்கியத்தில் மிக்க ஏற்றம் பெற்ற தனி பாணி! (Unique style)

கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

 

கார்முகப்படலம் பாடல் 34

அவ்வளவு தான்! சிவ தனுசை எடுத்தது கண்டனர்; பிறகு இற்றது கேட்டனர்!!

இதே இப்படி என்றால் திருமணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறான் கம்பன்! அப்படித் தனக்குத் திறமை இல்லை என்று சொல்லி அவன் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்குத் தான் ரசிப்பதில் ரசனைத் திறமை இல்லை என்று நினைக்கத் தோன்றும்!!!

im159.guimet-D

கம்போடிய ராமாயண சிற்பங்கள், கெய்மே மியூசியம், பாரீஸ்

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாடலைப் பார்ப்போம்:-

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நால்மறை, ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன அண்டம்

கடிமணப் படலம் பாடல் 94

இப்படி ஒரு சில பாடல்களே மனதை மயக்குகிறது என்றால் முழு ராமாயணத்தையும் கேட்டால் நாம் சிறகடித்துப் பறக்க மாட்டோம்!

இராமாயணச் சாவடிகள்

காலம் காலமாக ராமாயணம் ஆங்காங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் ப்ரவசனகர்த்தாக்களால் சொல்லப்பட்டு வந்து கொண்டே இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள், நூல்கள், சுவடிகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. பல சாவடிகள் இதற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக மதுரையில் வடக்குமாசிவீதியில் இராமாயணச் சாவடி என்ற  ஒரு மண்டபத்தை இன்றும் காணலாம். இது போல நாடெங்கும் ஆயிரக்கணக்கில் மண்டபங்கள் உள்ளன.

இது தவிர கோவில்களில் உள்ள மண்டபங்களிலும், ஆற்றங்கரை மேடைகளிலும், இப்படி ராமன் கதை கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

சிப்பிக்குள் முத்து

இதைக் காட்சி அமைப்பாகக் கொண்ட ஒரு திரைப்படம் சிப்பிக்குள் முத்து. (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்). ஆடிஸத்தால் சற்று மனநலம் குன்றிய கமலஹாசன், அன்றைய கதாநாயகி ராதிகா ஆகியோர் நடித்து, தெலுங்கிலும் தமிழிலும் பெரும் வெற்றியைக் கொண்ட இந்தப் படம் வெளியான ஆண்டு 1986. படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்.

பாடலை இயற்றியவர் வைரமுத்து. பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்த மேடையில் கதாகாலக்ஷேபமாக ராமன் கதை பாடப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் ராம ஸ்தோத்திர வரிகளில் ஒன்றான “ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ” என்பதும் பாடலில் இடம் பெறுகிறது.

ராமனும், ராமபத்ரனும், ராமசந்திரனும் ஆகிய ராமனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகத்தின் பகுதி மந்திரமாகக் கருதப்படும் ஒன்று.

0603 (1)

கர்நாடாக மாநிலம், ராமாயண சிற்பங்கள்

ராமன் கதை கேளுங்கள்

கமலஹாசன் செருப்பைக் கையில் ஏந்தி வந்து கூட்டத்தில் ஒருவராக அமர்வதையும், இளம் விதவையான ராதிகா தன் குழந்தையுடன் அங்கு இருப்பதையும் சுவாரசியமாக பாகவதர் கதை கூற பக்க வாத்தியங்கள் முழங்க கிராம மக்களுக்கு ஏற்ப எளிய தமிழில் ராமாயணம் இசையுடன் வழங்கப்படுவதையும் காட்சி சித்தரிக்கிறது. நீண்ட கதையாக சொல்லப்படுவதால் பாடல் 6 நிமிடம் 31 வினாடிகள் நீடிக்கிறது!

பாடலைப் பார்ப்போம்:-

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்)

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,

ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,

வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க

ஶ்ரீ ராமசந்திர மூர்த்தி.. கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்

யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார் (புலிகளின்)

தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்

இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆஹா!

நடந்தாள் .. சீதை நடந்தாள்

விழி மலர்ந்தாள் .. சபை அளந்தாள்

வரவு கண்டு, அவள் அழகு கண்டு

சிவ தனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது! (ராமன் கதை)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது

உடைபட விழுந்தார் – சிலர் எழுந்தார்

தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட,

சட்டென்று பூமியில் விழுந்தார்

காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்

சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா (ஆஹா)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ

தசரத ராமன் தான் தாவி வந்தான்

வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்

மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட

ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு!

அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே

இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே (காண)

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

ஶ்ரீராமனே அதோ பாரப்பா.. ..

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீரகுராமன் கதை கேளுங்கள்!

தசரத ராமா! ஜனகன் உன் மாமா!!

“வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார்”, “தசரத ராமா, ஜனகன் உன் மாமா”, போன்ற சொற்றொடர்கள் கிராமத்தினரை மனம் மகிழ வைக்கும், இல்லையா! இளையராஜாவின் இசைத்திறனை கம்பனின் பாணியில் ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என்று சொல்லி விட வேண்டியது தான்!

ராமாயணத்தை, அதிலும் சீதா திருமணத்தைப் படம் தந்தது என்ற மகிழ்ச்சியில் அதைப் பாராட்டலாம் இல்லையா, நிச்சயமாக!

*******