
Compiled by london swaminathan
Date: 10 March 2016
Post No. 2617
Time uploaded in London :– 15-29
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
“ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம்; சாறு விடு!” என்ற பழமொழியை எனது பிளாக்கில், மார்ச் மாத காலண்டரில் படித்தவுடன் கும்பகோணம் பிராமணரிடம் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வந்தது:-
“ஒரு பிராமணன் வேறு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தான். நெடுந்தூர நடைப் பயணம். பசி, வயிற்றைக்கிள்ளி எடுத்தது. இரவு நேரம்; பொழுதும் சாய்ந்துவிட்டது. இனி இருட்டில் நடந்தால், மிருகங்களுக்கு இரையாவோம் என்ற அச்சம். அப்படி மிருகங்கள் கொல்லாவிட்டாலும் பசியே ஆளைக் கொன்றுவிடுமென்ற பேரச்சம்!.
தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அங்கே போய், கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அது பிராமணர் வீடு இல்லை என்பது நன்றாகத் தெரியும். உயிர் காக்க எதுவும் செய்யலாமே!
இன்னும் கொஞ்சம் நேரம் ஆயிற்று. குடிசைக்குள் பாத்திரங்கள் உருட்டும் சப்தம் கேட்டது. உள்ளே எட்டிப்பார்த்தான் பிராமணன். “என்ன சமையலா?” என்றான்.
“ஐயய்யோ சாமி! நீங்கள் இதெல்லாம் சாப்பிட மாட்டீர்கள். பெயர்கூட சொல்ல மாட்டோம்” – என்றாள் அந்த வீட்டு உத்தமி!

பிராமணன் வெளியே வந்தான். பசி, உயிரை வாட்டியது. மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தான். “நீங்கள் எது சமைத்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் சாதமோ அல்லது கூழோ கொடுங்கள்” என்றான்.
அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த கொஞ்சம் அரிசிச் சோற்றைப் போட்டர்கள். அது பிரமாணனின் ‘யானைப் பசிக்கு சோளப்பொரியாக’ அமைந்தது.
கேட்கவோ வெட்கம். “அந்தப் பாத்திரத்தில் என்ன?” என்று வெட்கமறியாது கேட்டபோது, “அது நண்டுக் குழம்பு என்றாள்” அவ்வீட்டுப் பெண்மணி. “பரவாயில்லை! பசி உடலை வாட்டுகிறது. கொஞ்சம் சாறு மட்டும் விடுங்கள்” என்றான். அந்த வீட்டு சத்தியவதி, பயந்துகொண்டே குழம்பை மட்டும் விட்டாள்.
ஐயர் பசி அடங்கவில்லை. உயிர் வாழ என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஆபத்துக்கு தோஷமில்லை என்று சாத்திரங்கள் சொல்லுவது நினைவுக்கு வந்தது. “இன்னும் கொஞ்சம் சாறு விடுங்கள்” என்று சொல்லி, நண்டுக் குழம்பைச் சாப்பீட்டார். இவர் மேலும் மேலும் “விடுங்கள் ஊற்றுங்கள்!” என்று சொன்னபோது அந்த அம்மணி, தவறுதலாக சில நண்டுகளையும் தட்டில் நழுவ விட்டு விட்டாள். மிகவும் பயந்தே போனாள்; அடக் கடவுளே, ஒரு பிராமணனுக்கு அபசாரம் செய்துவிட்டோமே! உபசாரம் செய்யாவிட்டாலும் அபசாரம் செய்யக்கூடாதே என்று முகத்தில் கைவைத்து மூடிக்கொண்டாள்.
பிராமணனோ, “தானாக (தான்+ ஆக) வந்த எதையும் வேண்டாம்” என்று சொல்லக்கூடாது. ஆகையால் தப்பில்லை என்று சொல்லி அதையும் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்து ஆற்று நீரில் மூழ்கி விட்டு வீடு திரும்பினான்.
ஐயர் சொன்ன ‘தான்’ என்பது சாம்பார், குழம்பில் உள்ள ‘தான்’களையும் (காய்கறிகளையும்) குறிக்கும். “அதுவாக வந்த” – என்ற பொருளையும் குறிக்கும்!
இது தான் “இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு” –என்ற பழமொழிக்குக் காரணமோ?
(இந்தக் கதை இந்தியத் திருநாட்டின் வடபகுதியிலும் வழங்கி வருகிறது)
–சுபம்–
You must be logged in to post a comment.