
Written by London swaminathan
Date: 21 August 2016
Time uploaded in London: 7-53 AM
Post No.3079
Pictures are taken from various sources; thanks for the pictures.
கம்ப ராமாயணம் ஒரு இனிய நீர் ஊற்று; தோண்டத் தோண்ட இனிய நீர் சுரக்கும். தொட்டனைத்தூறும் மணற் கேணி அது; படிக்கப் படிக்க கற்றனைத்தூறும் அறிவு.
சின்ன வயதில் எனக்கு ஒரு வியப்பு! நான் மதுரையில் வடக்கு மாசி வீதியில் யாதவர் (கோனார்கள் ) இடையே வாழ்ந்தேன். அந்தக் காலத்தில் மதுரையில் வைகை நதியில் தண்ணீர் ஓடும். ஆகையால் யாதவ இளைஞர்கள் தினமும் மாடுகளை எங்கள் தெரு வழியாக ஆற்றங்கரைக்கு நடத்திச் செல்லுவர். அந்த மாட்டுக் கூட்டம் வரும்போது வீட்டு வாசலில் உள்ள சைக்கிள், மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாக சுவற்றை ஒட்டி நிறுத்துவோம் அல்லது ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு இடிததுச் சென்று விடும். அந்த மாட்டுக் கூட்டம் வரும் முன்னே, “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளும் தகர டப்பிகளும் (ஏழைகளின் மணி!) சப்தம் போடும்.
அப்பொழுது ஒவ்வொரு மாடும் அதன் கன்றுடன் செல்லும். கூட்டத்தில் அது அது அதனதன் தாய்ப் பசுவுடன் செல்லும். நானோ பள்ளிக் கூடப் பையன். அட, எல்லா மாடுகளும் ஒரே மதிரியாக இருக்கிற தே, எல்லா கன்றுகளும் ஒரே மதிரியாகத் தெரிகின்றனவே. எப்படி அது அது அதனதன் தாயாரை அறிகிறது என்று வியந்து நிற்பேன்.

கம்பனும் இப்படி ஒரு காட்சியைக் கண்டான் போலும்! அவனது உவமைகளில் ஒன்று — “தாய்தன்னை அறியாத கன்று இல்லை”.
வேதத்திலும் தாய்ப் பசு -கன்றின் அன்பு அடிக்கடி உவமையாகக் கையாளப்படுகிறது. இந்துக்களின் மிகப்பெரிய கண்டு பிடிப்புகள் இரண்டு:
- காடுகளில் திரிந்த பல விலங்குகளில் மாட்டின் பால்தான் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கண்டுபிடித்து அதை நாட்டு விலங்காக மாற்றி (DOMESTICATION) உலகம் முழுதும் விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் கற்றுக் கொடுத்தான்.
- இரண்டாவது கண்டு பிடிப்பு– டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM (தசாம்ச முறை). இந்த இரண்டையும் இந்துக்கள் கற்பிக்காவிடில் உலகில் நாகரீகம் என்பதோ விஞ்ஞானம் என்பதோ வளர்ந்திரா. நிற்க.
கம்பன் உவமை நயத்தைக் காண்போம்:-
தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை அறியாத
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய
நீ அறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா
மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய்
பொருள்:–
“தலைவனே! பக்தர்களிடம் வருவதற்கு அரியவன்போல் தோன்றி, பிறகு எளிதாக வந்து காட்சி தரும் வல்லமை உள்ளவனே! தன்னைப் பெற்ற தாயைத் தெரிந்து கொள்ளாத கன்றுகள் இல்லை. தான் பெற்ற கன்றுகளை தாயும் அறிந்து கொள்ளும். உன்னிடமிருந்தே உலகம் தோன்றியதால் நீ உலகத்தின் தாயாக விளங்கி, எல்லாப் பொருள்களையும் அறிகிறாய். ஆனால் அப்பொருள்கள் எல்லாம் உனது தனிமையான நிலையை அறிய மாட்டா.”
எனது கருத்து:–
இதைப் படிக்கையில் பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த உண்மையும் நினைவுக்கு வருகிறது.
‘வாத்சல்யம்’ (தாய்ப் பசு – கன்று (வத்ஸ) இடையிலுள்ள அன்பும் நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொரு பசுவும் அதன் கன்றை அறியும். அது போல ஒவ்வொரு கன்றும் அதன் தாயை அறியும்.
இதே போல தாயாகிய இறைவனே நீ எங்கள் எல்லாரையும் அறிவாய். நாங்கள் உன்னை அறியும் பக்குவம் பெறவில்லையே. இது என்ன மாயமோ என்று கம்பன் வியக்கிறான்.
கன்று எப்படி தன் தாயை அறிகிறதோ அது போல நாமும் இறைவனை அறிய வேண்டுமானால் அது போலப் பாசம் (பக்தி) வேண்டும். இறைவனோ எப்போதுமே தாய்ப்பசு போல நம் மீது அன்பைப் பொழிந்துகொண்டிருக்கிறான்.
எது எப்படியாகிலும் வேதத்தில் காணும் இந்த உவமை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது சிறப்புடைத்து.
வேத கால உவமை சைவ சித்தாந்தத்துக்கும் வித்திட்டது!

இன்னும் வியப்பு நீங்கவில்லை
டெலிவிஷனில் இயற்கை பற்றி வரும் ‘டாகுமெண்டரி’களைப் (Documentary ) பார்ப்பேன். அதில் ஒன்று அண்டார்ட்டிகா என்னும் தென் துருவப் பகுதியில் வாழும் பெங்குவின் பறவைகளைப் பற்றியது. அவை கூட்டமாக வாழும். கூட்டம் என்றால் அப்படிப் பெரிய கூட்டம்! திருவிழாக் கூட்டம்!!! ஆண் பெங்குவின்கள், கடலில் குதித்து நீந்திவிட்டுக் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் திரும்பி வரும். ஒவ்வொன்றும் அதன் பெண்சாதியைக் கண்டுபிடித்து அதன் அருகி ல் போய் நிற்கும். குட்டிகளும் அதன் அருகே நிற்கும். இதைக் கண்டு எல்லோரும் வியப்பர். எப்படி பல்லாயிரம் பெங்குவின்கள் இடையே ஒவ்வொன்றும் தன் மனைவியைக் கண்டு பிடிக்கின்றன என்று. ஆக , கம்பனின் உவமையை இப்பொழுது நாம் பெக்குவினுக்கும் மாற்றலாம்!

–subham–
You must be logged in to post a comment.