மேடம் ப்ளாவட்ஸ்கி நிகழ்த்திய அற்புதங்கள்

secretdoctrineblavatsky

Written by S NAGARAJAN

Post No.2264

Date: 22 October 2015

Time uploaded in London: 9-02 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 blavatsky1

.நாகராஜன்

தியாஸபி இயக்கம்

தியாஸபி இயக்கம் பிரம்மாண்டமான ஒன்றாக 19ஆம் நூற்றாண்டில் உருவானதும் அதில் சென்னை முக்கியப் பங்கு ஆற்றியதும் வரலாறு நமக்குத் தரும் உண்மைகள்.

ஆவி உலக ஆராய்ச்சிகள், அதி தேவ புருஷர் தோற்றம் என்று பல்வேறு புதுச் செய்திகளை உலக மக்கள் சற்று அதிசயத்துடன் பார்த்தனர்.

மஹாகவி பாரதியார் தியாஸபியை கிண்டல் செய்தார். ஸ்வாமி விவேகானந்தரோ தியாஸபியை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விட்டார்.

எந்த ஒருவரை மிக பிரம்மாண்டமான நிலையில் தியாஸபி உட்கார வைத்ததோ அந்த மாபெரும் சிந்தனா புருஷர் ஜே கே (ஜே கிருஷ்ணமூர்த்தி) தியாஸபியைத் தாமே துறந்த போது, கடைசி மரண அடியாக அது அமைந்தது.

இருந்தாலும் வேகமாக அது வளர்ந்ததற்கான காரணம் மேடம் ப்ளாவட்ஸ்கியின் அற்புத ஆற்றல்கள்.

 670-Theosophical-Society

ப்ளாவட்ஸ்கியின் அற்புதங்கள்

சரித்திரத்தை அலசும் போது ஸ்காஃப் (Pskoff) என்ற நகரில் அவர் ஆற்றிய அற்புதங்கள் பின் வருமாறு குறிப்பிடப்படுகின்றன:

  • மனதில் நினைக்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான பதில்களை அவர் தந்தார். அதாவது தாட்ரீடிங் (thought reading) அவருக்குக் கை வந்த கலையாக இருந்தது
  • பல்வேறு வியாதிகளுக்கு லத்தீனில் மருந்துகள் எழுதித் தரப்பட்டு பின்னால் குணப்படுத்தப்பட்டன.
  • யாருக்கும் தெரியாத ரகசியங்கள், ஒருவரின் அந்தரங்க ரகசியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு சந்தேகங்கள் தவிடுபொடியாக்கப்பட்டன.
  • ஒரு நாற்காலி போன்ற சாமான்களின் எடை அல்லது நபர்களின் எடை ஆகியவற்றில் நினைத்தவுடன் மாறுதலை ஏற்பட வைத்தார்.
  • முன்பின் தெரியாதவரிடமிருந்து கடிதங்கள் பெற்று உடனடி பதில்களை அவர்களின் கேள்விகளுக்குத் தந்தார்.
  • நிகழ்வில் நேரடியாக ஒருவரின் பொருள்களை நகர்த்தினார்
  • தான் விரும்பிய இசை ஸ்வரங்களை வானில் ஒலிக்கச் செய்தார்.

 Theo-logo-400-g

செஸ் டேபிள் நிகழ்வு

ஸ்காஃப் நகரில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. அவரது மாமனார் யாஹோன்டோஃப் (Yahonotoffs) இல்லத்தில் நடந்தது அது.

மேடம் ப்ளாவட்ஸ்கியைப் பார்க்க ஏராளமானோர் வந்திருந்து ஹாலில் சேர்களில் அமர்ந்தனர். அவரது சகோதரர் லியோனைட் அவர்களைச் சுற்றி வந்து ஒரு இடத்தில் நின்றார். மீடியம்கள் ஒருவரின் எடையை அதிகமாக்கவும் குறைக்கவும் முடியும் என்று கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டி அவர், “நீ இது சரிதான் என்கிறாயா? உன்னால் அப்படிச் செய்ய முடியும் என்கிறாயா?” என்று கேட்டார்.

 

 

மீடியம்களால் நிச்சயம் செய்ய முடியும். சில சமயம் நானே அதைச் செய்திருக்கிறேன்என்றார் ப்ளாவட்ஸ்கி.

நீங்கள் இப்போது முயற்சி செய்ய முடியுமா?” என்றார் பார்வையாளர்களுள் ஒருவர்.

அனைவரும் அதை வேண்டவே, “நான் முயற்சி செய்து பார்க்கிறேன்என்றார் அவர்.

இதோ இந்த செஸ் டேபிளை தரையில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் இதை இப்போது தூக்கிப் பார்க்கலாம். அப்புறம் அதை நான் ஃபிக்ஸ் செய்கிறேன். பிறகு அதை யாராலும் தூக்க முடியாதுஎன்றார் அவர்.

 

 

 

அதை நீங்கள் தொடவே மாட்டீர்களா?” என்றார் ஒருவர்.

நான் ஏன் அதைத் தொட வேண்டும்?” என்றார் அவர்.

அவரது பேச்சைக் கேட்ட இளைஞர்களில் ஒருவர் அந்த செஸ் டேபிளை இறகு போலத் தூக்கினான்.

பின்னர் கீழே வைத்தான்.

 

 220px-TheSecretDoctrine

ஆல் ரைட்என்ற மேடம் இப்போது அந்த டேபிளின் மீது தன் அகன்ற நீல நிற விழிகளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். பின்னர் தன் பார்வையை அகற்றாமல் அந்த இளைஞனை சைகையால் அதைத் தூக்குமாறு பணித்தார். அவன் அந்த டேபிளை பழையபடி அலாக்காகத் தூக்க முயன்றான். முடியவில்லை. தன் பலம் முழுவதும் பிரயோகித்தான் முடியவில்லை. இரண்டு கைகளாலும் குனிந்தவாறு தூக்க முயன்றான். ஆனால் முடியாமல் முயற்சியில் தோற்றான்.

 

 

லியோனைட், “ஆஹா, இது நன்றாக இருக்கிறதேஎன்றார். ஆனால் அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது. அந்த இளைஞனும் தன் சகோதரியும் முன்னரே பேசி வைத்து இப்படி ஒரு டிராமா போடுகிறார்களோ!

 

 

திடீரென்று அவர், “நான் இதைத் தூக்கிப் பார்க்கிறேனே!” என்றார். அவர் செஸ் டேபிளைத் தூக்க முயன்றார். முழு பலத்தையும் பிரயோகித்தார், ஆனால் முடியவில்லை. வெறி வந்தது போல தன் மார்பை டேபிளின் மீது வைத்து தன் கைகளை அப்படியே டேபிளைச் சுழற்றி பலத்துடன் தூக்க முயன்றார். மூன்று கால்களுடன் கூடிய அந்த டேபிள் ஆடியது. மரம் நொறுங்கும் சப்தம் கேட்க கால்கள் முறியலாயின. ஆனால் டேபிளை அவரால் தூக்க முடியவில்லை.

 

 

தன் முயற்சியில் தோற்ற அவர், “HOW STRANGE’ என்று கூவினார்.

அந்த வார்த்தைகளையே மேடத்தின் வெற்றிக்கான அங்கீகாரமாக அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

 

 

ஒவ்வொருவராக இப்போது முன் வந்து டேபிளைத் தூக்கிப் பார்த்து அது பயன் தராது என்பதைத் தாமே தெரிந்து கொண்டு வியந்தனர்.

இதைத் தொடர்ந்து மேடம் பல்வேறு அற்புதங்களை அந்த நகரில் நிகழ்த்தவே நகரமே அவருக்கு அடிமையானது.

 

 

அபூர்வ சக்தி கொண்ட ஒருவராக உலகம் அவரைப் பார்க்க அவர் நிகழ்த்திய ஏராளமான நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன.

ஒரு கொலை கேஸில் குற்றவாளியைக் கூட அவர் கண்டு பிடித்தார்.

 மேடம் ப்ளாவட்ஸ்கியின் வாழ்க்கை சுவை நிரம்பிய ஒன்று. தியாஸபியின் வளர்ச்சி மற்றும் ஆவி உலக ஆராய்ச்சி ஆகியவற்றை அறிய விரும்புவோர் மேடம் ப்ளாவட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தே ஆக வேண்டும்!

 

*************