
Written by London swaminathan
Date: 10 December 2015
Post No. 2377
Time uploaded in London :– 9-10 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
வட நாட்டில் சிவ பெருமான் மீதும், ராமர், சீதாதேவி மீதும் அபார பக்தி இருக்கிறது. இதை அவர்கள் வணங்கும்விதத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். பல தமிழ் நாட்டுக் கோவில்களில் போலி பக்தர்களும் போலி பக்தியும் நிலவுகிறது. சடங்குகளும் அதிகம்- அதாவது தேங்காய், பழம், சூட தீபாராதனை என்று பற்பல. பட்டுப் புடவை உடுத்திய பெண்கள் ஒரு புறம்; மறுபுறம்;– கழுத்தில் கொட்டை, நெற்றியில் பட்டை, காலில் கட்டை, கையில் சட்டை!!
(கொட்டை= ருத்திராட்சம்; பட்டை= விபூதி அல்லது நாமம், கட்டை= சாமியார் செருப்பு, சட்டை= மேல் சட்டை)

நாங்கள் மும்பையில்ருந்து நாசிக் சென்றோம். அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இதற்கு முன் ராமேஸ்வரம், ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு ஜோதிர்லிங்க தலங்களைத்தான் பார்த்திருக்கிறேன்.
வெள்ளைக்காரந்தான் இந்நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று என் நண்பர்கள் பலர் பிதற்றுவர்/ உளறுவர். ஆனால் 51 சக்தி பீடங்களும், 108 வைஷ்ணவ திருப்பதிகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களும், ஆதி சங்கரரின் நான்கு மடங்களும் அகண்ட பாரதம் என்பதை நிரூபிக்கிறது. இதில் பல தலங்கள் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருப்பதால் அவைகளும் நம்முடையவையே. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பியர்களுக்கு தேசீயம் என்பதை சொல்லிக் கொடுத்த நாடே பாரதம்தான். ஏனெனில் கிரேக்க, ரோமானிய, எகிப்திய, சீன, சுமேரிய நாகரீகங்களில் இக்கொள்கை இல்லை.
இந்த தலங்கள் அனைத்துக்கும் மோடி அரசு தனித்தனியே தபால்தலை வெளியிட வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியக் கோவில்கள் இந்திய தபால்தலைகளில் இடம்பெற்றன. பின்னர் வந்த நேரு-காந்தி கொழ கொழா, வழ வழா ‘செக்யுலர்’ அரசு சொதப்பிவிட்டது. என்னுடைய தபால்தலை ஆல்பத்தில் உலக நாடுகள் ஆண்டுதோறும் வெளியிடும் கிறிஸ்துமஸ் தபால் தலைகள் உண்டு. முஸ்லீம் நாடுகள் வெளியிட்ட மசூதி, மெக்கா , காபா தபால்தலைகள் உண்டு. ஆனால் இந்துதபால்தலைகள் மிகக் குறைவு.
திரயம்பகேஸ்வரர் கோவில் கோதாவரி நதி தோன்றுமிடத்துக்கு அருகில் இருக்கிறது. அண்மையில் அங்கு கும்ப மேளா நடந்ததால், அப்போது போலீஸ்காரகள் வைத்த ஆயிரக்கணக்கான தடுப்புகள் சாலை ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

படம்:– கோவிலுக்கு வெளியே எல்லோருக்கும், அழகான திரிசூல முத்திரை வைக்கிறார்கள்!
கோவிலை நெருங்க, நெருங்க போன்களையும் காமெராக்களையும், செருப்புகளையும் இங்கே விட்டுச் செல்லுங்கள் என்று பல வணிகர்களும் அவர்களது ஏஜெண்டுகளும் வழிமறித்தனர். அவர்களில் ஒருவரை நம்பி எல்லாவற்றையும் விட்டுச் சென்றோம். எல்லாவற்றுக்கும் குறைந்தது பத்து ரூபாய் கட்டணம்! நம்முடைய மொபைல் நம்பர் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு ஒரு டோக்கன் தருகிறார்கள். (கோவிலுக்குள் மொபைல் போன்களை அனுமதிக்கக்கூடாது என்பதை நான் ஆதரிக்கிறேன்)
கோவிலுக்குச் சென்றவுடன் 200 ரூபாய் விஷேச தரிசன ‘கியூ’வுக்குச் சென்றோம். ஆனால் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொது பக்தர் வரிசையில் நின்றோம். ஆளுக்கு ஒரு பையில் பூ வாங்கிக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கிட்டத்தட்ட 20 வரிசைகள் இருந்தன. மக்கள் வேகமாக நகருவதைப் பார்த்து அதில் சேர்ந்தோம். மூன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் நின்றோம்! ஆயினும் பெரிய மின்னணுத் திரையில் சன்னிதியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டே நகரலாம்.

எனக்கு சிறு வயதில் என் தந்தை கற்றுக் கொடுத்த ஓம் திரயம்பகம் …… என்று துவங்கும் த்ரயம்பக மந்திரம் (யஜூர் வேத ருத்ரத்தில் ஒரு மந்திரம்) வேறு ஒரு திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு ஐடியா/ யோஜனை
நாம் எத்தனையாவது வரிசையில் நிற்கிறோம் என்பதை இலக்கமிட்டு, அவ்வப்பொழுது அறிவிக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் 20-ஆவது வரிசையில் இருந்தால் இன்னும் மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் இருப்பீர்கள் என்று அறிவிக்கலாம். வரிசைக்கு எண் குறித்து பெரிய ‘போர்ட்’ வைக்கலாம். திருப்பதியில் நாம் நிற்கும் ஷெட்டுகளின் எண் பெரிதாகத் தெரியும். இது தவிர இனிமையான, சன்னமான குரலில் ஏதேனும் பாடல்களை ஒலிபரப்பலாம். நல்ல வேளையாக ஆங்காங்கே தண்ணீர் குடிக்க, குழாய்கள் வைத்திருக்கிறார்கள்.
நாங்கள் சன்னிதியை நெருங்கும்போது மாலை நாலு மணி ஆகிவிட்டதால் 200 ரூபாய் வரிசையும் அதில் கலக்கத் துவங்கியது. இந்த இடத்தில் கோவில் நிர்வாகம் ஒரு கயிறு கட்டி இரண்டு வரிசைகளையும் ஏக காலத்தில் நகர்ந்து செல்ல வசதி செய்ய வேண்டும். ஏனெனில் அங்கு கொஞ்சம் தள்ளு முள்ளு இருந்தது. இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கொந்தளிப்பு இருக்கத்தானே செய்யும்!

ஒர் ஏமாற்றம்
நாங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்னர் ஒரு பெண்மணி எல்லா பூக்களையும் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு, பிரசாதம் என்று அதிலிருந்து இரண்டு பூக்களைக் கொடுத்தாள். இது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஒரு பூவையாவது, வில்வத்தையாவது எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வளவு பூவையும் அனுமதிக்க முடியாதுதான்.
சீரடி, திரயம்பகேஸ்வரம், மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் ஆகிய எல்லாவற்றிலும், அரை நிமிட தரிசனம்தான். அந்த அரை நிமிட நேரத்தில் கிடைக்கும் திருப்திக்காக மூன்று மணி நேரம் வரிசையில் நிற்பதால் நம் பாவங்களனைத்தும் கரைந்துவிடும்.
வெளியே வந்து “உடுப்பி” ஹோட்டலில் நுழைந்தோம். பெயர்தான் உடுப்பி. சாப்பாடோ கடுப்பு!
ஆனால் சீரடியில் கோவிலுக்கு எதிரேயிருந்த உடுப்பி ஹோட்டல் அருமையான கன்னட சாம்பார் சட்னியுடன் சுவையாக இருந்தது. வட நாட்டில் வடக்கத்திய சாப்பாட்டையும், தென்னாட்டில் தெற்கத்திய சாப்பாட்டையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம். ஆனால் நம் நாக்கு, அதை கேட்க மாட்டேன் என்கிறது!!!என்ன செய்ய?
சிவபெருமான், எப்பொழுதும் நீரில் இருக்க வேண்டும் என்னும் ஓர் ஐதீகம் இருப்பதால், பூசாரிகள் தண்ணீரை அபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். திங்கட் கிழமை தோறும் பல்லக்கில் ஒரு கவசம் எடுத்துவரப்படும் என்று படித்திருக்கிறேன். படத்தில் நாங்கள் கண்ட மும்முக கவசமாக இது இருக்கலாம்.

ஆமை மர்மம்!!!!!!!!!!!!!!!!!!!!!
திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது. உள்ளே பெரிய ஆமை உருவம் தரையில் சந்நிதிக்கு முன்னிருந்தது.
முன்னர் நான் எழுதிய கட்டுரைகளில் ஆமை மட்டும் எப்படி உலகில் அதிக நாள் வாழ்கிறது என்று சுவாசக் கணக்குப் போட்டுக் காட்டியிருந்தேன். அப்படிச் செய்தால் நாமும் 300 ஆண்டுகள் வாழலாம். இன்னொரு கட்டுரையில் திருச்செங்கோடு முதலிய இடங்களில் ஆமைமீது மண்டபம் இருப்பதையும், கேரள கோவில்களில் மட்டும் ஆமையின் முதுகின்மேல் த்வஜ ஸ்தம்பம் இருக்கும் மர்மம் பற்றியும் எழுதியிருந்தேன். ஆனால் நான் படித்த எந்த கோவில் , ஆகம புத்தகங்களிலும் இதற்கு விளக்கம் இல்லை!!!
சீனர்கள் ஆமை முதுகின் மேல் எழுதப்பட்டதாக நம்பும் மேஜிக் ஸ்கொயரை (எப்படிக் கூட்டினாலும் 15 எண் வரும் குபேர யந்திரம்) அதிர்ஷ்டகரமாகக் கருதுவதையும் எழுதியிருந்தேன். இதையெல்லாம் மனதிற்கொண்டு த்ரயம்பகேஸ்வரர் கோவிலில் பெரிய ஆமை உருவம் சிவனுக்கு முன்னர் வரையப்படிருப்பதையும் அது நந்தியின் ஸ்தானத்தை வகிப்பதையும் கண்டு வியந்தேன். இதை விட அதிசயம், பஞ்சவடியில் எல்லா கடைகளிலும் ஆமை படம் போட்ட “லக்கி” யந்திரங்கள் விற்பதையும் கண்டு அதிசயித்தேன். இதற்குப் பழைய இந்துமத நூல்களில் ஆதாரமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் கீதையிலும், குறளிலும் திருமந்திரத்திலும் வரும் ஆமையின் புலனடக்கப் பாடல்தான் (ஒருமையுள் ஆமை போல….)
தேவாரத்தில் சிவன் அணியும் பல பொருள்களில் ஆமை ஓடும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களில் கூர்ம அவதாரம் ஒன்று.
கோதவரியைக் காணோம்!
நாங்கள் கோவிலை விட்டு வெளியே வருகையில் அந்தி நேரம் நெருங்கியதால், கோதாவரி நதியின் தோற்றுவாய்க்குச் செல்ல முடியவில்லை. ஆனால் த்ரயம்பகேஸ்வரத்தில் கோதாவரி, வெறும் தேங்கி நிற்கும் தண்ணீராகவே காட்சி தந்தது. இயற்கை அன்பனான எனக்கு அது ஒரு ஏமாற்றமே. பஞ்சவடியிலுள்ள ஐந்து ஆலமரங்களை வெளிச்சத்தில் காணும் அவாவில் காரின் வேகத்தை அதிகப் படுத்தி சிட்டாகப் பறந்தோம் (பஞ்சவடி அற்புதங்களை அடுத்த கட்டுரையில் காண்க).
–சுபம்–
You must be logged in to post a comment.