

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9239
Date uploaded in London – –7 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 7-2-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை.
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் சொலி நின்று, பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கி, பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும், உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை, நெஞ்சமே”
வாழி திருமங்கை ஆழ்வார் திருநாமம்! ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் பிரசித்தமானதும், பக்தர்களால் பூலோக வைகுந்தம் என்று கொண்டாடப்படுவதுமான, திவ்ய க்ஷேத்திரமான திருப்பதி-திருமலை ஆகும்.
ஆந்திரபிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இது சென்னையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலும் ரேணிகுண்டாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இத்தலம் கிருத யுகத்தில் கருடாத்ரி என்றும் திரேதா யுகத்தில் விருஷபாத்ரி என்றும் துவாபர யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும் கலியுகத்தில் வேங்கடாத்ரி என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் யுகம் கடந்த பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இது என்பதை அறியலாம். வேங்கடம் என்றால் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்று பொருள். ஆகவே இங்குள்ள திருவேங்கடத்தானை தரிசித்த கணத்திலேயே பாவங்கள் சுட்டெரிக்கப்படும். திருமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள மூலவர் திருவேங்கடமுடையான் என்று பக்தர்கள் போற்றி வணங்கும் ஸ்ரீநிவாசன் ஆவார். நின்ற திருக்கோலத்தில் இவர் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். தாயார் பெயர் அலர்மேல் மங்கை, பத்மாவதித் தாயார்.
இங்குள்ள விமானம் ஆனந்த நிலய விமானம் ஆகும். இந்தத் தலத்தைப் பற்றி ஸ்கந்த புராணம், பத்ம புராணம் உள்ளிட்ட ஏராளமான புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் பல குறிப்புகளையும் வரலாறுகளையும் காண்கிறோம். ராமாவதாரத்தின் போது வேதவதியாகப் பிறந்த பெண் அவரை மணக்க விரும்பி தவம் செய்த போது, ராமர் ஏகபத்னி விரதம் கொண்ட காரணத்தினால், அடுத்த பிறவியில் உன்னை மணக்கிறேன் என்று அருள் பாலித்தார். அந்த வேதவதி கலியுகத்தில், சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன், புத்திரப் பேறு வேண்டி செய்த யாகத்தில், ஒரு பெண் மகவாகத் தோன்றி வளர்ந்து வந்தாள் என்றும் ஸ்ரீநிவாசன் அவரை மணந்தார் என்றும் புராண வரலாற்றில் காண்கிறோம். வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷணை வதம் செய்த பின்னர், இங்கு வந்து ஓய்வெடுத்தபடியால், இது ஆதிவராஹக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திருமலையில் ஸ்ரீநிவாசன் தானே விரும்பி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து குடியிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பது புராணச் செய்தி. கீழ்த்திருப்பதியில் பத்மாவதி தாயாரின் திருக்கோவில் அமைந்துள்ளது. இவரை தரிசித்து விட்டு, இங்கிருந்து திருமலைக் கோவிலுக்குச் செல்ல வேண்டுமானால் ஏழுமலைகளைத் தாண்டியாக வேண்டும். அதனால் தான் பெருமானுக்கு ஏழுமலையான் என்று பெயர் ஏற்பட்டது. ரிஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, நாராயணாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படும் ஏழு மலைகளும் ஏழுதலை கொண்ட ஆதிசேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பு. மலைப் பாதையில் ஏறிச் சென்று வழிபடுவதை தொன்று தொட்டு பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது வாகன வசதிகள் உண்டு.
கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. வெளியில் உள்ள முதல் பிரகார பிரதட்சிணத்தை சம்பங்கி பிரதட்சிணம் என்றும் இரண்டாவது பிரகாரத்தைச் சுற்றி வருவது விமான பிரதட்சிணம் என்றும், மூன்றாவது பிரகாரத்தின் பிரதட்சிணம் வைகுண்ட பிரதட்சிணம் என்றும் பெயர் கொண்டுள்ளன. தங்கத் தட்டால் வேயப்பட்ட த்வஜ ஸ்தம்பம் முதல் பிரகாரத்தில் உள்ளது. கர்பக்ரஹ நுழைவாயில் தங்கத்தால் வேயப்பட்டுள்ளதால் இது பங்காரு வாஹினி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தங்களின் மஹிமை எல்லையற்ற ஒன்றாகும். பாபவிநாசன தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம்,பாண்டவ தீர்த்தம், சக்ர தீர்த்தம், ஜாபாலி தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதார தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம் ஆகியவை இயற்கை வனப்புடன் கூடிய பகுதிகளில் அமைந்துள்ளன; பக்தர்கள் இங்கு நீராடி பெரும் புண்ணியம் அடைகின்றனர். ஒவ்வொன்றும் தனித் தனி சிறப்பான வரலாற்றைக் கொண்டவை.
இங்குள்ள கர்பக்ருஹத்தில் எரிகின்ற விளக்குகள் அணையா விளக்குகளாகக் காலம் கடந்து பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சுடர் விட்டு எரிவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். எத்தனை முறை தரிசனம் செய்தாலும் இன்னும் ஒரு முறை, இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்துடனேயே சர்வாலங்கார பூஷிதரான ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள், அங்கிருந்து நகர்வது, இன்றும் யாவரும் காணும் ஒரு காட்சியே. தரிசனம் முடிந்தவுடன் திருப்பதிக்கே உரிய, காப்புரிமை பெற்ற, விசேஷமான முறையில் தயாரிக்கப்பட்ட, லட்டு பிரசாதத்தைப் பெற்று பக்தர்கள் மனம் மகிழ்வது இந்தத் தலத்தின் இன்னொரு தனிச் சிறப்பாகும்.

திருப்பதியில் தின உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம் என ஏராளமான உற்சவங்கள் உண்டு. சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமால சேவை, ஸர்வ தரிசனம், ஏகாந்த சேவை, வஸந்தோத்ஸவம், ப்ரஹ்மோத்ஸவம், கல்யாண உத்சவம் உள்ளிட்ட ஏராளமான சேவை மற்றும் உற்சவங்களைப் பற்றிய விவரங்களை அவ்வப்பொழுது அறிந்து கொண்டு அதற்கேற்ப நமது யாத்திரையை மேற்கொள்ளல் வேண்டும்.
பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என பதினோரு ஆழ்வார்கள் 203 பாசுரங்களை அருளியுள்ள தலம் இது. காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் பத்மாவதி தாயாரும் திருவேங்கடத்தானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். ச்ரிய காந்தாய கல்யாணநிதயே நிதயேதினாம் |
ஸ்ரீவேங்கடநிவாஸாய ஸ்ரீநிவாசாய மங்களம் || நன்றி வணக்கம்.

tags -திருப்பதி,திருமலை, ஆலயம்,



















