
Post No. 8277
Date uploaded in London – – –3 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்!
ச.நாகராஜன்

தமிழுக்குப் பெருமை தரும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியவர் அருணகிரிநாதர். நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1324 பாடல்கள்!
சொல்லழகும் பொருளழகும் கூடிய பக்திச் சுவை நனி ததும்பத் ததும்பப் பாடும் வல்லமை படைத்தவர் அவர்.
நாற்கவிராஜர் என்று அவரைப் போற்றுவர்.
பல்லாயிரக் கணக்கில் பாடல்களைப் பாடியவர் ஆதலின் இவர் வித்தார கவி ஆவார்.
இனிமையான ஓசை இன்பத்தை நல்ல பொருளுடன் தரும் பாடல்களை அருளியவர் என்பதால் இவர் மதுர கவி ஆவார்.
வியக்க வைக்கும் வெவ்வெறு விசித்திரக் கவிகளைப் புனைந்தவர் ஆதலின் இவர் சித்ர கவி ஆவார்.
எந்த ஒரு ஓலைச் சுவடியையும் எழுத்தாணியையும் கையில் வைத்துக் கொண்டு யோசித்து, யோசித்துப் பாடாமல் நினைத்த இடத்தில் சொல்லழகும் பொருளழகும் கூடிய, ஆழ்ந்த கருத்து அமைந்துள்ள பாடல்களைப் பாடியவர் ஆதலின் இவர் ஆசு கவி ஆவார்.
ஆக இப்படி நால்வகைக் கவிகளிலும் சிறப்புற விளங்கியதாலும் இவர் வாக்கு தனித்துவம் பெற்றதாலும் ‘வாக்குக்கு அருணகிரி’ என்று போற்றும் பெருமையைப் பெற்றார்.
அத்துடன் இவர் பல்வேறு மொழிகளில் வல்லுநர் என்பதை அஷ்டபாஷா பரமேஸ்வரர் என்ற இவரது பெயரால் அறியலாம். அஷ்ட பாஷா என்றால் எட்டு மொழி என்பது பொருள்.(பல மொழிகளில் விற்பன்னர் என்று பொருள் கொள்ள வேண்டும்)
அத்துடன் சார்வ பௌமடிண்டிய கவி என்ற பட்டப் பெயராலும் இவரது கவித்திறன் தனித் தன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.
ஏராளமான இடங்களில் முருகனிடம் நல்ல தமிழ் பாடும் வல்லமையைத் தாராய் என வேண்டுவதைப் பார்க்கலாம்.

“நிதி பொங்கப் பல தவங்களாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்”
(மதியஞ்சத் திரு எனத் தொடங்கும் திருப்புகழ்)
“மதுரகவி யடைவு பாடி வீடறிவு
முதிர அரிய தமிழோசையாகவொளி
வசனமுடைய வழிபாடு சேருமருள் தந்திடாதோ”
(இலகு குழை எனத் தொடங்கும் திருப்புகழ்)
இப்படிப் பல இடங்களில் தங்கம் நிகர் சந்தத் தமிழை வேண்டுகிறார் அவர்.
சித்திர கவிகளில் கரந்துறை கவியாக அமையும் மூன்று திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
அவற்றுள் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்:
ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனித் திருத்தலத்தில் அவர் அருளிய பாடல் இது.
பாடல்
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் …… மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் …… மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு …… அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு …… முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு …… முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி …… வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் …… குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய …. பெருமாளே.
பாடலின் பொருள் : கரும்பு வில்லில் வாசனை உடைய மலர் அம்புகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல கடைக் கண் பார்வையுடன் சிரித்தவாறே நெருங்கி தங்கள் எண்ணத்தினால் தந்திரமான செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின்,
கோபமுள்ள யானையும் கூடத் திடுக்கிடும்படியான செழிப்புற்ற மலை போல் பருத்துள்ள இரு மார்பகங்களைக் கலக்க விழையும் மோக வெறியில் மயங்காமல்,
மனமானது ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் எனது மனதில் உண்டாகும்படி உனது திருவுள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உனைப் புகழ்ந்து பாடும் என்னை புவியில் ஒரு நிகரிலாப் புலவனாக ஆக்கும் வகையை உனது திருவருளால்,
ருத்திரனும் கூட விளக்கம் உற, எனக்கு அனுக்கிரகம் செய் என்று உன்னை அணுகிக் கேட்க, நீ உபதேசித்த அந்தமறையின் உறு பொருளான பிரணவ ரகசியத்தை அடியேனுக்கும் உணர்த்தும் வகையில் வரும் நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ?
கிரௌஞ்ச மலையையும் பெரும் அரக்கர்களையும் ஒலித்து எழும் பூமியில் உள்ள எழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருத்த தோகைமயிலில் மீது வரும் முருகோனே
பதித்த மரகதத்துடன் ரத்தினமணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பல ஆபரணங்களை அணிந்துள்ள மலை போலும் பன்னிரெண்டு தோள்களை உடையவனே, பரக்கவே இயல் தமிழ் தெரிந்த வயலூரானே,
திருப்புகழை உரைப்பவர்கள் மற்றும் படிப்பவர்களுடைய வறுமையையும் பகைமையையும் தொலைத்து வெற்றி அருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய மாதவம் புரிவோர் புகழும் குருநாதா,
வில் ஏந்திய குறவர் தம் ஓலைக் குடிசையிலும் புகை போன்ற கரும் மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லும் அழகிய பழனியில் உறைகின்ற திருக்கையில் வேல் ஏந்திய அழகிய பெருமாளே.
இப்படிப்பட்ட அழகிய பொருள் வளம் நிறைந்த இந்தப் பாடலில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் வரியை மட்டும் சேர்த்துப் பார்த்தால் அது ஒரு தனித் திருப்புகழாக அமையும்.

கருத்தினால் விரகு செய் மடமாதர்
கலக்கு மோகனமதில் மருளாதே
ஒருத்தனாம் வகைதிரு வருளாலே
உணர்த்து நானடிமையு முடையேனோ
பருத்த தோகையில் வரு முருகோனே
பரக்கவே இயல் தெரி வயலூரா
திருத்த மாதவர் புகழ் குருநாதா
திருக்கை வேல் அழகிய பெருமாளே!
எப்படி ஒரு அழகிய திருப்புகழ் அமைகிறது! திருப்புகழினுள் ஒரு திருப்புகழ்!!
இதை கரந்துறைப் பாடல் என்பர்.
வாழ்க திருப்புகழ்! வளர்க சித்திரத் தமிழ்!!
குறிப்பு : 29-2-2020 அன்று வெளியான கட்டுரை “ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி”யை- (திரிபங்கி வெண்பாவை) –– நினைவு கூர்ந்தால்
(கட்டுரை எண் 7633) சித்திர கவியின் அருமை தெரிய வரும்!
tags இரு ,திருப்புகழ் பாடல்கள்,
***