
Written by London swaminathan
Date: 24 December 2016
Time uploaded in London:- 5-59 AM
Post No.3478
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்: சிவ பெருமானே உன்னை இந்திரனாலும் கண்டு கொள்ள முடியவில்லையே! என்று.
தேவர் கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன்
பாடல் 30, திருச்சதகம்
இன்னொரு பாட்டிலும் இதே கருத்தை முன்வைக்கிறார்
மேலை வானவரும் அறியாததோர் கோலமே யெனை ஆட்கொண்ட கூத்தனே — பாடல 43, திருச்சதகம்
தேவர் கோ= தேவர்களுக்கு அரசனான இந்திரன்; வானவர்=தேவர்கள்
அது என்ன கதை?

இந்திரன் தலைமையிலுள்ள தேவர்கள் ஒருமுறை அசுரர்களை வென்றவுடன் தலைக் கனம் ஏறிவிட்டது. ஆண்டவன் அருளால் கிடைத்த வெற்றியைத் தாங்களே போராடிக் கிடைத்த வெற்றி என்று யான், எனது என்னும் செருக்கில் (அஹங்காரம் – யான், மமகாரம்/மமதை=எனது) மிதந்தார்கள் இவர்களுடைய இறுமாப்பை வெட்டி வீழ்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் ஒரு யக்ஷனாகத் தோன்றினார். யக்ஷன் என்பது மரங்களில் வாழும் பேய். ஒரு பெரிய ஆசனத்தில் உடகார்ந்தார். அது இந்திரலோகத்தில் இந்திரன் அமரும் ஆசானத்தைவிடப் பெரியது. இந்திரனுக்கு யார் இந்த ஆள் என்று தெரியவில்லை. உடனே அக்னியை அழைத்து, நீ போய் யார்? என்ன? என்று விசாரித்து வா ஏன்று அனுப்பினான்.
அக்னி போய் கேள்வி மேல் கேள்வி கேட்ட உடனே யக்ஷன் கேட்டான்:
நீ யார்?
நானா? நாந்தான் அக்னி/நெருப்பு; எதையும் எரிக்கும் வல்லமை படைத்தவன்.
யக்ஷன் சிரித்துக்கொண்டே, அப்படியா? இதோ ஒரு துரும்பு; இதை எரித்துக்காட்டு என்றான்
அக்னி எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே இந்திரனிடம் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிட்டான்.
இந்திரன் வியப்புற்று, அப்படியா சேதி? என்று சொல்லி வருண பகவானை அழைத்தான். அவன் அங்கே சென்றபோது அந்த யக்ஷன், துரும்பை நனைக்க முடியுமா என்று கேட்டான். வருணன் சிரித்துக் கொண்டே துரும்பின் மீது மழையைக் கொட்டுவிப்போம் என்று சங்கல்பித்தான். ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீரும் விழவில்லை. அவன் பயந்துபோய் இந்திரனிடம் சொல்லவே வாயு பகவனை அனுப்பினான். அவனும் எதையும் நகர்த்த சக்தி இல்லாதவனாக திரும்பி வந்தான்.

உடனே இந்திரன் நான் போய் என் வலைமையைக் காட்டுவேன் என்று புறப்பட்டான். முதலில் யக்ஷனைப் பார்த்து யார் என்று கேட்டான. உடனே யக்ஷன் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை வழிபட்டு பெரும்பேறு பெற்றான் என்ற கதை கேனோபநிஷத்தில் இருக்கிறது. இது சிவ பெருமானே முழுமுதற் கடவுள் என்பதைக் காட்டும் கதை ஆகும்.
இப்போது திருவாசகப் பாடலைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்:-
மேலை வானவரும் அறியாததோர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும்பே வந்து போங்
காலமேயுனை என்று கொல் காண்பதே (43)
பொருள்:-
மேலான பதவிகளில் உள்ள தேவர்களும் அறிய முடியாத ஒப்பற்ற திருவுருவே! அடியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி ஆட்கொண்டவனே! மண்ணும் விண்ணும் தோன்றி அழிதற்குக் காரணமான கால வடிவானவனே! உன்னை நான் காண்பது எப்போது?
தேவர் கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்
யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு
மேன்மேலுலுங் குடைந்தாடி யாடுவோமே
பாடல் 30, திருச்சதகம்
பொருள்:-
தேவர்களின் அரசனான இந்திரனும் அறியப்படாத தேவ தேவனும், செழுமையான உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவர்க்கும் தலைவனாய் நிற்கும் முதற்பொருளும், அம்மூவர் வடிவும் தன் மேனியில் கொண்டவனும், அவர்கட்கு மூதாதையும், உமாதேவியை இடப்பக்கத்தில் வைத்தாடும் எந்தையும் யாவர்க்கும் தலவனாக இருப்பவன் சிவன்; அவன் அடியேனையும் வலிய வந்து ஆட்கொண்டான். ஆகையால் நாம் எவர்க்கும் அடிமையல்ல; எவர்க்கும் அஞ்சோம்; அவனுடைய அடியார்க்கும் அடியார் ஆவோம்; மேலும் மேலும் இந்த ஆனந்த வெள்ளத்துள் மூழ்கிக் குடைந்தாடுவோம்.

(இந்தப் பாட்டிலுள்ள வரிகளை அப்பரும் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற பாட்டில் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது. அப்பர் தேவாரத்தில் மாணிக்க வாசகரின் தாக்கத்தை தனி ஒரு கட்டுரையில் காண்போம்.)
–சுபம்–