ரகுராமன், ராஜாராமன், சிவராமன், சீதாராமன், ஜெயராமன், ஜானகிராமன்,வெங்கடராமன்….

எழுதியவர் –Santanam Nagarajan

கட்டுரை எண்: 1694 தேதி 6 மார்ச் 2015

rama beauty

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 8

ச.நாகராஜன்

சீதைக்கேற்ற ராமனோ!

அம்பிகையின் கேள்வி

கோடானுகோடி பிரம்மாண்டங்களைப் படைத்துக் காக்கும் அம்பிகைக்கு ஒரு பெரிய கவலை – தான் படைத்துக் காக்கும் இந்த மனிதர்கள் எப்போது கடைத்தேறப் போகிறார்கள்!  உள்ளம் கருணையினால் ததும்ப சிவபிரானை நோக்கி அம்பிகை இந்தக் கேள்வியைக் கேட்க சிவபிரானோ புன்முறுவலுடன் அது தான் விஷ்ணுவைத் துதிக்கும் ஆயிரம் நாமங்கள் உள்ளனவே, அதைச் சொன்னால் சம்சார சாகரத்தைக் கடந்து விடலாமே என்கிறார். ஆயிரம் நாமங்களையா? இருக்கின்ற கொஞ்ச நேரத்தில் சுயமாக உருவாக்கிக் கொண்ட தமது பிரச்சினைகளையே இவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை, எப்படி ஆயிரம் நாமங்களைச் சொல்வதாம்! அம்பிகை கவலை மிகக் கொண்டு சிவபிரானை நோக்கிக் கேட்கிறாள்:

“கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் I

பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ II”

“ப்ரபோ! பண்டிதர்கள் சொல்லும் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்ல லகுவான வழி ஒன்று இருக்கிறதா? அதைக் கேட்க எனக்கு விருப்பமாக உள்ளது!”

என்று இவ்வாறு அம்பிகை லகுவான உபாயத்தை கேட்க சிவபிரான் அதற்கான இரகசியத்தை இப்படி அருளுகிறார்:-

“ஶ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே I

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே II”

ஆயிரம் நாமங்களுக்குச் சமமான ராம நாமத்தைச் சொன்னாலே, போதுமே – இது சிவனாரின் அருளுரை. மானுடர் அனைவருக்கும் லகுவான ஒரு உபாயத்தைக் காண்பித்து விட்ட திருப்தி அன்னைக்கு!

 rama with anuman

எங்கும் ராமர்; எதிலும் ராமர்

  இந்த அன்னையின் ஆணையை ஏற்றுக் கொண்ட பாரத தேச மக்கள் தொன்று தொட்டு இந்த இரு எழுத்துக்களைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ராமர் கோயிலைக் கட்டுகின்றனர்; பிறக்கும் பிள்ளைகளுக்கு ராமர் பெயரை வைக்கின்றனர். முடிந்த வழிகளில் எல்லாம் ராமரை நினைக்க வழி செய்து கொள்கின்றனர்!

பெயர்களில் தான் எத்தனை ராமர்!

ரகுராமன், ராஜாராமன், கோதண்டராமன், சீதாராமன், சிவராமன், ஜானகிராமன், ஆத்மாராமன், ஶ்ரீராமன், வெங்கடராமன்,சங்கரராமன், சாந்தாராம், ஹரிராம், விஷ்ணுராம், மாதவராம், கேசவ் ராம், கோவிந்தராம்,கோபால்ராம், விநாயக்ராம், சகாராம்,கல்யானராமன், ஜெயராமன், செண்பகராமன், சேதுராமன்,முரளிராமன், ராமலக்ஷ்மி, ராமராஜன், ராமசுப்ரமணியன், ராமசந்திரன், ராமகோபாலன், ராமமகிருஷ்ணன்,ராமேசன்,ராமசேஷன், ராமகூலம், சிவராம கிருஷ்ணன்,சங்கர ராமலிங்கம் .இப்படி ராமனை முதலிலும் இடையிலும், பின்னும் கொண்டுள்ள பெயர்களுக்கு முடிவே இல்லை! இப்படி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் பெயர்களை அழைக்கும் போதெல்லாம் ராம நாமம் சொல்லும் பாக்கியம் கிட்டட்டும் என்பதாலேயே நம் முன்னோர் இப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாக ராமரைப் பெயரில் அமைக்கலாயினர்!

ஆக இந்த ராமனை திரைப்படப் பாத்திரங்களில் ஆயிரக்கணக்கானோருக்குச் சூட்டுவது இயல்பு தான்! இதைக் கணக்கெடுக்கவும் முடியாது; தேவை யுமில்லை1

 ram gambira

இதே பாரம்பரியத்தைப் பாடல்களிலும் திரையிசைக் கவிஞர்கள் கடைப் பிடித்தனர். இதில் அவர்களுக்கு பெருத்த லாபம் ஒன்று இருந்தது. ராமர், சீதா, லக்ஷ்மணன், பரதன் என்று சொற்களை அமைத்து விட்டால் ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியப் பின்னணியைக் கொண்டு, சொல்ல வேண்டிய விஷயத்தையும்  சுலபமாக அவர்களால் சொல்லி விட முடிகிறது.காதல், நட்பு, அரசாட்சி, அறத்தை வெல்லுதல், தந்தை தாய் சொல்லைக் கடைப்பிடித்தல், வீரம், ஈகை போன்ற குணங்களைச் சுட்டிக் காட்டல், இப்படி எதை எடுத்தாலும் ராமாயணம் நமக்கு உதவும். ஏன், எதிர்மறை குணங்களான வஞ்சகப் பேராசைக்கு ஒரு கைகேயி, சூழ்ச்சிக்கு ஒரு கூனி, தகாத காமத்திற்கு ஒரு சூர்ப்பநகை, ஆணவம், சர்வாதிகாரத்திற்கு ஒரு ராவணன் என்று கூடாத விஷயங்களைச் சுட்டிக் காட்டவும் ராமாயணமே போதும்!

 இந்த வகையில் ராமரை எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது ஒரு சுவையான விஷயம். நெகடிவ் பாத்திரங்களாக இருக்கும் சூர்ப்பநகை, ராவணன், கும்பகர்ணன் கூட பாடல்களிலும், நகைச்சுவை உரையாடல்களிலும் இடம் பெற்று வந்து கொண்டே இருந்ததையும் நீண்ட காலத் தமிழ் திரைப்பட வரலாறு சுட்டிக்காட்டுவதைப் பார்க்கலாம்!

ராமர் எப்படியெல்லாம் பாடல்களில் பயன்படுத்தப்பட்டார் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

 rama,sarathy bhattar

எதிர்காலக் கணவனைக் கற்பனையில் காண – ராமர்!

1962ஆம் ஆண்டு ஶ்ரீதர் இயக்கத்தில் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் எஸ்.ஜானகி பாடும் பாடலுக்கான கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை:-

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ

அழகுக் கோட்டைக் கேற்ற காவலன் யாரோ

காதலிப்பவனோ அதில் பேர் எடுப்பவனோ

கண்ணிரண்டில் பெண்ணைக் கைது செய்பவனோ

ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ

இல்லை, ஆசை தீரும்போது நெஞ்சம் மாறுகின்றவனோ – ராதைக்கேற்ற

17 மொழிகளில் பாடி சாதனை படைத்துள்ள எஸ்.ஜானகியின் இன்குரலில் இந்தப் பாடலை இன்றும் கேட்போர் ஏராளம். படத்தில் நடிகை தேவிகா இந்தப் பாடலைப் பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. ‘உனது வரும் காலக் கணவர் ராமர் போல இருப்பாரா’ என்ற கேள்வியைக் கொண்டுள்ள இந்தப் பாடலில் ராமரைத் திரைப்படம் கையாளும் ஒரு அம்சத்தைப் பார்க்கலாம்!

*************

swami_48@yahoo.com