![]() WRITTEN BY R. NANJAPPA Post No.7888 Date uploaded in London – – 27 April 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. ஹிந்தி படப் பாடல்கள்-19 – திரை இசைக்கு அநீதி? R.Nanjppa திரை இசைக்கு அநீதி? ரேடியோ ஒலிபரப்பு வந்த பிறகு இசையை மக்களிடையே கொண்டு செல்ல வானொலி சிறந்த சாதனமாக அமைந்தது. 50களில் நமது சினிமா இசை தரத்தில், வீச்சில் உயர்ந்திருந்தது பொதுவாக 80% மேல் மரபு வழி இசையின் அடிப்படையில் அமைத்த பாடல்கள், நல்ல கருத்துள்ள கவிதைப் பாடல்கள் எனப் பலவகையிலும் திரை இசை சிறந்திருந்தது. குரல்வளம் மிக்க பாடக -பாடகிகள். வாத்திய இசை விற்பன்னர்கள், ஜீனியஸ் இசைஞர்கள் – என திரை இசைத்துறை திறமை மிக்கவர்களால் நிறைந்திருந்தது. ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்திருந்த பல உஸ்தாதுகளும் பண்டிட்களும் திரை இசைக்கு இசைந்து வந்தனர். பீம்ஸேன் ஜோஷி பஸந்த் பஹார் படத்தில் பாடியிருக்கிறார், பிஸ்மில்லா கான் ஷெனாய் வாசித்திருக்கிறார். அப்துல் ஹலீம் ஜாஃபர் கான் ஸிதார் வாசித்திருக்கிறார். அலி அக்பர் கான் ஸரோட் வாசித்திருக்கிறார் அமீர்கான் சில படங்களில் சாஸ்திரீய இசை வழங்கியிருக்கிறார்.. [இந்த அலி அக்பர் கான் விஷயம் அன்று இருந்த தரத்தைக் காட்டும். இவரை ஒரு படத்திற்கு ஸரோட் வாசிக்க ஷங்கர்-ஜெய்கிஷன் அழைத்தனர். உங்களுக்கு ஸரோட் இசை பற்றி என்ன தெரியும் என்று கேட்டார் கான் ஸாஹிப். ஷங்கர் சரோட் வாசித்துக் காட்டினார்! அவருக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் கான் வாசிக்க ஒப்புக்கொண்டார்! ஷங்கர் பல வாத்யங்களில் தேர்ந்தவர்] இருந்தாலும் நமது அரசு திரை இசைக்கு அநீதி செய்தது எனத் தோன்றுகிறது. அப்போது ( 1952-62) தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் பி.வி கேஸ்கர். இவர் பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். அதற்கு ஒவ்வாதது என்று கருதிய அம்சங்களை அகில இந்திய ரேடியோவில் அனுமதிக்க வில்லை, ஹார்மோனியம் கூட தடுக்கப்பட்டது, சினிமா இசை தரம் தாழ்ந்தது, அது மக்களின் ரசனையைத் தாழ்த்தும், நமது பாரம்பரிய இசைக்கும் பண்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என உறுதியாக நம்பினார். அதனால் ஆல் இந்தியா ரேடியோ திரை இசையை ஒலிபரப்புவதைத் தடை செய்தார்! (கிரிக்கெட் காமென்டரியும் தடை செய்யப்பட்டது!) என்ன கொடுமை , பாருங்கள்! அன்று 80% சினிமா இசை நமது பாரம்பரிய இசையின் அஸ்திவாரத்தில் எழுந்தது தான்- இது ஏனோ கேஸ்கருக்குப் புரியாமல் போனது ! இந்த சமயத்தில் ரேடியோ சிலோன் எழுந்தது! நமது சினிமா பாடல்களை அவர்கள் ஒலி பரப்பத் தொடங்கினார்கள், மக்களிடையே அபரிமித ஆதரவும் பெற்றார்கள். இந்திய சினிமா பாடல்களை ரேடியோ சிலோனில் கேட்க வேண்டும்! -என்ன அவல நிலை! இதை உணர்ந்துகொண்ட அரசு 1957ல் “விவித் பாரதியை”த் தொடங்கினர். ஆனால் ரேடியோ சிலோன் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அகில இந்தியாவையும் கவர்ந்த “பினாகா கீத் மாலா” போன்ற சூபர் ஹிட் நிகழ்ச்சி ஒன்றைக்கூடத் தரமுடியவில்லை. பிற அரசுத்துறைகளைப் போலவே சுரத்தில்லாமல், மக்கள் தொடர்பு இல்லாமல் அதிகார நோக்கிலேயே இயங்கியது விவித் பாரதி. ரேடியோ சிலோனில் கோபால் ஷர்மா, தரம் தில்லன், மஹாஜன் போன்றவர்கள் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும், சினேகத் தன்மை இருக்கும். நமக்கு மிக வேண்டியவர்கள் பேசுவது போலவே இருக்கும். There would be a personal touch., a sense of intimacy. அதிகாரத் திமிரில் ஊறிய ஆல் இந்தியா ரேடியோவில் இதை எதிர்பார்க்கலாமா? இன்று இன்டர்நெட், யூடியூப் இருப்பதால் எவர் தயவும் இல்லாமல் நம் பொற்காலத்து இசையைக் கேட்கலாம், [ஆனால் யூடியூப் நம்பத் தகுந்ததல்ல- இன்று இருப்பது நாளை காணாமல் போகலாம்!] அன்று நடந்த அநியாயத்திற்குப் பிராயச்சித்தம் போல், இன்று வரும் சினிமா இசை தங்கு தடையில்லாமல் ரேடியோவில் வருகிறது! ஆனால் அந்தத் தரம் இன்று இல்லையே! இன்றய டெக்னாலஜி அந்தப் பழைய இசை-ஜீவனுள்ள இசை- உருவாக உதவாது. பல நவீன கருவிகள் அசல் வாத்யங்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டன. [ ஆனால் இது நம் தவறுதான்!] கலைஞர்களுக்கும் குழி பறித்து விட்டன. ஒரு கருவியை வைத்து பல வாத்ய இசைகளை எழுப்பலாம். ஒரு மிலோன் குப்தா, கூடீ சீர்வை. ஸன்னி கேஸ்டலினோ. சிக் சாக்லேட்- போன்றோருக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டது ![]() ஆனால் இசையைக் கேட்கவும் பதிவு செய்யவும் புதிய டெக்னாலஜி உதவும். டெக்னாலஜிக்கு ஜே போடலாமா? Medium is the message என்று Marshall McLuhan மீடியாத்துறைக்குச் சொன்னது பொற்கால சினிமா இசைக்கு முற்றும் பொருந்தும். இசை நம் பண்பாட்டின் ஒரு அங்கம். இது தரம் தாழ நாம் காரணமாக இருக்கக்கூடாது. Golden days may not return, but golden appreciation need not decline or dwindle! This is the message of the golden music of the Golden era! நல்ல திரை இசை மக்களுக்கு பாரம்பரிய இசையை அனுபவிக்க, ரசிக்க பயிற்சிதரும் ஒரு சாதனமாகப் பயன் படும். நல்ல பாடல்கள் நம் இலக்கிய மரபுடன், பண்பாட்டு அம்சங்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்தும். அந்தக் காலத்து நாடகப் பாடல்மூலம் எஸ். ஜி.கிட்டப்பா பாமர மக்களிடம் நல்ல இசையைக் கொண்டு சேர்க்கவில்லையா! ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த’ என்ற வள்ளலார் பாட்டை அவர் தானே பிரபலப் படுத்தினார்! ஏன். ஜி.என்.பி, முசிரி, எம். எஸ், தண்டபாணி தேசிகர். கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் சினிமாவிலும் பாடி நடித்தார்களே! “பண்பாடு”- இது Culture என்ற சொல்லின் தமிழாக்கம்- செய்தவர்- டி.கே.சி அவர்கள்! சினிமா இதை எப்படி வளர்க்க முடியும்? இசை, சாஹித்யம் – இவை இரண்டும் முக்கிய வழிகள். ஒரு உதாரணம் பார்க்கலாம். 1954லில் வந்த ‘மிஸ்ஸியம்மா’ தமிழ்ப்படம் அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். இனிய பாடல்கள் நிறைந்தது. எல்லாப் பாடல்களும் கர்னாடக ராகங்களில் அமைந்தவை. மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றன. இதில் வந்த “பிருந்தா வனமும் நந்த குமாரனும்” என்ற பாட்டு மிகப் பிரபலமானது. இதன் ஸாஹித்யம் நினைவிருக்கலாம்: பிருந்தா வனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ ஏனோ ராதா இந்தப் பொறாமை யார்தான் அழகால் மயங்கா தவரோ புல்லாங் குழலிசை இனிமை யினாலே உள்ளமே ஜில் லெனெத் துள்ளாதா ராகத்திலே அனு ராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா ஏனோ ராதா இந்தப் பொறாமை யார்தான் அழகால் மயங்கா தவரோ இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையதாஸ். இந்தப் படம் “மிஸ்மேரி ” என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது. அதில் ராஜேந்த்ர க்ருஷண் எழுதிய பாடலைப் பாருங்கள்: ப்ருந்தாவன் கா க்ருஷ்ண கன்ஹையா वृन्दावन का कृष्ण कन्हैया सबकी आँखों का तारा मन ही मन क्यों जले राधिका मोहन तो है सबका प्यारा ப்ருந்தாவன் கா க்ருஷ்ண கன்ஹையா ஸப் கீ ஆ(ன்)கோ கா தாரா மன் ஹீ மன் க்யோ(ன்) ஜலே ராதிகா மோஹன் தோ ஹை ஸப் கா ப்யாரா ப்ருந்தாவனத்தின் க்ருஷ்ண கன்னையா நம் அனைவரின் கண்ணின் மணியன்றோ! பின் ராதே, ஏன் உன் மனத்தில் பொறாமைத் தீ வந்தது? கண்ணன் அனைவரின் உள்ளம் கவர்ந்தவன் இல்லையா? जमुना तट पर नन्द का लाला जब जब रास रचाए रे तन मन डोले कान्हा ऎसी मुरली मधुर बजाये रे सुध-बुध खोये खड़ी गोपियाँ जाने कैसा जादू डाला वृन्दावन का … ஜமுனா தட் பர் நந்த்கா லாலா ஜப் ஜப் ராஸ் ரசாயே ரே தன் மன் டோலே கான் ஹா ஐஸே முர்லீ மதுர் பஜாயே ரே ஸுத்-புத் கோயே ஸடீ கோபியா(ன்) ஜானே கைஸா ஜாதூ டாலா யமுனையின் கரையிலே இந்த நந்தனின் செல்வம் எப்பொழுதெல்லாம் ராஸ க்ரீடை தொடங்கினானோ – எப்பொழுதெல்லாம் கண்ணன் தன் மதுரக் குழலிசை இசைக்கத் தொடங்கினானோ – இந்தக் கோபியர் தம் உடல்-மன நினைப்பையே இழந்துவிட்டனரே ! இது எந்த விதமான மாயமோ தெரியவில்லையே! रंग सलोना ऐसा जैसे छायी हो घटा सावन की ऐ री मैं तो हुई दीवानी मन मोहन मन भावन की तेरे कारण देख सांवरे छोड़ दिया मैंने जग सारा ரங்க் சலோனா ஐஸா ஜைஸே சாயீ ஹோ கடா ஸாவன் கீ ஏ ரீ மைதோ ஹுயீ தீவானா மன் மோஹன் மன் பாவன் கீ தேரே காரண் தேக் ஸா(ன்)வ்ரே சோட் தியா மைனே ஜக் ஸாரா கார்காலத்தின் மேகங்கள் விரிந்து பரந்து வண்ணமயமாக்கி விட்டது ஏனடி, மன மோஹன க்ருஷ்ணன் மனதில் புகுந்ததும் நான் பித்துப் பிடித்தவளாகி விட்டேன் அன்பனே! உன் காரணமாக நான் இந்த உலகத்தை எல்லாம் விட்டுவிட்டேன், பார்!! ![]() Song: Brindavan ka krishna kanhaiya Film: Miss Mary 1957 Lyricist: Rajinder Krishan Music: Hemant Kumar Singers: Rafi & Lata Hemant Kumar was assigned music direction, and he wanted to compose on his own. But the producers prevailed upon him to retain this tune as it had become a super hit in the whole South. Hemant Kumar had to reluctantly agree, but he retained his original touch by composing it in the Raag Pahadi, and introducing subtle variations in orchestration. One may listen to both versions, and easily decide which sounds sweeter! இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரே கருப்பொருள்தான்-அதை வெளியிடுவதில் தான் எத்தனை வித்தியாசம்! ‘யாவருக்கும் பொது செல்வம்’ என்பது சாதாரணமான சொல்லாக்கம். ‘ஆ(ன்)கோ கா தாரா” என்பது இலக்கிய மொழி வழக்கு! எது கவிதை? ஊகித்துக் கொள்ளுங்கள்! ‘லீலை” என்று ஒரு சொல்லில் தமிழில் குறுக்கியதை விரித்து ஹிந்தியில் எழுதிவிட்டார் கவிஞர் ராஜேந்த்ர க்ருஷன். கோபியர்களின் பக்திப் பரவசத்தையும் விவரித்துவிட்டார்! பாகவதத்தை ஒட்டியே கவிதை இயற்றிவிட்டார்! கோபியரின் நிலையைச் சொன்னது இதை பக்திப் பாடல் வரிசையில் முதல் இடத்தில் சேர்த்துவிட்டது! ஆம், நமது பக்தி இலக்கியத்தில் எழுத்தறிவில்லாத கோப-கோபியரைப்போன்ற பக்தியிற் சிறந்தவர்கள் இல்லவே இல்லை! பக்தி இலக்கணத்திற்குச் சூத்திரம் வகுத்த நாரதர், பக்திக்கு உதாரணமாகச் சொல்வது கோபியரை மட்டுமே! यथा व्रजगोपिकानाम् । २१ – १.२१ யதா வ்ரஜோ கோபிகானாம் [சூத்ரம் 21] விரஜ பூமியில் எவ்விதம் கோபியர்களுக்குப் பக்தி இருந்ததோ அப்படிச் செய்யவேண்டும். (பகவானுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறப்பது) ஹிந்திக் கவிஞர் எப்படி நமது பக்தி இலக்கிய மரபை சினிமாப் பாட்டில் கொண்டுவந்து விட்டார், பாருங்கள்! [ தமிழ் பக்தி மரபில், “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு” என்பார் மாணிக்கவாசக ஸ்வாமிகள். ] இப்பாடல் ஒரு பஜனைப் பாடலாக இன்றுவரை வட இந்தியாவில் பாடப்படுகிறது- துளியும் சினிமா சாயலே இல்லை! தமிழில் முடியாதா? தமிழில் இப்படி எழுத முடியாதா? ஏன் முடியாது? ‘மீரா” 1945 படப் பாடல்களை நாம் கேட்டதில்லையா? அதற்குப் பிறகும் “ஜாதகம்” 1953 என்ற படத்தில் இரு பாடல்கள் வந்தன, -மதி குலவும் யாழிசையே, கண்ணன் குழலிசை ஆவாயோ, கண்ணன் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வாயோ -மாடுகள் மேய்த்திடும் பையன்- இந்தப் பாடலை முழுதும் பார்ப்போம்: மாடுகள் மேய்த்திடும் பையன்- பசு மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன் மலையைக் குடையாய் ஏந்திடுவான்- விஷ மடுவில் தனியாய் நீந்திடுவான் மாதர்கள் அலற சேலைகள் திருடி மறைந்தே செல்வான் பொல்லாதவன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன் மண்ணைத் தின்று தன் வாயில் உலகம் வளர்வதெல்லாம் காட்டி- மாயையினாலே யாரையும் வென்று மயக்கிடுவான் மலை யாதவன் வலிய மீன் பெரிய ஆமை வராக வடிவமெல்லாம் எடுப்பான் மானிடர் காணா ஜால மிகுந்த மாயா வினோத னே இவன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன் பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி பைய நடந்தே ஆடுவான்-அதைப் பார்த்திடில் தனது பந்தைத் தேடிப் பார்த்தேன் என்றே ஓடுவான் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன் இதை எழுதியவர் டி.கே, சுந்தர வாத்யார். விவரம் ஒன்றும் தெரியவில்லை. கோவர்த்தனம் இசையில் இதைத் தன் தேன் குரலில் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி! இப்போது இத்தகைய பாடல் வருமா? தரமும் பண்பாடும் ரசனையும் எப்படித் தாழ்ந்து போய்விட்டன பாருங்கள்! இன்னொரு டூயட் பார்ப்போம் chanda tale o chanda tale o chanda tale muskuraye jawaniya hotho pe aa gayi dil ki kahaniya hotho pe aa gayi dil ki kahaniya chanda tale o chanda tale muskuraye jawaniya சந்தா தலே முஸ்குராயே ஜவானியா(ன்) நிலவொளியிலே இளமை இனிக்கிறதே! மனதின் விஷயம் வாய்வழியாக வந்துவிட்டதே! நிலவொளியிலே…… dil ka fasana kaha bhi na jaye kahe bina hamse raha bhi na jaye bha gayi teri nadaniya ho nadaniya chanda tale muskuraye jawaniya hotho pe aa gayi dil ki kahaniya chanda tale o chanda tale muskuraye jawaniya தில் கா ஃபஸானா கஹா பீ ந ஜாயே மனதின் கதையைச் சொல்ல இயலவில்லையே! அதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லையே! ஓ உன்னுடைய இந்த ‘அறியாத்தனம்’ பிடித்துப் போய் விட்டதே! நிலவொளியிலே….. pahli wafaye pahli bahar hai koi bata de kaisa ye pyar hai taro ke jaise kaaba le aao kaaba le aao chanda tale muskraye jawaniya hotho pe aa gayi dil ki kahaniya chanda tale o chanda tale muskuraye jawaniya ![]() பஹலீ வஃபாயே பஹலீ பஹார் ஹை முதலில் தோன்றும் நம்பிக்கையே முதல் வஸந்தமாகும்! இக் காதலின் இயல்பு என்ன, எவராவது விளக்குவார்களா? தாரகைகளைப் போல, நற் செய்தி தாங்கி வா! நிலவொளியிலே……. Song: Chanda tale Film: Chandi Rani 1953 Lyricist: Vishvamitra Adil Music: C.R.Subbaraman +M.S.Visvanathan Singers: Talat Mahmood & P.Bhanumathi ![]() இது பானுமதி தயாரித்து , நடித்து இயக்கிய படம். (வாழ்க பெண்கள் விடுதலை!) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் வந்தது. தெலுங்கிலும் தமிழிலும் இப்பாட்டை கண்டசாலாவும் பானுமதியும் பாடினார்கள். தமிழ்ப்பாடல் எழுதியது கே.டி.சந்தானம். தமிழைவிட தெலுங்கில் இனிமையாக இருக்கிறது என்பது என் கருத்து. பாடகர்களுக்கு தாய்மொழியானதால் அப்படி இருக்கலாம். ஹிந்தியிலும் பானுமதியே பாடியிருக்கிறார். உச்சரிப்பில் வித்தியாசம் தெரிகிறது. இந்தப் பாட்டின் மெட்டு யார் அமைத்தது? இந்தப் படத்திற்கு இசைஞரான சி ஆர். சுப்பராமன் இடையில் காலமானார். அவர் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வனாதன் அப்பணியைச் செய்து முடித்தார். இந்த மெட்டு தான் அமைத்தாக அவர் சொல்லியிருக்கிறார். மற்றும் இந்த மெட்டுக்குப் பாட்டெழுத விஸ்வாமித்ர ஆதில் தடுமாறியதாகவும், தானே முதல் வரியை ” சந்தா தலே முஸ்குராயே ஜவானியா” என்று எடுத்துக் கொடுத்ததாகவும் யூட்யூபில் சொல்லி யிருக்கிறார். இதை நம்புவது கடினம். இந்த மெட்டு அப்படி ஒன்றும் கடினமானதல்ல. நான் 60 வருஷங்களாக ஹிந்திப் பாட்டைக் கேட்டும், கற்றும் வருபவன் . ஹிந்தி பாடலாசிரியர்கள் அப்படி சோடைபோனவர்கள் அல்ல. டைரக்டர், பெரிய நடிகர்கள், இசைஞர் ஆகியோர் விருப்பத்தின்படி பலமுறை எழுதுவார்கள். சில சமயம் பாடகர்களுக்கே சில வார்த்தைகள் கடினமாகிவிடும், அதை மாற்றுவார்கள். லதா மங்கேஷ்கர் தமிழில் பாடமுயன்றபோது (டப்பிங்கில்) தடுமாறினார். அவருக்காக கம்பதாசன் பலமுறை சொற்களை மாற்றி எழுத நேர்ந்தது என்பார்கள்! மேலும், இந்த முதல்வரியின் சொற்கள் சாதாரண வழக்கிலிருக்கும் சொற்கள் அல்ல! தரமான இலக்கிய வழக்கு! ஹிந்தி பேசாத, தாய்மொழியாக இல்லாத ஒருவருக்கு இத்தகைய சொற்கள் அமைவது அதிசயமே! [ இது என் சொந்தக் கருத்து. எம்.எஸ்.வி அபிமானிகள் தயவு செய்து கோபிக்க வேண்டாம்!] இந்தப் பாடலில், “taro ke jaise kaaba le aao” என்ற வரியின் பொருள் விளங்கவில்லை! இங்கு வரும் “காபா” என்ற சொல்லுக்கு அகராதியிலும் பொருள் தரவில்லை! விஸ்வாமித்ர ஆதில் பல வெற்றிப் படங்களுக்கு கதையும் உரையாடலும் எழுதியவர், உதவி டைரக்டராக இருந்தவர். சில சமயம் பாடலாசிரியர்கள் தடுமாறுவது உண்டு; இது இயலாமையினால் வருவது அல்ல. 1965ல் தேவ் ஆனந்த் Guide படமெடுத்தார். ஹஸ்ரத் ஜய்புரி பாட்டெழுத வேண்டும்.. ஒரு சீனிற்குப் பல முறை எழுதியும் டைரக்டர் விஜய் ஆனந்திற்கு திருப்தியாகவில்லை. [இதில் வரும் கதா நாயகன் ‘கேரக்டர்’ சரியில்லை.] ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். ஹஸ்ரத்திற்குக் கோபம் வந்துவிட்டது. “ஒரு மோசமான பாத்திரத்திற்கு இன்னும் நன்றாக என்ன எழுதுவது” என்று சொல்லி காகிதத்தை விட்டெறிந்து விட்டுப் போய்விட்டார். [அவர் சொன்ன அசல் வார்த்தை “ஒரு படவா”விற்கு என்பது] பின்னர் ஷைலேந்த்ராவை எழுதச்சொன்னார்கள். அவர் ஹஸ்ரத்தின் நண்பர். அதனால் ஹஸ்ரத் எழுதியிருந்த முதல் வரி ” தின் டல் ஜாயே” என்ற சொற்களை வைத்தே பாட்டெழுதினார். இங்கு வெளிப்படுவது எழுத்தாளரின் மனோதர்மமே தவிர, இயலாமை அல்ல! சில சமயம் சிலர் அசப்பில் சொல்லும் சொற்கள் பாட்டின் முதல் வரியாக அமைவதுண்டு. ஒரு சமயம் இசைஞர்கள் ஷங்கர், ஜெய்கிஷன், கவி ஹஸ்ரத், ஷைலேந்த்ரா ஆகியோர் காரில் வந்துகொண்டிருந்தனர். ஜெய்கிஷன் வழியில் யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தார். கூட இருந்த யாரோ , “அரே க்யா முட் முட் கே தேக் ரஹே ஹோ” ( என்ன திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் ) என்று கிண்டலடித்தார். பின்னர் ஷைலேந்த்ரா இந்த வார்த்தையை வைத்தே “முட் முட் கே நா தேக் முட் முட் கே” என்று பாட்டெழுதினார். ஸ்ரீ 420 படத்தில் இது பெரிய ஹிட் ஆனது! கவி பரத் வ்யாஸ் “தோ ஆங்கே பாரஹ் ஹாத்” படத்திற்குப் பாட்டெழுதவேண்டும் படப்பிடிப்பு தொடங்கியும் பாட்டு வரவில்லை ஒரு நாள் தயாரிப்பாளர்-டைரக்டர் சாந்தாராம் வ்யாஸிடம், ‘அரே மாலிக், நீ எந்தக் காலத்தில் பாட்டு எழுதி முடிக்கப் போகிறாய்” என்று கிண்டலாகக் கேட்டார். கவிக்கு ரோசம் வந்தது! “யே மாலிக் தேரே பந்தே ஹம்” என்ற பிரார்த்தனைப் பாடலை எழுதி முடித்தார்! மாலிக் என்று சாந்தாராம் சொன்னது, ஓ தலைவா, எஜமானரே என்று நாம் கிண்டலாகச் சொல்வது, கவி எழுதியதோ, அசல் மாலிக் கடவுளைப் பற்றி!. இதில் “மாலிக் ” என்ற சொல்லைப் போட்டதால் இது முஸ்லிம்களுக்கும் பிடித்துப் போய்விட்டது- பாகிஸ்தானிலும் பாடினார்கள். அதாவது, சில சொற்கள் பாட்டுக்குத் தூண்டுகோலாக அமையலாம். ஆனால் ஒரு முழு இலக்கிய வரியே அம்மொழி பேசாத ஒருவருக்கு வந்தது என்பது ஆச்சரியமே! எப்படியானால் என்ன, ஒரு நல்ல பாட்டு நமக்குக் கிடைத்தது! **** tags — ஹிந்தி படப் பாடல்கள்-19 , திரை இசை, அநீதி, ![]() |
All posts tagged திரை இசை
ஹிந்தி படப் பாடல்கள்-19 – திரை இசைக்கு அநீதி? (Post No.7888)
Posted by Tamil and Vedas on April 27, 2020
https://tamilandvedas.com/2020/04/27/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/





