
9.சம்ஸ்கிருதச் செல்வம்
9. கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள் !
By ச.நாகராஜன்
சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்றவர் பர்த்ருஹரி. இவரது கவிதைகளை மேற்கோள் காட்டாதவர்களே கிடையாது.ஸ்வாமி விவேகானந்தர் முதல் மஹாத்மா காந்திஜி வரை எல்லாப் பெரியோரும் கவிஞர்களும் அறிஞர்களும் இவரது கவிதைகளைச் சுட்டிக் காட்டி தாம் சொல்ல வந்ததை விளக்கும் அளவு ஆழமான கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் பர்த்ருஹரி.
நீதி சதகம், ச்ருங்கார சதகம், வைராக்ய சதகம் என மூன்று சதகங்களை அவர் படைத்துள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது.
அதிர்ஷ்டவசமாக இவரது மூன்று நூல்களும் இன்று நம்மிடையே உள்ளன. எளிய பதங்கள், இனிய நடை, ஆழ்ந்த கருத்து, வார்த்தை ஜாலங்களும் கருத்து ஜாலங்களும் மிக்க கவிதைகள் என இவரது அரிய படைப்புகளைப் பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சற்று மிகைப்பாடல்களுடன் கூட நீதி சதகத்தில் 111 பாடல்களும்,ச்ருங்கார சதகத்தில் 104 பாடல்களும் வைராக்ய சதகத்தில் 111 பாடல்களும் நம்மிடையே இன்று உள்ளன.
அனைத்துப் பாடல்களும் பொக்கிஷம். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரே ஒரு தரமாவது படிக்க வேண்டிய கவிதைகள் இவை.
முதலில் மாதிரிக்கு ஒன்று!
பழுத்த அனுபவஸ்தரான பர்த்ருஹரி தேசம் முழுவதும் சுற்றியவர் போலும். பல நிகழ்வுகளைப் பார்க்கிறார். பலதரப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறார். அவருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.
நீதி சதகத்தில் 45வது பாடலாக இது மலர்கிறது:
சசீ திவஸ தூஸர: கலித யௌவனா காமினி
சரோ விகத வாரிஜம் முகமநக்ஷரம் ஸ்வாக்ருதே:I
ப்ரபுர்தனபராயண: ஸதத துர்கதி ஸஜ்ஜன:
ந்ருபாங்கண கத: கல: மனஸி சப்த சல்யா இமே II
திவஸ தூஸர: – பகலால் ஒளியிழந்த
சசீ – சந்திரனும்
கலித யௌவனா – யௌவனமிழந்த
காமினி – மனைவியையும்
விகத வாரிஜம் – தாமரைப் பூவற்ற
சர: – தடாகமும்
ஸ்வாக்ருதே: – நல்ல அழகுள்ளவனுடைய
முகம் – வாயானது
அநக்ஷரம் – எழுத்து வாசனையே இல்லாமல் இருப்பதும்
ப்ரபு: – பணக்காரன்
தன பராயண: – பணம் சேமிப்பதிலேயே கருத்தாக இருப்பதும்
ஸஜ்ஜன: -நல்ல மனிதன்
ஸதத துர்கதி – எப்போதும் கஷ்ட தசையில் வாழ்வதும்
கல: -அயோக்கியன்
ந்ருபாங்கண கத: – அரசனுடன் நெருங்கிப் பழகுவதும்
ஸப்த – ஆகிய மேற்கண்ட ஏழு விஷயங்களும்
மே – எனக்கு
சல்யானி – துன்பமளிக்கின்றன
1.பகல் வேளையில் சந்திரன் ஒளி இழந்து இருப்பதைப் பார்த்தால் மனதிற்குத் துக்கம் ஏற்படுகிறது.2.இதே போல இளமை அழகு இழந்த மனைவியும், 3.தாமரைப் பூக்கள் இல்லாத தடாகமும் 4.அழகிய ரூபமுள்ளவன் படிப்பறிவே இல்லாமல் இருப்பதும் 5.பணக்காரனாக இருந்த போதிலும் மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதும் 6.நல்ல மனிதர்கள் எப்போதும் கஷ்டமான வாழ்க்கையையே நடத்த நேரிடுவதும் 7.அயோக்கியர்களோ அரசன் வீட்டில் செல்வாக்குப் பெற்று நல்ல காரியங்களைக் கெடுப்பதும் ஆகிய இந்த ஏழும் என் மனதிற்குத் துன்பத்தைத் தருகிறது என்கிறார் கவிஞர்.
என்ன அற்புதமான கருத்து! உலகியல் வாழ்வில் அன்றும் இது உண்மை! இன்றும் இது உண்மை! என்றும் பொருந்துவதைச் சொல்வதனால் தான் கவி என்று அழைக்கிறோம் என்பதைப் புரிய வைக்கும் அற்புதப் பாடல் இது!
****************