
WRITTEN
BY S. NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 19 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 15-59
Post No.
6987
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
ஹெல்த்கேர் செப்டம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. கட்டுரையின் முதல் பகுதி 8-8-19 அன்று வெளியாகியுள்ளது : கட்டுரை எண் 6744
புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages
ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 2
தமிழில் தருபவர் : ச.நாகராஜன்

Exercise (உடல் பயிற்சி)
உடல் பயிற்சி ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கான அநேக காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தக் காரணங்கள் அனைத்துமே சரியில்லை. எந்த வயதிலும் கூட உடல் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனைத்து டாக்டர்களும் ஒருமித்துக் கூறும் ஒரே கருத்து உலகில் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் மிக முக்கியமான ஒன்று உடல் பயிற்சியே.
ஒரு விமானத்தின் ஆயுள்காலம் அது பறக்கும் மணி நேரங்களை வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஒரு காரின் ஆயுள்காலம் அது ஓடும் மைல்களைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.ஆனால் மனிதனைப் பொறுத்த மட்டில் அவன் வயதாகும் விகிதம் என்பது அவன் வாழும் வருடங்களின் எண்ணிக்கையல்லாது அவன் எவ்வளவு (சக்தியை) செலவழிக்கிறான் எவ்வளவு சேகரிக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரு விதமாக வயதானது அமைகிறது. காலண்டர் படி வருடங்கள் ஆகும் போது அமையும் வயது ஒன்று. இன்னொருன்று அவனது உடல் தகுதியை வைத்து அமைவது. இது உடல் பயிற்சியால் நன்கு நிர்ணயிக்கப்படலாம். ஒரு மனிதனின் காலண்டர் வயது அவன் உடல் தகுதி வயதை விட சுமார் 30 ஆண்டுகள் என்ற மலைக்க வைக்கும் அளவு மாறுபடலாம். அதாவது ஒருவன் காலண்டர் வயது படி 60 வயதை எட்டி விட்டாலும் உடல் தகுதி வயது அடிப்படையில் அவன் மிகவும் இளமையானவனாக இருக்க முடியும்.
மாவீரன் நெப்போலியன் முடிந்த போதெல்லாம் குதிரை சவாரி செய்து சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம்.
உடல்பயிற்சி தினமும் முறைப்படியாக சீராகச் செய்து வருவது அவசியம்.
15 நிமிடம் நாளுக்கு என்ற கணக்கில் வாரத்தில் மூன்று நாட்கள் உடல் பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
உடலின் அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்குள்ளாக்கும் படி பார்த்துக் கொள்வதும் அவசியம்.
எப்போதுமே நிமிர்ந்து நடத்தல் நல்லது.

பூனை எப்படி தன்னை நீட்டித்துக் கொள்கிறது என்று பாருங்கள். அது போல டெலிபோன் ரிசீவரை எடுக்கும் போது கூட நீட்டித்துக் கொள்ளுங்கள்.
குளித்தபின் நன்கு அழுத்தித் துடைத்துக் கொள்ள வேண்டும்.
உட்காரும் போது எப்போதுமே முதுகை நேராக வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஜப்பானில் இதை இளம் வயதிலிருந்தே சொல்லித் தருகிறார்கள்.
உடல் பயிற்சியைப் பற்றி மட்டுமே அனைவரும் வலியுறுத்துவது வழக்கம். ஆனால் மனதிற்கும் பயிற்சி அவசியமே. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் மனதை அமைதியாக ஓய்வாக வைத்துக் கொள்வது அவசியம்.
Physiology (உடலியல்)
பழைய காலத்தில் மனிதர்களைப் பெருமளவில் இறக்கச் செய்தது தொற்று வியாதிகள். ஆனால் நவீன காலத்திலோ மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவையே பெரிய ஆட்கொல்லிகளாக இருக்கின்றன.
இதைத் தடுக்க உரிய பயிற்சிகளைச் செய்வது அவசியம்.
சரியான உணவுத் திட்டமும் கூட மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்கும். குண்டாக இருப்பது இதயத்திற்கு அதிகப்படியான இறுக்கத்தைத் தருகிறது. ஆகவே சீரான அளவில் உடல் எடையைப் பராமரிக்க உடல் பயிற்சியும் உணவுத் திட்டமும் அதன் மீதான அன்றாட கவனிப்பும் தேவை.
சவாசனம் மிகப் பெரிய அளவில் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும்.
பெரும்பாலோனோருக்கு முதுகுவலி ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு:- சரியாக நிமிர்ந்து நடப்பது நல்ல பயனைத் தரும். இன்னொரு பயிற்சி முழங்கால்களை மடித்து அதன் மீது எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு நேராக உட்காரும் பயிற்சியாகும்.

நீரிழிவு நோய் ஒரு அபாயகரமான வியாதியாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
திடீரென அனைத்து சக்தியும் போய் விட்டது போல உணர்வது, தீராத தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, திடீரென அதிகப்படியாக உடல் எடை குறைவது, உடலில் கட்டிகள் தோன்றி மறைவது, விளக்கமுடியாதபடி திடீரென உடல் வலி ஏற்படுவது – இவை டயபடீஸுக்கான் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக இனிப்புச் சத்தைக் குறையுங்கள்; கார்போஹைட்ரேட்டைக் குறையுங்கள்.
அல்சர் எனப்படும் வாய்ப்புண் அல்லது குடல் புண்ணும் ஆபத்தான ஒன்று தான். அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பேர்கள் இதனால் அவதிப் படுகிறார்கள் என்றால் உலக அளவில் எத்தனை பேர் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.
தீராத புண்கள் சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விடும்.
38 முதல் 55 வயது முடிய உள்ளோருக்கு சாதாரணமாக அல்சர் வருகிறது.
காரமில்லாத உணவு, வயிற்றைப் பொரும வைக்காத உணவு எடுத்தல் அவசியம்.
ஒரு சுலபமான வழி – அதிகப்படி அமிலத்தைக் கட்டுப்படுத்த உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எதையேனும் உட்கொள்வது ஒரு தீர்வாகும் – ஓரிரு பிஸ்கட் கூட போதும்!
1.36 கிலோ எடையுள்ள கல்லீரல் உடலின் முக்கியமான அங்கம். இது பிரம்மாண்டமான மல்டி பர்பஸ் – பல்நோக்கு கெமிக்கல் அங்கமாகும். அனைத்து உணவையும் புரோட்டின், கார்போ ஹைட்ரேட், மற்றும் கொழுப்புத் துகள்களாக இது மாற்றுகிறது. சுத்திகரிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் ரத்தத்தில் சேர்கிறது.
அற்புதமான இந்த அங்கம் ரீ ஜெனரேஷன் எனப்படும் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. மது அருந்தி இதைக் கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து உடலின் மிக முக்கியமான அங்கம் உடலில் உள்ள இரு சிறுநீரகங்கள். ஒவ்வொரு சிறுநீரகமும் சில கிராம் எடையே கொண்டது. ஆனால் இவற்றில் நம்பமுடியாத பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபில்டர் – வடிகட்டிகள் உள்ளன. இதற்கு நெஃப்ரான் என்று பெயர். இவை இரத்தத்தை வடிகட்டுகின்றன.
நமது உடலில் உள்ள மொத்த ரத்தத்தின் அளவின் இரு மடங்கு உடலில் அமைந்துள்ள இரு சிறுநீரகங்களின் வழியே ஒவ்வொரு மணி நேரமும் செல்கிறது. இரத்தம் இப்படி இடையறாது வடிகட்டப்பட்டு கழிவுகள் அதிலிருந்து எடுக்கப்பட்டு ப்ளாடர் எனப்படும் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
முதுகுவலி, சிறுநீரில் இரத்தம் அல்லது நிறமாற்றம் தோன்றுதல், சிறுநீரில் நாற்றம் – இவையெல்லாம் சிறுநீரகக் கோளாறுக்கான அறிகுறிகளாகும்.
அதிகமான திரவ பதார்த்தத்தை எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்க சிறந்த வழி.

General – பொது
மது அருந்தாதீர்கள். அளவுக்கு மீறும் போது அது ஆட்கொல்லியாக மாறும்.
சிகரெட் புகைக்காதீர்கள். கார்பன் மானாக்ஸைடு நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுப்பதைப் பாதிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் இதய நோயில் கொண்டு விடுகிறது
அதிகமான சத்தமும் ஆபத்தானது தான். 110 டெசிபல் என்ற ஓசை அளவு ஆபத்தானது. இரண்டு மணி நேரம் இந்த டெசிபல் அளவில் நாம் இருந்தால் நம் காது கேட்கும் திறனை இழக்க ஆரம்பிக்கும். உலகின் அனைத்து மகான்களும் அறிஞர்களும் ஒருமிக்க வலியுறுத்துவது மௌனத்தையே!
வாழ்க வளமுடன்!
***
புத்தகத்தின் மிக முக்கியமான பகுதிகள் மட்டுமே இங்கு தரப்பட்டிருக்கின்றன. புத்தகம் முழுவதையும் ஆழ்ந்து படித்து நூலாசிரியர்கள் தரும் அறிவுரைகளின் படி நடப்போர் ஆரோக்கியமான் நல்வாழ்வு வாழ்வது திண்ணம்.
மீண்டும் இன்னொரு புதிய புத்தகத்தில் சந்திப்போம்.
XXX SUBHAM XXX

