
Written by S NAGARAJAN
Date: 4 June 2017
Time uploaded in London:- 5-24 am
Post No.3969
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com
எண் ரகசியம்
காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எண் ரகசியம் – 3
தொண்ணூறு க்யாட் கரன்ஸி!
ச.நாகராஜன்
பழைய காலத்தில் பர்மா என்று சிறப்புற்றிருந்த நாட்டை நாம் நன்கு அறிவோம்.
இப்போது மியான்மர் என்ற பெயரில் அறியப்படும் நாடு அது.
பர்மாவை சர்வாதிகாரியாக இருநது ஆண்டவர் நீ வின்.
(பிறப்பு 14-5-1911 மரணம் 5-12-2002) 1958 முதல் 1960 முடியவும் மீண்டும் 1962லிருந்து 1974முடியவும் பிரதமராக இருந்தவர் அவர். 1962லிருந்து 1981 முடிய அரசின் தலைமை பீடத்திலும் அவர் இருந்தார்.
அவருக்கு எண் கணித சாஸ்திரத்தின் மீது அபாரமான நம்பிக்கை.

அவர், 1963இல் பர்மாவின் கரன்ஸியாக இருந்த 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகளை 45 மற்றும் 90 க்யாட் நோட்டுகளாக மாற்றினார். உலகில் இப்படி அதிசயமான எண்களில் கரன்ஸியைக் கொண்டிருந்த ஒரே நாடு பர்மா தான்!
45 மற்றும் 90 ஆகிய எண்கள் ஒன்பதால் வகுபடக் கூடியவை. அவற்றை கூட்டினால் வருவது 9. (45 க்யாட் நோட்டில் 4= 5 = 9; 90 க்யாட் நோட்டில் 9 + 0= 9)
1963இல் 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகள் செல்லாது என்று அவர் செய்த அதிரடி உத்தரவால் பர்மாவே ஆடிப் போனது.ஒரே நாளில் வாழ் நாள் முழுவதும் சேர்த்த மொத்த பணத்தையும் இழந்தோர் ஏராளம்.
இப்படி ஒன்பது வரும்படியான க்யாட் நோட்டை அவர் அமுல் படுத்தியதற்கான காரணம் அவரது நியூமராலஜி ஆலோசகர் அவருக்கு ஒன்பது என்ற எண்ணே அதிர்ஷ்டம் என்றும் எதையும் அவர் ஒன்பது வரும் படி பார்த்துக் கொண்டால் அவர் நிச்சயம் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்வார் என்றும் சொன்னது தான்!
பர்மாவின் கரன்ஸியை மட்டும் அவர் ஒன்பது என்று வரும் படி பார்த்துக் கொள்ளவில்லை தனது அலுவலக மற்றும் பிரத்யேக வாழ்க்கையில் வரும் அனைத்தையும் ஒன்பது வரும்படி பார்த்துக் கொண்டார்.
இதனால் பர்மாவின் பொருளாதாரமே பலவீனமாகி நாசமாகியது.
ஆனால் அவரது நியூமராலஜி நம்பிக்கை அவரைக் கைவிடவில்லை.
ஏராளமானோர் அங்கு இறந்த போதிலும் 28 ஆண்டுகள் பலம் பொருந்திய தலைவராக அவர் ஆட்சி செலுத்தினார்.
நியூமரலாஜி ‘உறுதி அளித்த’ தொண்ணூறு வயதையும் தாண்டி வாழ்ந்து 91ஆம் வயதில் மரணமடைந்தார்.
அவரைப் பற்றிய ஏராளமான வதந்திகள் உண்டு.பர்மாவில் இரத்த புரட்சி ஏற்படும் என்றும் அதனால் அவருக்கு அபாயம் வரும் என்றும் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கண்ணாடி முன்னால் நின்று கொண்டு மாமிச ரத்தத்தைத் தன் மேல் தெளித்துக் கொண்டு கண்ணாடியில் இருந்த தன் உருவத்தை துப்பாக்கியால் சுட்டுத் தான் இறக்கவிருக்கும் “தோஷத்தை” அவர் விலக்கிக் கொண்டாராம்.
அத்துடன் இளமையுடன் “என்றும்” இருக்க டால்பினின் ரத்தத்தில் அவர் குளிப்பாராம்.
எண் ஜோதிடம் தவறாகக் கையாளப்பட்டால் அது தனி நபர் அளவில் நன்மையைத் தந்தாலும் ஒரு நாட்டிற்கே அவலத்தைத் தந்ததை நீவின் சரித்திரத்தின் மூலம் பார்க்கலாம்.

இதே போல சிங்கப்பூரை நிறுவிய சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ க்வான் யூ (பிறப்பு 16-9-1923 மறைவு 23-3-2015) தனிச் சிறப்பு வாய்ந்த தலைவராக சிங்கப்பூர் மக்களால் கருதப் படுபவர்; 91 வயது வாழ்ந்து மறைந்தார்.
அவர் பெங் சுயி சாஸ்திரத்தின் அடிப்படையில் புத்த துறவி ஒருவரின் அறிவுரையின் பெயரில் எட்டு பக்கம் கொண்ட (பாகுவா என்று சொல்லப்படும் அமைப்பைக் கொண்ட) ‘ஒரு டாலர்’ நாணயத்தை சிங்கப்பூரில் கொண்டு வர சிங்கப்பூரின் பொருளாதாரம் பிரமாதமாக செழித்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று தான் எழுதிய ஹார்ட் ட்ரூத்ஸ் (Hard Truths) என்ற நூலில் சொல்லி இருந்தாலும் கூட அவர் எடுத்த பல நடவடிக்கைகள் ஆழ்ந்த பெங் சுயி கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே என்று பெங்சுயி ஆதரவாளர்கள் நம்புகின்றனர்; அதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
Singapore’s Octal Coin
91 வயது வாழ்ந்த அவரை 91 என்ற எண்ணுடன் சம்பந்தப்படுத்தும் அவர் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை மக்கள் இன்று தொகுத்துக் கூறி மகிழ்கின்றனர்.
ஆழ்ந்து யோசியுங்கள், எண்களின் ரகசியம் புரியும் என்று நியூமராலஜி ஆர்வலர்கள் கூறி மகிழ்கின்றனர்!
-to be continued………………………………..