நடந்தவை தான் நம்புங்கள் – 2 (Post No.8992)

WRITTEN BY S NAGARAJAN                 

Post No. 8992

Date uploaded in London – – 3 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

நடந்தவை தான் நம்புங்கள் – 2

ச.நாகராஜன்

வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு மாணவன், “ I don’t know nothing about it…” என்றான்.

உடனே பேராசிரியர் அவனைப் பார்த்து, “நீ சொன்னதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா? எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், சரி தானே!” என்றார்.

ஆமாம் என்றான் மாணவன். “ஆனால் உனது வாக்கியத்தில் இரண்டு எதிர்மறைப் பதங்கள் உள்ளன. don’t know என்றும் nothing என்றும் இரண்டு எதிர்மறைப் பதங்கள் உண்மையில் எனக்கு அதைப் பற்றித் தெரியும் என்ற அர்த்தத்தைத் தான் தரும்!” என்று சொன்ன ஆசிரியர் தொடர்ந்தார்.

“ஆங்கில மொழியில் இப்படி இரு எதிர்மறைப் பதங்களை ஒருவர் ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்தினால் அது பாஸிடிவான அர்த்தத்தையே தரும். ஆனால் எல்லா மொழிகளும் இந்த இலக்கண விதியைக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக ரஷிய மொழியை எடுத்துக் கொண்டால், இரண்டு நெகடிவ் (double negative) வார்த்தைகள் நெகடிவ் அர்த்தத்தைத் தான் தரும். ஆனால் உலகின் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு பாஸிடிவ் (double positive) வார்த்தைகள் ஒரு நெகடிவ் அர்த்தத்தைத் தருவதே இல்லை.”

பேராசிரியர் இதைச் சொல்லி நிறுத்தியவுடன் கடைசி பெஞ்சிலிருந்து மெலிதாக ஒரு குரல் ஒலித்தது.

“ஆமாம்! சரிதான்!”

இந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்றின் அடிப்படையில் உருவான ஜோக் தான்! இது நியூயார்க் டைம்ஸ் இதழில் இடம் பெற்றது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் நியூயார்க்கில் மாடர்ன் லாங்வேஜ் அசோஷியேஷனில் (Modern Language Association) ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேசுபவர் இப்படி டபிள் பாஸிடிவ் வார்த்தைகள் ஒரு நெகடிவ் அர்த்தத்தை எந்த மொழியிலும் தருவதில்லை என்று சொல்லி நிறுத்தியவுடன்  அங்கு வந்திருந்த பிரபல தத்துவ பேராசிரியரான சிட்னி மார்கென்ப்ரெஸ்ஸர், (Professor Sidney Morganbessar ), “Yeah! Yeah!!” என்றார்.

அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.

2

அது ஒரு மலைப் பிரதேசம். அடர்ந்த காட்டுப் பகுதியும் கூட. அதன் உச்சியின் ஒரு பகுதியில் வயதான ஒரு தம்பதியர் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் மூதாட்டி வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்த போது ஒரு இளைஞன் மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த மலைக் காட்டுப் பக்கம் போய்க்கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு பை வேறு தொங்கியது.

எதற்கு இப்படி  ஒரு இளைஞன் இந்தப் பக்கம் போகிறான் என்று எண்ணினாள் மூதாட்டி.

அடுத்த நாள் அதே நேரம்! அதே இளைஞன். அதே மண்வெட்டி. தோளில் அதே பை! சற்று வியந்தாள் மூதாட்டி.

மூன்றாம் நாள் குறிப்பிட்ட நேரத்தில் ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்தாள் மூதாட்டி. அதே நேரம், அதே இளைஞன் …

அவளுக்குச் சற்று சந்தேகம் வந்தது. தன் வயதான கணவரிடம் நடப்பதைச் சொன்னாள்.

“இதற்கெல்லாம் கவலைப்படாதே! ஏதாவது ஒரு விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம், அல்லது விளையாட்டில் எதையாவது ஒளித்து வைக்க வந்திருக்கலாம், அல்லது மலையேறும் பயிற்சிக்காக இருக்கலாம்” என்று கூறினார் வயதான மனிதர்.

ஆனால் இதே போல இன்னும் இரண்டு வாரங்கள் அந்த் இளைஞனின் வருகை தொடர்ந்தது.

வயதான தம்பதியர் உஷாராயினர்! என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் உந்தியது.

ஒரு நாள் அந்த இளைஞன் வழக்கம் போலத் தன் போக்கில் காட்டில் மரங்களுக்கு இடையே மறையும் போது அவன் அறியாமல் அவன் பின்னால் சென்றனர் வயதான கிழவரும், மூதாட்டியும்.

அங்கே இளைஞன் ஒரு பதுங்கு குழியை (TRENCH) வெட்டிக் கொண்டிருந்தான். மிக நீளமான குழி அது. ஒரு பக்கம் கரடு முரடாக நன்றாக இல்லாமல் இருந்தது.

ஆனால் போகப் போக மிக அருமையாக சமமாக, வழுவழுப்பாக அது வெட்டப்பட்டு அமைந்திருந்தது.

வயதான தம்பதியரைப் பார்த்த அந்த இளைஞன் மிக மரியாதையாக வணக்கம் சொன்னான்.

கிழவர் கேட்டார்: “தினமும் இங்கு வருகிறாய்! என்ன செய்கிறாய்? இது என்ன குழி?”

இளைஞன் சொன்னான்: “இது எனக்குக் கிடைக்கப் போகும் வேலைக்காக நான் வெட்டும் குழி. பதுங்கு குழி வெட்டுவதற்கான வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த படிவத்தில், அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நேரடிக்குப் பேட்டிக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே தான் அனுபவம் பெற இப்படி தினமும் வந்து குழி வெட்டிப் பழகுகிறேன். எப்படி இருக்கிறது இந்த்க் குழி?”

தம்பதியர் வியந்தனர். அவன் தினமும் கொண்டு வரும் பையைப் பார்த்தனர்.

அவர்கள் பார்வையைக் கவனித்த அந்த இளைஞன், “ ஓ, இந்தப் பையா? இதற்குள் தான் மத்தியான சாப்பாடுள்ள டிபன் பாக்ஸும் தண்ணீர் பாட்டிலும் உள்ளன” என்றான்.

தம்பதியர் அவனை வாழ்த்தினர். வேலை கிடைத்தவுடன் அந்த இளைஞன் மறக்காமல் அவர்களைச் சந்தித்து தான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சொன்னான். அவர்கள் சந்தோஷப்பட்டனர்.

உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது!

tags — நடந்தவை-2 , நம்புங்கள்-2, 

***