உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!! நடந்தவை தான் நம்புங்கள் – 17 (Post.9693)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9693

Date uploaded in London – –  –6 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

நடந்தவை தான் நம்புங்கள் – 16 வெளியான தேதி 10-5-21 கட்டுரை எண:  9587   

நடந்தவை தான் நம்புங்கள் – 17

ச.நாகராஜன்

உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!!

உள்ளது உள்ளபடி பதில் சொல்வதென்பது சற்று தர்மசங்கடமான ஒன்று தான். என்றாலும் சில அறிஞர்கள் அதைக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

ராணியிடம் எப்போதும் நல்ல பெயர் தான்! : எப்படி சாத்தியம்?!

இங்கிலாந்தின் பிரபல அரசியல்வாதியான டிஸ்ரேலி எப்படி பிரிட்டிஷ் ராணியுடன் மிக சுமுகமாகப் பழகுகிறார் என்பது யாருக்கும் புரியாமல் இருந்தது. ராஜாங்கத்தின் உயர் தலைவி அவருக்கு தனி சலுகை தந்து வருவது எப்படி?

ஒரு சமயம் அவர் தன் நண்பருடன் பேசும் போது இந்த ரகசியத்தைப் போட்டு உடைத்தார் இப்படி: “நண்பரே! ராணியாருடன் பேசும் போது ஒரு சின்ன எளிமையான விதியைத் தான் நான் பின்பற்றுகிறேன். ஒரு போதும் அவர் பேச்சை நான் மறுப்பது கிடையாது. ஒரு போதும் அவர் பேச்சுக்கு மாற்றுக் கருத்தைச் சொல்வதில்லை. சில சமயம் நான் மறந்து விடுவேன். இவ்வளவு தான்!

*

பெண்களிடம் நீங்கள் அதிகம் பேசுவதில்லையே, ஏன்?

இங்கிலாந்தின் பிரபல அறிஞரான ஜான்ஸனிடம் ஒரு வம்புக்காரப் பெண்மணி வந்து பேசிக் கொண்டிருந்தார். தன்னை அவர் கவனிக்கவே இல்லை என்று அந்தப் பெண்மணிக்குச் சற்று ஆதங்கம்!

அவர் ஜான்ஸனிடம் வலியச் சென்று கேட்டார்: என்ன டாக்டர்! நீங்கள் எப்போதுமே பெண்களை விட ஆண்களிடமே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

அதற்கு உடனடியாக ஜான்ஸன் பதில் சொன்னார்: அம்மணி! நான் பெண்களுடன் பேசுவதை மிகவும் விரும்புகிறேன். அவர்களின் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் நளினத்தை நான் விரும்புகிறேன். அவர்களின் கிளர்ச்சியூட்டும் தன்மையும் எனக்குப் பிடிக்கும். கூடவே அவர்கள் மௌனமாக இருப்பதும் எனக்கு அதிகம் பிடிக்கும்!

அவ்வளவு தான் அந்த அம்மணி அங்கிருந்து நடையைக் கட்டினார்!

*

இரண்டு மனைவிக்காரனுக்கு என்ன தண்டனை?

லார்டு ரஸ்ஸலிடம் ஒருவர் வந்து ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி: “இரண்டு பெண்டாட்டிக்காரனுக்கு என்ன தண்டனை கடுமையானது?

ஒரு கணம் கூட தாமதிக்காமல் ரஸ்ஸல் பதில் கூறினார் இப்படி: “இரண்டு மாமியார்கள்!

*

கடவுளும் காமன்வெல்த்தும்!

ஆலிவர் க்ராம்வெல் முதன் முதலாக  காமன்வெல்த் நாணயத்தை அச்சடித்தார். ஒரே பெருமிதம் அவருக்கு! வயதான ஒருவர் அதைப் பார்த்தார்.

நாணயத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். ஒரு பக்கத்தில் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார், என்று பொறிக்கப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் ‘காமன்வெல்த் ஆஃப் இங்கிலாந்து என்று பொறிக்கப்பட்டிருந்தது.

முதியவர் அதைப் பார்த்து விட்டுக் கூறினார் இப்படி: “ஓஹோ! கடவுளும் காமன்வெல்த்தும் வெவ்வேறு பக்கத்தில் இருப்பார்கள் என்பது இப்போது தான் புரிகிறது!

*

எப்படி வண்ணக்கலவையை உருவாக்குகிறீர்கள்?

பிரபல ஓவியரான வில்லியம் ஆர்பனிடம் (Sir William Orpen) ஒருவர், “எப்படி உங்கள் வண்ணங்களை மிக்ஸ் செய்து வண்ணக் கலவையை உருவாக்குகிறீகள்? என்று கேட்டார்.

உடனடியாக அவரிடமிருந்து வந்தது பதில் : “மூளையுடன்!

*

மாமியாருக்கு மறு பெயர் என்ன?

நண்பர்கள் இருவர் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது ‘உன்  மாமியாரின் பெயர் என்ன என்று கேட்டதற்கு தன் மாமியாரின் பெயரைக் கூறிய முதல் நண்பர், ‘ஆமாம், எந்தப் பெயரைக் கேட்கிறீர்கள்? என்று சந்தேகமாகக் கேட்க இரண்டாமவர் கேட்டார்.

“ஓஹோ! அவருக்கு இரண்டு பெயர் உண்டா? அவருடைய இன்னொரு பெயர் என்ன? அதற்கு முதல் நண்பர் கூறினார் :

பொம்பளை ஹிட்லர் (Woman Hitler)

அந்த நண்பர் ஒரு சமயம் தனது நாயை மிருகத்திற்கு வைத்தியம் செய்யும் மிருகவியல் வைத்தியரிம் சென்று திரும்பிக் கொண்டிருந்ததைக் கண்ட அவரது நண்பர் கேட்டார்: “என்ன விஷயம்? நாயுடன் வெடினரி டாக்டர் வீட்டிலிருந்து திரும்புகிறீர்கள்?

அதற்கு நண்பர் பதில் சொன்னார்: “ இந்த எனது நாய் என் மாமியாரைக் கடித்து விட்டது. அதற்காகத் தான் சென்றேன்.

“ஓஹோ! நாய்க்கான நல்ல தூக்க மாத்திரை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டீர்களா?

ஊஹூம்! நாயின் பற்களைக் கொஞ்சம் கூர்மையாகத் தீட்டச் சொன்னேன். அவ்வளவு தான்!

***

tags- நடந்தவை , நம்புங்கள் – 17,