
சம்ஸ்கிருதச் செல்வம்-4 by S Nagarajan
4. பணக்காரனுக்கும் கவலை! யாசகனுக்கும் கவலை!!
காலம் கலியுகம். இந்த யுகத்தில் நடக்கும் கூத்துக்களை எல்லாம் கண்டு வியக்கிறார் பெரும் கவிஞர் நீலகண்ட தீக்ஷிதர்.
கலிவிடம்பனா என்ற அற்புதமான நையாண்டி நூலையே படைத்து விட்டார். நூறு பாக்கள் இதில் அடங்கியுள்ளன. பிரபலமான அத்வைத வேதாந்தியும் கவிஞரும் பேரறிஞருமான அப்பய்ய தீக்ஷிதரின் தம்பி நாராயண தீக்ஷிதரின் மகன் நீலகண்ட தீக்ஷிதர். மதுரையில் திருமலை நாயக்க மன்ன்னிடம் முதல் அமைச்சராக இருந்தவர்.
கலிவிடம்பனாவில் 76-வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது.
பணக்கார பிரபுவிடம் ஒரு ஏழை பிச்சைக்காரன் யாசகத்திற்கு வருகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறார் கவிஞர். அவன் முகத்தில் ஒரே கவலை தெரிகிறது. அவன் கவலை அவருக்குப் புரிகிறது. யாசகம் கேட்கிறோமே, பிரபு என்ன தருவான், எவ்வளவு தருவான், தருவானா என்றெல்லாம் அவனுக்குக் கவலை. அது புரிகிறது கவிஞருக்கு.
ஆனால் பணக்காரனைப் பார்த்தால் அவன் முகத்திலும் கவலை. அவனுக்கு என்ன கவலை? கவிஞர் வியக்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். கலியுகத்தின் அவலத்தை நினைத்து ஒரு பாடலைப் பாடுகிறார். பாடல் இது தான்:-
கிம் வக்ஷ்யதீதி தனிகோ யாவதுத்விஜதே மன: I
கிம் ப்ரக்ஷ்யதீதி லுப்தோ(அ)பி தாவதுத்விஜதே தத: II
(தனிகன் – பணக்காரன்)
பிச்சை கேட்க வந்தவன் என்ன கேட்கப் போகிறானோ என்று பணக்காரனுக்குக் கவலை; அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று கேட்க வந்தவனுக்கும் கவலை!
ஆக இருவருக்கும் கவலை! இது தானோ கலியுகம் என்பது?!
***************