
Post No. 8129
Date uploaded in London – 8 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அரிசிச் சோற்றையே மருந்தாகக் கொடுக்கும் அபூர்வ மருத்துவ முறை கேரளத்தில் உள்ளது. ஆயுர்வேத மருத்துவசாலைகள் இதைப் பயன்படுத்துகின்றன. இது பற்றிய ஒரு சுவையான சம்பவத்தைக் கேளுங்கள்.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி.ராய் (Dr P C Roy); அவர் முதலமைச்சராக இருந்தபோதும் கல்கத்தாவில் தனது வீட்டில் நோயாளிகளைப் பார்த்து மருந்து கொடுத்து வந்தார். ஒருவருடைய மகன் நோஞ்சானாகவும் வியாதிக்காரனாகவும் இருந்தான். அவருக்கும் ஒரு நாள் டாக்டர் ராய் அவர்களைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது. பையனை ஒரு பார்வை பார்த்தார் ராய். கவலையே படாதீர்கள் தினமும் காலையில் 2 ரசகுல்லாக்கள் கொடுங்கள் அதுதான் இந்த நோய்க்கு நல்ல மருந்து என்று சொல்லி அனுப்பினார் ( ரசகுல்லா என்பது கிட்டத்தட்ட குளோப் ஜாமுனைப் போன்றது. பால் பொருட்களால் ஆன இனிப்பு) .
ஆயினும் நோயாளியின் அப்பா விளக்கம் கேட்க முற்பட்டபோது டாக்டர் டாக்டர் ராய் சொன்னார்- உங்கள் மகனுக்குத் தேவையான அளவு புரதச் சத்து (Protein) உடலில் இல்லை. பாலிலும் சீஸ் (Cheese) போன்ற பாலாடைக் கட்டியிலும் கேசின் (casein) என்னும் புரதச் சத்து உள்ளது; அது உங்கள் புதல்வனுக்குத் தேவை என்று விளக்கினார்.

அரிசிச் சோற்றையே முக்கிய உணவாகக் கொண்ட மேற்கு வங்கத்தில் புரதச் சத்து குறைவு என்பதால் இந்த வைத்தியம் பொருத்தமானதே. ஆயினும் அரிசிச் சோற்றையே முக்கிய உணவாகக் கொண்ட கேரளத்தில் அந்த சோற்றையே மருந்தாகப் பயன்படுத்துவது விநோதமாகத் தோன்றும்.. ஆனால் அவர்கள் இப்படிப் பயன்படுத்தும் அரிசி விசேஷ வகை அரிசி ஆகும். நீவார என்னும் நெல் ‘வன நெல், குள நெல் அல்லது நீர் வாரம்’ என்று அழைக்கப்படும். இது பயிரிடாமலே காடுகளில் தானாக வளர்வதால் இதை பழங்காலத்தில் ரிஷி முனிவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதே போல ஷஷ்டிகா என்னும் அரிசி வகை 60 நாட்களில் பலன்தரும் நெல் வகையாகும் . இதையும் பயன்படுத்துவர் .
நீவார என்னும் அரிசியை யஜுர் வேதமும், பாணினியின் அஷ்டாத்யாயீயும் குறிப்பிடுகின்றன. ஆகையால் இவை 3000 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஷஷ்டிகா என்னும் 60 நாளில் வளரும் நெல் வகையையும் பாணினி குறிப்பிடுகிறார். ஆகையால் இவை அனைத்தும் குறைந்தது 2700 ஆண்டுகளாகத் தெரிந்தவையே.
ஷஷ்டிகா வகை அரிசியைக் கொண்டு ஆக்கப்படும் சோற்றை ஞவரகிழி என்ற பெயரில் மருந்தாக பயன்படுத்துவர் . இந்த வகை மருத்துவத்தை சரகர் , சுஸ்ருதர் போன்ற மருத்துவர்களும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத மருத்துவ நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

இந்த நெல்லுக்கு காரரிசி, செந்தினை என்னும் பெயர்களும் உண்டு என்பதை அகராதி மூலம் அறியமுடிகிறது
குறிப்பிட்ட வகை அரிசியினால் ஆன சோற்றை கிழியாகக் கட்டி — மூட்டை முடிச்சு- போல கட்டி உடம்பு முழுதும் மசாஜ் செய்வார்கள்; சோற்றை வடிப்பதற்கு முன் அதில் வேறு சில மூலிகைகளையும் சேர்ப்பார்கள். அதே போல உடலில் மஸாஜ் செய்யும்போது மூலிகைத் தைலங்களையும் தடவுகின்றனர். இதை ‘ஷஷ்டிகா அன்ன லேப’ என்றும் அழைப்பர் . இது முக்கியமாக மூட்டு வலி, வாத நோய்களுக்கு நல்ல பலன் தருகிறது
கிழி என்றால் முடிச்சாகக் கட்டுதல் என்று பொருள்; பொற்கிழி என்று நாம் கேள்விப்படுகிறோம். அது போல சாதத்தை துணியில் முடிச்சாகக் கட்டி அதைக் கொண்டு உடலில் ஒத்தடம் கொடுப்பர்.
நீவார கஞ்சியை உள்ளுக்கு சாப்பிடுவதும் ஒரு சிகிச்சை ஆகும். இது உடல் நோஞ்சாசனாக , எதைச் சாப்பிட்டாலும் உடல் தேராத ஆட்களுக்குத் தருவார்கள். பொதுவாகவே இதை கற்கட மாதத்தில் (ஆடி ) சாப்பிடுவதால் கார்கிட கஞ்சி, மருந்துக் கஞ்சி என்றும் குறிப்பிடுவர்
இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் மருத்துவ குணமுள்ள சுமார் 50 வகை நெல் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளையும் நாட்டு வைத்தியர்களும் பழங்குடி மக்களும் பயன்படுத்துகின்றனர். ஒரிசா, உத்தர கன்னட பகுதிகளில் கூட மக்கள் பல வகை நெற்பயிர்களை தோல் வியாதி சிகிச்சையில் உபயோகிக்கின்றனர்.
செலவே இல்லாமல் பயிரிட்டு, எதிர் விளைவு (side effects) எதுவும் இல்லாமல் சாப்பிட்டு குணம் அடையும் இந்த அரிய வகைச் சிகிசசை முறை பரவ வேண்டும் ; மருத்துவ குணம் உள்ள நெல் வகைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

பல பெயர்கள் அந்தந்த மொழி பேசுவோர் வாய் வழி வந்தமையால் அவற்றின் ஆங்கில வடிவத்தைப் பட்டியல் இடுகிறேன்.
Shastika , Nivara or Njavara (in Malayalam) nirvara or Senthinai (In Tamil)—used for Rheumatism and Neural disorders
Aalcha in Chattisgarh area used for curing Pimples
Baissor – treatment for chronic Head ache and Epilepsy
Gathuhan, Karhani, Kalimooch varieties used respectively for treating Rheumatism, Paralysis and Skin Disorders
In Jeypore area of Orissa, tribal people use Mehar, Sariphul in treatment for various ailments
In Uttara Kannada district of Karnataka, Atikaya variety as health tonic and Kari Bhatta to treat skin infections.
இவை அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புது டில்லியில் நடந்த சர்வதேச அரிசி மகாநாட்டில் (International Rice Congress) சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் ஆகும். ஆர்கனைசர் (Organiser,5-11-2006) பத்திரிகையில் இதன் சுருக்கம் வெளியானது .
தொல்பொருட் துறை நிபுணர்களும் இது பற்றி சுவையான தகவல்களைத் தருகின்றனர். இயற்கையாக காட்டிலும், மேட்டிலும் வளரும் இந்த பல வகையான தானியங்களின் மாதிரிகள் 8000 ஆண்டுகளுக்கு முந்தைய வசிப்பிடங்களில் (Advanced Mesolithic or Pre Neolithic Periods) ) இருந்து கிடைக்கின்றன என்பர் .
Tags — அரிசி மருத்துவம், ஷஷ்டிகா, நீவார, ஞவரகிழி .

–subham–