
Article written by London swaminathan
Date: 1 July 2016
Post No. 2933
Time uploaded in London :– 14-26
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.

அஷ்டாங்க மைத்துனம்
ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச
-விருத்த வசிஷ்டர்
பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.
இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258
சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.

கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.
பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.
பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)
அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.
ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.
பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.
ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில் – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!
–சுபம்–
You must be logged in to post a comment.