
Written by london swaminathan
Date: 22 March 2016
Post No. 2654
Time uploaded in London :– 12-20
(Thanks for the Pictures; they are taken from various sources)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

நேபாள நாட்டிற்குச் சென்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு ஐந்து இளம்பெண்கள் வரவேற்பு கொடுத்தது பற்றி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் நிறைய படங்களும் விரிவான செய்தியும் வந்துள்ளன. அவைகள் மூலம் பல இந்துமத வழக்கங்களை நேபாளியர், அர்த்தம் தெரியாமலேயே பின்பற்றுவது தெரிந்தது.
எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும் ‘பஞ்ச கன்யா’ என்பதை, ‘ஐந்து கன்னிப் பெண்கள்’ என்றும் ‘ஐந்து திருமணமாகாத பெண்கள்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு ஐந்து என்பது நேபாளியருக்கு அதிர்ஷ்டகர எண் என்றும் எழுதியுள்ளன. ஆனால் மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லை.
‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரனம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.
அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்
–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.
இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. சம்ஸ்கிருத ஸ்லோகம் தெரிகிறதோ, புரிகிறதோ என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களின் மகத்துவத்தை அறியாதோர் இல்லை.அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று கடைசி வரி கூறுகிறது.

சங்க இலக்கிய நூலான பரிபாடலில், மதுரை திருப்பறங்குன்றத்துக்கு வந்த கணவன் மனைவி இந்திரன் – அஹல்யை-கௌதம மகரிஷி ஓவியத்தைக் கோவில் சுவரில் கண்டு விவாதித்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
இங்கே இந்த ஐந்து பேரின் வரலாற்றை எழுதப்போவதில்லை. இதிலுள்ள இரண்டு சூட்சுமங்களை மட்டும் ஆராய்வோம். பட்டியலிலுள்ள அகல்யை, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி – யாருமே கன்னிப் பெண் அல்ல. எல்லோரும் திருமணமானவர்கள். பின்னர் ஏன் பஞ்சகன்யா என்று சொல்லுகிறோம்? அவர்கள், மனதளவில் ஒரு கன்னிப் பெண் போல தூய்மையானவர்கள். வேறு ஆடவரை எண்ணாதவர்கள்; ‘செக்ஸ்’ என்பதை, சிற்றின்பக் கருவியாகப் பயன்படுத்தாமல் வம்ச விருத்திக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். அகல்யைகூட இந்திரனால் ஏமாற்றப்பட்டவளே தவிர தானாக அவனை நாடிச் செல்லவில்லை. மேலும் அஹல்யை கதையில், பாபம் செய்தோருக்கும் விமோசனம் உண்டு என்ற தாத்பர்யமும் – உட்கருத்தும் – பொதிந்துள்ளது.
இரண்டாவது சூட்சுமம்- ஆரிய,திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது. இந்துமத புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் காச்யப ரிஷியின் பிள்ளை என்று சொன்னபோதிலும், வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு அடிவருடிய திராவிட இயக்கங்களும் அசுரர்களை திராவிடர் என்றும் தேவர்களை ஆரியர் என்றும் முத்திரை குத்தி எழுதிவருகின்றனர். மேற்கண்ட பட்டியலில் மண்டோதரி என்பார், ராட்சச ராவணனின் மனைவி! தாரா என்பவளோ, குரங்கின அரசன் வாலியின் மனைவி. இவர்களை, தினமும் நினைக்கவேண்டிய புனிதர் பட்டியலில் பழங்காலத்திலேயே சேர்த்து வேற்றுமை பாராட்டாது எல்லாப் பெண்களும் சொல்லிவருவது, ஆரிய-திராவிட இனவெறிப் பிதற்றல்வாதிகளின் மூஞ்சியில் கரி பூசுகிறது.
ஆக, நேபாளத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சகன்யா வரவேற்பு, இது எல்லாவற்றையும் நினைவுபடுத்தும். நேபாளத் தலைநகரான காட்மண்டில் ஒரு புத்தர் கோவில் உட்புறம் முழுதும் தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளதால் அதையும் பொற்கோவில் என்றழைப்பர் (எல்லோரும் அறிந்த பொற்கோயில் சீக்கியர்களின் அமிர்தசரஸில் உளது; அதைவிட அதிக தங்கம் உடைய கோவில் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவில்; என் முந்தைய கட்டுரைகளில் விவரம் காண்க). நேபாளத்தில் இந்த புத்தர் கோவிலுக்கும் ஹாரி சென்றுவிட்டு மஞ்சள் துண்டு, செங் குங்குமப்பொட்டு ஆகியவறுடன் கூர்க்கா வீடுகளுக்குச் சென்றார்.
ஆக இளவரசர் ஹாரியின் விஜயம், பஞ்சகன்யா பெருமையை அனைவருக்கும் நினைவுபடுத்தும்.
–சுபம்–




You must be logged in to post a comment.