அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜயந்தி. அண்ணலை நினைவு கொண்டு உத்வேகம் பெறுவோம்
ச.நாகராஜன்
ஒரு கால் உள்ளே ஒரு கால் வெளியே!
மஹாத்மா காந்திஜியின் வாழ்க்கையை உற்றுக் கவனிப்போர் ஏராளமான அதிசயங்க:ளைக் காணலாம். சத்தியத்தின் அடிப்படையில் “சொல்வதைச் செய்; செய்வதைச் சொல்” என்பதை மெய்யாக்கியவர் மஹாத்மா.
அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் பொருள் பொதிந்த கணமாக இருப்பது மனித குலத்திற்கான சிறந்த படிப்பினையாக அமைகிறது.
பாரபட்சமற்ற நடுவு நிலைமைக்கு அந்த வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் காட்டலாம்.உதாரணத்திற்கு இரண்டு:
உப்பு சத்யாக்ரஹம் ஆரம்பிக்க இருந்த தருணத்தில் ஒரு நாள். நேரப்படி நடக்கும் சபர்மதி ஆசிரமத்தில் அனைத்துக் காரியங்களும் செவ்வனே நடந்து கொண்டிருந்தன. கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற ஆசிரமத்தில் பிரார்த்தனைக்கான மணி அடிக்கப்பட்டால் கதவுகள் மூடப்படும். ஒரு விநாடி தாமதமாக வந்தால் கூட உள்ளே செல்ல முடியாது. தனது வருகையை ஆசிரமத்தில் இருந்தோர் பதிவு செய்ய முடியாது. ஒரு நாள் பிரார்த்தனைக்கான மணி ஒலித்தது. மஹாத்மா கதவருகே விரைந்தார். ஒரு கால் உள்ளேயும் ஒரு கால் வெளியேயும் இருந்தது.கதவை மூடிக் கொண்டிருந்தவர் காந்திஜியை உள்ளே வர அனுமதித்தார்.
அன்று பிரார்த்தனை முடிந்தவுடன்,” இன்று நான் விதியை மீறி விட்டேன்.உடலின் பெரும் பகுதி உள்ளே இருந்தாலும் கூட எனது ஒரு கால் கதவுக்கு வெளியே இருந்தது .கதவருகே இருந்த காப்பாளர் என்னை உள்ளே அனுமதித்து சலுகை காட்டி இருக்கக் கூடாது. நானும் கூட வெளியே தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் கூட எனக்காக நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்து விட்டேன். ஆனால் இப்படிப்பட்ட சலுகை ஒரு நோயாளி அல்லது அவரைக் கவனித்துக் கொண்டிருப்பவர் தவிர வேறு யாருக்கும் அளிக்கப்படக்கூடாது” என்றார்.
காந்திஜி தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எப்போதுமே கடைப்பிடித்ததில்லை. அன்றிலிருந்து பிரார்த்தனை திறந்த வெளி மைதானத்தில் நடக்க ஆரம்பித்தது.
தர்மர் அளித்த நீதி
இந்த விஷயத்தை மஹாபாரத சம்பவம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பீமனுக்கும் புருஷாமிருகத்திற்கும் நடந்த ஓட்டப்பந்தயத்தில் புருஷாமிருகம் தன்னை ஓட்டத்தில் வென்று விட்டால் பீமனை விட்டு விடுவதாகக் கூறவே பீமன் பந்தயத்திற்கு இணங்கினான். பந்தயத்தில் பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியேயும் ஒரு கால் எல்லைக்கு உள்ளேயும் இருக்கவே புருஷாமிருகம் பீமனைத் தோற்றதாகக் கூறியது.பீமனோ வெளியே இருந்த ஒரு காலைக் காட்டித் தான் வென்றதாகக் கூறினான். இதற்கு நடுவராக இருந்த தர்மபுத்திரர் தீர்ப்பு சொல்ல வேண்டி இருந்தது. அவர் தீர்க்கமாக புருஷாமிருகமே வென்றதாக அறிவித்தார். தம்பிக்காக சலுகை காட்டவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்தது. நடுவுநிலைமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை கூற விழைந்த குருபாததாசர் தனது குமரேச சதகத்தில் 61ஆம் பாடலில் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுகிறார்.
வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்
வருமென்றும் நேசரென்றும்
வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன
வானென்றும் ஏழையென்றும்
இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்
எள்ளள வுரைத்திடாமல்
எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
ஏற்கச்ச பாசமதமாம்
முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்
மொழிந்திடின் தர்மமதுகாண்
முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன்தருமர் சொன்னதலவோ?
மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தைவடிவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இப்படி வியந்து “முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன் தருமர் சொன்னதலவோ?” என்று தர்மபுத்திரரின் நீதியை வியந்து குருபாததாசர் கூறுகிறார். இதே ‘ஒரு கால்வெளியே ஒரு கால் உள்ளே’ சம்பவத்தில் தன்னையே விதியை மீறியதாக அறிவித்துக் கொண்டார் மஹாத்மா!
நமது காலத்திலேயே வாழ்ந்த மஹாத்மா ஒவ்வொரு செயலிலும் பெரிய அறப்பண்புகளை “வாழ்ந்து” காட்டினார். எதிலும் நடுவு நிலைமை;எப்போதும் நடுவு நிலைமை தான் அவருக்கு!

படேலின் புகாரும் மஹாத்மாவின் தீர்ப்பும்
இன்னொரு சம்பவம்:
பெண்களுக்கான ஒரு கல்வி நிலையத்தில் மேலாளராக இருந்தவரைப் பற்றி அங்குள்ள மாணவிகளிடம் அவர் தவறாக நடப்பதாகப் புகார் மஹாத்மாவிடம் வந்தது. புகார் செய்தவர் வேறு யாருமில்லை, சர்தார் வல்லபாய் படேல் தான்.புகாருக்கு ஆளானவரோ பெரிய சேவை மனப்பான்மை கொண்டவர். எப்போதுமே இரு பக்க நியாயத்தையும் கேட்டுத் தான் தனது இறுதித் தீர்ப்பை வழங்குவார் மஹாத்மா.
மேலாளரோ தன் மேல் வேண்டுமென்றே புகார் கூறப்பட்டிருக்கிறது என்றும் சர்தார் அனைவரும் எப்போதும் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையே விரும்புபவர் என்றும் தனது ஆக்கபூர்வமான சுதந்திரமான செயல்பாட்டை அவரால் பொறுக்க முடியவில்லை என்றும் கூறினார்.
இரு தரப்பினருமே மஹாத்மாவையே விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இருக்கின்ற அரசியல் நிலைமையில் சேவாகிராமத்திலிருந்து இந்த விஷயத்திற்காக குஜராத் செல்லவும் மஹாத்மாவால் முடியவில்லை. அந்தக் கல்வி நிலைய மாணவிகளைத் தன் இருப்பிடத்திற்கு வரச் சொல்லி விசாரிக்கலாம் என்றாலோ அதற்காக ஆகும் பணச்செலவு ஏராளம் என்பதால் அதுவும் சரியல்ல. மஹாத்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக ஒருவரை குற்றம் சாட்டப்பட்டவர் பரிந்துரைத்தார். இறுதித் தீர்ப்பைத் தான் வழங்குவதாக மஹாத்மா தெரிவித்தார். ஆனால் விசாரணையைச் செய்ய இருப்பவர் ஹிந்து மஹாசபையின் உறுப்பினர் என்றும் அவர் காங்கிரசுக்கு எதிரானவர் என்றும் ஆட்சேபணை கூறப்பட்டது.
ஆனால், “மஹாத்மாவோ அவர் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரானாலும் சரி அப்பழுக்கற்ற ஒழுக்கம் உடையவர். சர்தார் படேல் துணிச்சல்காரர். அவரை விசாரணை அதிகாரியாக நியமிப்பதை ஏற்றுக்கொள்வார்” என்றார்.
சர்தாருக்குத் தந்தி அடிக்கப்பட்டது. அவர் விசாரணை செய்பவரின் பெயரை ஏற்றுக் கொண்டார். விசாரணை முடிந்தது. அனைத்துத் தகவல்களையும் அலசி ஆராய்ந்த மஹாத்மா தன் தீர்ப்பைக் கூறினார்.
அதில்,” மாணவிகள் மேலாளருக்கு எதிராகப் புகார் கூறினாலும் அவர்கள் அதை நேரில் தெரிவிக்க முடியாதென்றும் குறுக்கு விசாரணைக்கு உட்பட முடியாதென்றும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டிருப்பவரோ கத்தியவாடிலும் குஜராத்திலும் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை மாற்று மதத்திற்கு மாற்றும் முயற்சியை எதிர்த்துப் போராடி தனது சேவை மூலம் அவர்களைக் காப்பாற்றியவர். அவரைச் சரிபார்க்க முடியாத புகார்களின் அடிப்படையில் குற்றமிழைத்தவராக அறிவிக்க முடியாது என்று விசாரணைக் குழு கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தன் நிலையை விளக்க ஒரு சந்தர்ப்பம் அளித்தால் தான் நீதியை அளிக்க முடியும். ஆகவே இந்த கேஸை நான் தள்ளுபடி செய்கிறேன். என்றாலும் கூட மேலாளர் தன்னை ஆத்மசோதனை செய்து கொண்டு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைச் சரி செய்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
சர்தார் வல்லபபாய் படேல் தனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் அவருக்கு ஆதரவாக தீர்ப்பைக் காந்திஜி கூறவில்லை என்பது அவரது நேர்மை தவறாத நடுவு நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
இப்படி மஹாத்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்கள் அவர் ஏன் மஹாத்மா என்று போற்றப்பட்டார் என்பதைப் பறை சாற்றுகின்றன.
நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியம்
நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் மஹாத்மா காந்திஜி.
அவரைப் போற்ற வேண்டுமெனில் அந்த அறப்பண்புகளை வாழ்ந்து காட்டும் முயற்சியை ஒவ்வொருவரும் எடுப்பதே சரியாக அவரைப் போற்றும் முறையாக அமையும்.
வாழ்க அவர் புகழ் என்று வாழ்த்துவதோடு நில்லாமல் வாழ்ந்து காட்ட முயல்வோமாக!
((குறிப்பு: இந்த இரு சம்பவங்களையும் ராமநாராயண் சௌதரி தனது Bapu as I saw Him என்ற ஆங்கில நூலில் விளக்கமாக எழுதியுள்ளார்.)
********************



You must be logged in to post a comment.