யானைக்கு தோல்வி! பூனைக்கு வெற்றி!! இந்திய வரலாற்றில் சோக சம்பவம்!
By London Swaminathan
Post No.902 dated 12th March 2014.
‘’யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்’’– என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதற்குப் பல பொருள்கள் கூறுவர். எல்லோருக்கும் தெரிந்தது:– பெரிய உருவமும் பலமும் உடைய இன்று நீ வெல்லலாம் ஒரு நாள் ‘’யானைக்கும் கூட அடி சறுக்கும்’’ என்பது போல நீ வீழ்வாய். அப்போது நான் வெல்லுவேன் என்பதாகும். மற்றொரு பொருள்:- ஆநெய்க்கு (பால்) ஒரு காலம் என்றால் பூநெய்க்கும் (தேன்) ஒரு காலம் உண்டு. ஆனால் இது வலியப் போய் பொருள் கொள்வதாகும். எனக்குச் சரியெனப் படவில்லை. ஆனால் கீழேயுள்ள செய்தியைப் படித்தபின்னால் உங்களுக்கு இந்தப் பழமொழிக்கு புதிய பொருள் கிடைக்கும்!!
நிலத்தில் வசிக்கும் பிராணிகளில் மிகவும் பெரியது யானை. நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் உடையது. காட்டில் வேண்டுமானால் சிங்கம் புலியுடன் சண்டை இட்டுச் சில நேரம் தோல்வி அயைலாம். யானை பற்றிய நூறு பழமொழிகளையும் யானைக்கு உண்டான நாற்பதுக்கும் மேலான தமிழ், வடமொழிச் சொற்களையும் யானை தொடர்பான பல அதிசயச் செய்திகளையும்– (பட்டத்து யானை மாலை போட்டு கரிகாலனையும், மூர்த்தி நாயனாரையும் மன்னர்களாக்கியது முதலியன) —நிறைய இந்த பிளாக்—கில் எழுதிவிட்டேன்.
Hannibal crossing the Alps with elephants.
இந்தியா மீது அலெக்ஸாண்டர் படை எடுக்காமல் திரும்பிபோனதற்குக் காரணம் மௌர்ய சந்திர குப்தனின் மகத்தான படை பலமாகும். அதைக் கேட்டவுடன் அவனுடைய துருப்புகள் இனி சண்டை போட மாட்டோம், ஊருக்குப் போய் பிள்ளை குட்டிகளைப் பார்க்கவேண்டும் என்று கிளம்பிவிட்டனர். டியோடரஸ் சிகுலஸ், ப்ளுடார்ச் போன்ற வரலாற்று எழுத்தர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூல்களில் சந்திரகுப்தனிடம் 2 லட்சம் காலாட்படை வீரர்களும், 20,000 குதிரைகளும், 2000 தேர்களும், 4000 யானைகளும் இருந்ததாக எழுதி வைத்துள்ளனர். சிலர் 80,000 குதிரைகள், 8000 தேர்கள் 6000 யானைகள் என்று நாற்படைகளையும் புகழ்ந்துள்ளனர். இந்தியாவில் போரஸ் (புருஷோத்தமன்) என்ற மன்னனிடம் இருந்த யானைப் படையும் அவனது வீரமும் அலெக்ஸாண்டரை அசத்திவிட்டது. உடனே வென்ற இடத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான.
ஹனிபால் என்ற அரசன் கி.மு. 218 ல் ஆல்ப்ஸ் மலை வழியாக இந்திய யானைகளை ஐரோப்பாவுக்கு முதல் முதலில் கொண்டு சென்று வரலாற்றில் அழியாத பெயர் பெற்றான். மஹாபாரத போர் முனையில் ‘அஸ்வத்தாமா’ என்ற யானை இறந்தது பற்றி தர்மன் ‘’பொய்’’ சொன்னவுடன் அஸ்வத்தாமா என்ற தனது மகன் தான் இறந்துவிட்டான் என்று துரோணரும் வில்லுக்கு இரையானர். இதனால் போரின் போக்கே மாறிவிட்டது.
Maharaja of Mysore in Dasara procession
தமிழில் 96 பிரபந்த வகைகளில் ஒன்று பரணி பாடுதல். இப்படி ஒரு மன்னன் மீது பரணி பாட வேண்டும் என்றால் அந்த மன்னனோ அவனது படைத்தலைவனோ ஆயிரம் யானைகளைப் போரில் கொல்ல வேண்டும். அவந்திவர்மன் என்ற கலிங்க நாட்டு அரசனை வென்ற கருணாகரத் தொண்டைமானைப் படைத் தளபதியாகக் கொண்ட குலோத்துங்க சோழன் மீது கலிங்கத்துப் பரணி பாடினார் அவைப் புலவர் ஜெயம்கொண்டார். ஆக, யானை என்பது மாபாரத காலம் முதல் மைசூர் மஹாராஜா ‘தஸரா’ ஊர்வலம் வரை 5000 ஆண்டுகளாக இந்திய வரலாற்றில் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது.
இந்தியாவின் வடமேற்கு மூலையில் இருப்பது சிந்து மாகாணம். இந்துக்களுக்குப் பெயர் கொடுத்த நதி! சிந்து சமவெளி நாகரீகத்தின் பிறப்பிடம். அந்த இடம் இப்போது பாகிஸ்தானின் பகுதியாகிவிட்டது. இதில் முஸ்லீம் படைகள் நுழைந்தது கி.பி 712 ஆம் ஆண்டில் நடந்தது. முகமது பின் காசிம் என்பவன் அராபிய படைகளுக்குத் தலைமை தாங்கி இந்தியாவில் காலடி எடுத்துவைத்தான். அப்புறம் 700 ஆண்டுகளுக்கு துயரக் கதைதான். விஜயநகர சாம்ராஜ்யமும் சிவாஜியின் இந்து சாம்ராஜ்யமும் தலை எடுக்கும் வரை இது ஓயவில்லை.

Elephant with howdah ( Ambari in Tamil)
Following is taken from ‘History of Sind’ by Dr Mumtaz Husain Pathan, Hyderabad, Sind, Pakistan)
பூனைகள் வெற்றி !!
முகமது பின் காசிம் வந்தபோது சிந்துமாகானத்தில் ராய் தஹிர் என்ற இந்து மன்னன் ஆண்டுவந்தான். ரவார் என்ற இடத்தில் நடந்த போரில் (battle of Rawar, Rai Dahir ) இவன் வீராவேசத்துடன் போரிட்டபோதும் இவனது யானைகள் மிரண்டதால் அவன் கொல்லப்பட்டான். அவன் கையில் கத்திகளை இணைத்துச் செய்த ஒரு சக்ராயுதம் வைத்திருந்தான். அதை வீசினால் அவன் எதிரே வரும் குதிரைகள், வீரர்களின் தலைகள் சீவப்பட்டு பறந்து விடும் என்பதால் யாரும் அவனை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இதற்கு முன் காதிசிய்யா (battle of Qadisiyyah) என்னும் இடத்தில் நடந்த போரில் அராபியர்களை மடக்க ஈரானியர்கள் (பாரசீகர்) பெரிய யானைகளை போரில் முன் நிறுத்தினர். ஆனால் அராபியர் கையாண்ட தந்திரங்களை (Arab geographer al- Masudi, Harun Ibn Musa, author of ‘’Chachnamah’’) அராபிய புவியியல் வல்லுனர் அல்-மசூதி, அராபிய எழுத்தாளர் ஹரூன் இபின் மூசா, சாக்நாமா புத்தக ஆசிரியர் ஆகியோர் விரிவாக எழுதிவைத்தனர்.
அராபியர் மூன்று விதமான தந்திரங்களைக் கையாண்டனர்:
1.தற்கொலைப் படைகளை ஏவி யானைகளின் துதிக்கைகளை வெட்டினர்.
2. பூனைகளை திடீரென மூட்டைகளில் இருந்து அவிழ்த்துவிட்டனர். முஸ்லீம் இல்லாத பாரசீகப் படைஅள் பன்றிகளையும் போர்க்களத்தில் விரட்டிவிட்டனர்.
3. நாப்தா (தீயைக் கக்கும்) அம்புகளை யானைகள் மீது எய்தனர்.
4. வெடிச் சப்தங்களை உண்டாக்கினர்.
இந்தக் காரணங்களினால் யானைகள் மிரண்டு, சொந்தப்படைகளையே மிதித்து அவர்களைச் சின்னாபின்னமாக்கின. பல யானைகள் நதிகளையும் நீர் நிலைகளையும் நோக்கி ஓடியவுடன் அராபியர்கள அவர்களை எளிதில் சுற்றி வளைத்தனர். சிந்து நதிக்கரையில் இந்தச் சண்டைகள் நடந்தன.
ரவார் யுத்தம் பற்றிய செய்தி வருமாறு:
அராபியப் படைகள் தீ அம்புகளை (நாப்தா) ராஜாவின் யானை மீது எறிந்தவுடன் யானைக்கு காயங்கள் ஏற்பட்டன. அதன் மீதிருந்த அம்பாரி தீப்பிடித்தவுடன் யானை நதிக்குள் இறங்கியது. அராபிய வீரர்கள் சூழ்ந்து கொண்டு ராஜாவின் மார்பு மீது அம்பு வீசினர். அவர் வீழ்ந்தவுடன் அவரது தலையைச் சீவி முகமது பின் காசிமிடம் ஒப்பைத்தனர். ராஜா இறந்த செய்தி அறிந்தவுடன் இந்துப் படைகள் பின்வாங்கின. பல இடங்களில் பூனைகளையும் ஏவியவுடன் ஏது செய்வதென்று அறியாமல் யானைகள் குழப்பம் அடைந்து பின்வாங்கின.
மஹாபாரத , ராமாயண காலத்தில் இந்துக்கள் நடத்தியது தர்ம யுத்தம். ராவணன் கையில் ஆயுதம் இல்லை என்று அறிந்த இராமன், ‘’இன்று போய் நாளை வா’’— என்று ராவணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். ராஜா தோற்றுப் போனால் அந்தக் கட்சி தோற்றதாக அர்த்தம். இந்தப் பலவீனங்கள் எல்லாம் முஸ்லீம் படை எடுப்பாளர்களுக்கும், வெள்ளைக்காரகளுக்கும் தெரிந்ததால் நம்மை அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆண்டனர்.

US President John F Kennedy’s wife Jackie Kennedy
ஆனால் இதைவிட பெரிய துரோஹம் நமது படைகளில் இருந்த ‘’எட்டப்பர்கள்’’. உள்ளூர் போட்டா போட்டி காரணமாக எதிரிகளுக்கு ரஹசியங்களை அறிவித்து நம்மவர்களையே தோல்வியுறச் செய்தனர். இதையும் முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்தனர். சிந்து மாகாண வரலாற்றை எழுதும் பாகிஸ்தானிய வரலாற்று ஆசிரியர் இவைகளை அந்த நாட்டுப் பாட புத்தகத்தில் தொகுத்துத் தந்துள்ளார். ஆனால் ராஜா தஹிர், அவருடைய மகன் ஜஸியா ஆகியோர் வீராவேசமாகப் போரிட்டதையும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.
இறுதியில் இந்தியாவுக்குள் வெளி நாட்டோர் ஆட்சியை ஏற்படுத்திக் கொடுத்த தளபதி முகமது பின் காசிமை பாக்தாத்துக்கு உயிருடன் மாட்டுத்தோலில் வைத்து தைத்து அனுப்பி அங்கே சித்திரவதை செய்து கொன்றுவிட்டனர். காரணம் பாக்தாத் ராஜ விரும்பிய பெண்ணை இவர் ஏற்கனவே திருமணம் முடித்தார் என்பதே!!

இன்னும் பல சுவையான விஷயங்கள தனிக் கட்டுரையில் தருகிறேன்.
Contact: swami_48@yahoo. com




You must be logged in to post a comment.