மகளைப் பலி கொடுத்து அணையைக் காத்த சோழியாண்டான்! (Post.7730)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7730

Date uploaded in London – – 23 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பெற்ற மகளைப் பலி கொடுத்து அணையை நிலைத்திருக்கச் செய்த இம்முடிச் சோழியாண்டான்!

ச.நாகராஜன்

ஒரு உண்மை வரலாறு இது.

கொங்கு மண்டலத்தில் வட பரிசார நாட்டுப் பால வேளாளரில் விஜய விக்கிரம இம்முடிச் சோழியாண்டான் என்பவன் அவிநாசியப்பரின் துவஜ ஸ்தம்ப மண்டபம் உள்ளிட்ட பல திருப்பணிகளைச் செய்தவன். இவன் மங்கலம் என்னும் ஊரின் அருகில் நொய்யல் ஆற்றில் அணை ஒன்றைக் கட்டினான்; ஆனால் அது நிற்கவில்லை. உடைந்து உடைந்து போயிற்று.

என்ன செய்வதென்று அவன் திகைத்திருந்த வேளையில் ஒரு சிறுமி பேரில் சந்நதம் வந்தது; ஒரு தலைக் கன்னிகையைப் பலி கொடுத்தால் அணை உடையாது நிற்கும் என்றது.

பல நாட்களுக்குப் பல உயிர்கள் பிழைத்தற்கான ஒரு தர்மத்திற்கென ஒரு பெண்ணைப் பலி கொடுப்பது அரிதா என்ன என்று எண்ணிய இம்முடிச் சோழியாண்டான்  தான் பெற்ற அருமையான கன்னிகையைப் பலி கொடுத்தான்; அணையைக் கட்டினான். அது உடையவே இல்லை.

அவன் மகிழ்வெய்தினான். இவனது சாஸனம் அவிநாசியில் இருக்கிறது.

முகுந்தை என்னும் குரக்குத் தளியிலும் இருக்கிறது.

சாஸனத்தின் ஒரு பகுதி இதோ:

……. ஸ்ரீ விஜய ……சாலிவாஹன சக வருஷம் ஆயிரத்து நானூற்று இருபத்து ஒன்றுக்கு மேல் …. வருஷம் கார்த்திகை மாதம் …. முகுந்தனூர் உடையார் குருக்குத்தளி தம்பிரானார்க்கு ஸ்ரீ வீரனஞ்சராய உடையர் சீர்பிரதானன் (தெனைக்) வெளைக்கணாம்பை நாட்டு எம்மன் காலத்து நஞ்சரை செட்டியார் மகள் ஒன்னக்களச் செட்டியார் ….. பண்ணிக்கொடுத்தபடியாவது முகுந்தனூர் நஞ்சராயன் குள கீழ் நிலத்து உடையவர் மானியத்து தொட்டக்கட்டையில் கொவிபைவுரிக்கு மேற்கு குளவாய்க்காலுக்கு கிழக்கு சோழீஸ்வரமுடையார் கோயிலுக்கு வடக்கு கோட்டைக்கு தெற்கு இந்த சது சீமையில் உடையவர் பண்டாரத்துக்கு கிரயம் நாலு பொன் கொடுத்து நாம் கொண்ட நிலம் சலகை ஒன்றுக்கும் இருநூறு தென்னம்பழம் போட்டு தோட்டம் பண்ணி இந்தத் தோட்டத்தினாலுண்டான ஆதாயமும் உடையவர் அங்கரங்கபோகத்துக்கு நடத்தக் கடவதாகவும். இந்த ……வட பரிசார நாட்டுக் கவுண்டர்கள் செவ்வூர் அண்டா மன்றாடி மக்கள் சோழியாண்டான் சூரியதேவன் மசான உள்ளிட்டார் மக்கள் மக்கள் சந்திராதித்தவரை நடத்திவரக் கடவதாகவும்.

இந்த அரிய வரலாற்றை கொங்கு மண்டல சதகம் 86வது பாடலில் பெருமையுடன் பதிவு செய்கிறது.

பாடல் இதோ:-

பாயு மணைநிற்க வேண்டி மகளைப் பலிகொடுத்துந்

தோயுந் திருப்புக் கொளிகோயிற் நற்பணித் தொண்டுமிசை

ஆயும் பொருளந்தை யிம்முடிச் சோழியாண் டானளியின்

மாயன் வடபரி சாரநா டுங்கொங்கு மண்டலமே.

பாடலின் பொருள் ; – நொய்யல் ஆற்றில் அணை அடிக்கடி உடைந்து போனது. அது உடைந்து போகாது நிலைத்திருக்கக் கருதித் தான் பெற்ற மகளைப் பலி கொடுத்தும், அவிநாசி ஈசர் கோயிலில் கல் வேலையும் பிற திருத்தொண்டும் செய்த பொருளந்தை குலத்து வந்த இம்முடிச் சோழியாண்டானது உரிமையான வடபரிசார நாடும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.

தனது அருமை மகளைப் பலி கொடுத்து அணையை நிலை நிறுத்திய இம்முடிச் சோழியாண்டானைப் பற்றி இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?!

மகத்தான தியாகி, தமிழ்ப் பெருமகன், பொதுநலத் தொண்டன், மாபெரும் தலைவன் இம்முடிச் சோழியாண்டானைப் போற்றிப் புகழ்வோம்!

tags— அணை , மகள், பலி , சோழியாண்டான் — 

****