
ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)
Written by London Swaminathan
Date: 4 April 2018
Time uploaded in London – 17-51 (British Summer Time)
Post No. 4881
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பழமொழி விளக்கக் கதை
எல்லோருக்கும் பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தியாஜ்யம் என்றால் பலருக்கும் தெரியாது.
தியாஜ்யம் என்றால் நல்ல காரியங்கள் செய்யக்கூடாத காலம்.
‘ஒவ்வொரு நாளிலும் கழிவாகிய மூன்றே முக்கால் நாழிகை’ என்று ஆனந்த விகடன் அகராதி கூறும். ‘நக்ஷததிரங்களில் சுபகாரியம் செய்யக்கூடாத காலம்’ என்று அபிதான சிந்தாமணி சொல்லும்.

‘த்யஜ’ என்ற ஸம்ஸ்க்ருத வினைச் சொல்லுக்கு ‘விடுதல்’ என்று பொருள். எல்லாவற்றையும் விட்டவரை ‘தியாகி’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லுகிறோம். தமிழிலும் அந்தச் சொல் எல்லோருக்கும் தெரிந்ததே.
ஒரு நாளில் 60 நாழிகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 24 நிமிடங்களுக்குச் சமம். ஆக ஒரு நாளில் விலக்கப்பட்ட காலம் என்பது மிகவும் குறைவே .பஞ்சாங்கத்தில் நல்ல நேரமும், அல்லது நல்லது, கெட்டது இல்லாத சம நிலைக் காலமே அதிகம். அப்படி இருந்தும் சிலர் எப்போதும் கெட்ட காலம் என்றே கருதுவர்.
இதைக் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம். சிலர் முழுக்க முழுக்க Negative நெகட்டிவ் – எதிர் மறைச் சிந்தனை உடையவர்கள். எதைச் சொன்னாலும் அதில் குறையை மட்டுமே எடுத்துக் காட்டுவர். நாவிலிருந்து நல்லதே வராது.
மழை பெய்தால் விமானம் பறக்காது என்பர். இடி இடித்தால் விமானம் கீழே எரிந்து விழும் என்பர்.
வட இந்தியாவில் ரயில் விபத்து நடந்தால் சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை ரத்து செய்துவிடுவர். இப்படித் தான் மட்டும் கெட்டது போதாது என்று நிற்காமல், மற்றவர்களுக்கும் துர் போதனை செய்வர். சுருக்க மாகச் சொன்னால் வாயில் நல்லதே வராது.
மதுரையில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறம் ‘எல்லீஸ் நகர்’ என்று பழைய பிரிட்டிஷ் துரையின் பெயரில் ஒரு பொட்டல் காடு இருந்தது. அங்கு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டி விளம்பரம் செய்தது. எனக்கும் ஏ.என்.சிவாரமனின் (Editor, Dinamani) மகனுக்கும் பத்திரிக்கையாளர் கோட்டாவில் (ஒதுக்கீட்டில்) போட்டியே இல்லாமல் வீடு கிடைத்தது.
என்னுடன் வேலை பார்த்த மற்றொரு சப் எடிட்டர் வீட்டுக்கு நல்ல செய்தி சொல்லப் போனேன். அவர் தனது தந்தை பற்றி முன்னரே எச்சரித்திருந்தார். அவர் கண்களுக்குப் படாமல் மாடிக்கு வரும்படி சொல்லி இருந்தார். இருந்த போதிலும் அவர் தந்தை என் கண்ணில் பட்டு விட்டதால், மரியாதையின் பொருட்டு “மாமா சௌக்கியமா?” என்று கேட்டுவிட்டேன்.
அவ்வளவுதான்!
“ஏண்டா! சுடுகாட்டில் வீடு வாங்கி இருக்கிறாயாமே!”– என்று துவங்கி விட்டார். அவர் சொன்னது ஓரளவு உண்மைதான். அந்த எல்லீஸ் நகர் கிறிஸ்தவர்களுக்கு இடுகாடாகவும் மற்றொரு பக்கம் இந்துக்களுக்குச் சுடுகாடாகவும் இருந்தது. ஆயினும் நான் சிரித்துக் கொண்டே ‘’ஆமாம் ஆமாம் சிவனுடைய பூமியில் வீடு கிடைத்தது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிக்கொண்டு மாடிக்குப் போனேன்.
அந்த சஹ ஊழியர்- சப் எடிட்டர் என்னைக் கடிந்து கொண்டார். நான் தான் என் அப்பா கண்ணில் படாமல் ஓடி வா என்றேனே’ என்றார் நான் சிரித்து மழுப்பி விட்டேன்.
சிலருக்கு நல்லதையே காண முடியாது. எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த சுமாமிஜி, அந்தப் பெரியவரை – துரியோதணன் என்று அழைப்பார். அப்படியானால் என்ன என்று நாங்கள் சிரித்துக் கொண்டே கேட்போம். பெரிய செல்வந்தன் என்று சொல்லி சுவாமிஜி மழுப்பி விடுவார். பின்னர்தான் எனக்கு மஹாபாரதக் குட்டிக்கதை தெரிய வந்தது.

குட்டிக்கதை
ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரனையும் (யுதிஷ்டிரன்) துரியோதணனையும் அழைத்து உலகில் உள்ள நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று அனுப்பினார். 24 மணி நேரம் கழித்து இருவரும் திரும்பி வந்தனர்.
என்ன! கண்டு பிடித்தீர்களா? என்று கண்ணன் கேட்டான்.
தருமர் சொன்னார்: கண்ணா, உலகில் கெட்டவரே இல்லையே; எப்படி எனக்கு இப்படி ஒரு கஷ்டமான பணியைக் கொடுத்தாய்? யாரை நான் கெட்டவர் அல்லது நல்லவர் என்று சொல்ல முடியும்; எல்லோரும் நல்லவர்களே என்று சொல்லி ஒவ்வொருவரின் நல்ல குணங்களையும் விளக்கத் துவங்கிவிட்டார்.
துர்யோதணனோ நேர் மாறாக, கண்ணா! இது என்ன அசட்டுப் பிசட்டு என்று நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று என்னை அனுப்பினாய். அவ்வளவு பெயர்களும் அயோக்கியர்களே என்று எல்லோருக்கும் அயோக்கியப் பட்டம் கட்டினான்.
கண்ணன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு இருவரையும் சென்று வாருங்கள் என்று அனுப்பினார்.
உலகில் பல அயோக்கியர்கள் மற்றவர்களை அயோக்கியர்கள் என்று அழைக்கும் போதே நமக்கு அந்த கீழ்ஜாதிகளின் தன்மை புரிந்து விடுகிறது.
ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் கெட்ட காலம் (தியாஜ்யம்= விலக்கப்ப்ட்ட காலம்) என்பது போல இவர்களுக்கு தங்களைத் தவிர மற்ற எல்லோரும் அயோக்கியர்களே.
ஆகவே Negative Vibrations நெகட்டிவ் வைப்ரேஷன் உடையோரைச் சந்திக்காமல் இருப்பதே நலம். அவர்களுடைய வியாதி சில நேரத்தில் நம்மையும் தொற்றிக் கொள்ளக் கூடும். ஏனெனில் கல்யாணத்துக்காக ஜாதக் கட்டைக் கையில் தூக்குவோர் கூட ஏதேனும் நெகட்டிவ்/ வேண்டாத செய்தி வந்தால் அப்பொழுது அக்காரியத்தை நிறுத்தி விடுவர்; அல்லது அப்போது கைக்குவந்த ஜாதகத்தை ஒதுக்கி விடுவர்.
ஆகவே கனியிருப்பக் காய் கவறாமல் இனிய சொல்லைச் சொல்ல வேண்டும். மங்களச் சொற்களைச் சொல்ல வேண்டும். எப்போதும் இப்படி எண்ணிப் பழகினால்தான் உரிய நேரத்தில் உரிய சொற்கள் வரும்.
பல அரசியல்வாதிகள், திருமணக் கூட்டங்களில் அபசகுன, அமங்களச் சொற்களைப் பேசுவதை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்; நகைக்கிறோம்!!!


பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
–subham–