Article No.1770; Date 3rd April 2015
Written by S NAGARAJAN
Uploaded at 7-18 am (London Time)
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 16
ச.நாகராஜன்
வைதேகி ராமன் கைசேரும் காலம்!
பவளவல்லி கரம் தொட்டான் உவந்து!
பாரத தேசத்தில் பிறந்தோர் அனைவருக்கும் சீதையின் கல்யாணம் என்பது அவர்களின் வாழ்க்கையில் இணைந்து விட்ட ஒரு அற்புதமான விழா ஆகும். இன்று நடக்கும் கல்யாணங்களில் கூட சீதா கல்யாண வைபோகமே என்று பாடுவது கண்கூடு.
ஆக இப்படிப்பட்ட கல்யாணத்தைக் கவிஞர்கள் வர்ணிக்காமல் இருக்க முடியுமா!
இராமாயண வெண்பா என்ற அரிய காவியத்தை இயற்றிய மதுரையைச் சேர்ந்த மதுரகவி ஶ்ரீனிவாஸ ஐயங்கார் சீதையின் அழகை வர்ணித்து அதை ராமன் எப்படி எண்ணி மகிழ்ந்தான் என்பதை இப்படிக் கூறுகிறார் கடிமணப் படலத்தில்:
கலைமகளோ செல்வக் கடல்மகளோ பூவின்
தலைமகளோ என்னத் தழைந்து – குலவி
உடல் பூரித்து உள்ளம் உவந்தான் ஓண் செம் கேழ்
மடல் பூரித்து உற்ற தோள் மன் கடிமணப் படலம், பாடல் 429
தேவாதி தேவனான ராமபிரானுக்கு தெய்வத் திருமகளான சீதையை செங்கை நீர் வார்த்து கன்யாதானம் செய்யும் புண்ணியத்தைப் பெற்றான் ஜனக மன்னன்.
தேவாதி தேவனும் அத் தெய்வத் திருமகளும்
ஓவாது உறைந்து ஆங்கு உயர்கமல்ப் – பூவாரும்
மங்கையுடன் மேவி மகிழ்நீர் எனச்சனகன்
செங்கைநீர் வார்த்தான் தெளிந்து பாடல் 448
இருவரும் ஒருவரின் ஒருவர் கரம் பற்றும் காட்சியே காட்சி!
அதை கவிஞர் வர்ணிக்கும் பாங்கு இது:-
வெய்ய கனல்வாய் விதித்த விதி யாவும்
செய்து முடித்துச் செழும் கரத்தான் – நெய்யமைந்த
ஆகுதிகண் தேர்ந்தான் அரும் பவளவல்லி கரம்
ஓகையோடு தொட்டான் உவந்து பாடல் 450
கங்கை அமரன் – இளையராஜா– எஸ்.ஜானகி கூட்டணி
இந்த வைதேகி ராமன் கைசேரும் சோபன நிகழ்வை பகல் நிலவு படத்தில் வரும் ஒரு பாடல் சித்தரிக்கிறது. படம் வெளியான ஆண்டு 1985. படத்தை இயக்கியவரோ பிரபல டைரக்டர் மணிரத்னம். அவரை ஒரு நல்ல டைரக்டர் என இனம் காண்பித்த படம் இது.
சரத்பாபு ராதிகாவிடம் சலங்கையைக் காட்டி இது சலங்கை அல்ல; இதுவே மாங்கல்யம் என்கிறார். அதைக் காலில் கட்டிக் கொண்டு ராதிகா நடனமாடுகிறார். ஒரு அபிநயத்துடன் கூடிய பாடலாக இது மலர்கிறது. இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர் எஸ்.ஜானகி. பாடலை இயற்றியவர் கங்கை அமரன். நல்ல கூட்டணி தானே இது!
கோவில் பிரகார மண்டபத்தில் பிரதானமாக ராதிகா நடனமாடும் காட்சியமைப்பில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு பரதநாட்டியக் கலையைக் கற்றுக் கொண்டு ஆடிக் காட்டுவதைப் பார்க்கிறோம்.
வைதேகி ராமன் கைசேரும் காலம்!
பாடல் இது தான்:-
வைதேகி ராமன் கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே வையம் வானகம் யாவும் தோரணம்
மெய்யை மெய் தொடும் காதல் காரணம்
வைதேகி ராமன் கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே ஆ..ஆ..
காவேரி நீர் போல ஓடும் ஆடும்
கல்யாண ராகங்கள் பாடும்
காணாத கோலங்கள் யாவும் காணும்
கண்ணொடு மோகங்கள் கூடும்
ஏதோ ஓர் பொன் மின்னல் என்னுள்ளிலே
ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே
காதோடு ஆனந்தம் கேட்கின்றதே
ஏன் என்று என் உள்ளம் பார்க்கின்றதே (ஸ்வர வரிசை)
வைதேகி ராமன் கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே (ஸ்வர வரிசை)
பூவான மிருதங்கம் எங்கும் பொங்கும்
புரியாத லயம் கூட சங்கம்
கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்
குறையாத சுகம் எந்தன் சொந்தம்
நான் காணும் ஆனந்தம் ஆரோஹணம்
வான் தூவும் பூவெல்லாம் அவரோஹணம்
சங்கீத தாளங்கள் போடும் மனம்
சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்
மிதிலையில் வைதேகி ராமன் கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
வையம் வானகம் யாவும் தோரணம்
மெய்யை மெய் தொடும் காதல் காரணம்
வைதேகி ராமன் கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
கோவில் பிரகார மண்டபம், தெப்பக்குள மைய மண்டபம் என எல்லா இடங்களிலும்
நடனம் தொடர்கிறது. கதாநாயகியின் சந்தோஷமும் புரிகிறது!
தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியின் மனநிலையைச் சித்தரிப்பதற்கும் அவ்வப்பொழுது ஏற்படும் திருப்பங்களுக்கு உதவவும் ராமரும் சீதையும் தொடர்ந்து கை கொடுத்து வந்திருக்கின்றனர்!
****************



You must be logged in to post a comment.