துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

banu karnan

துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1224; தேதி: 10 ஆகஸ்ட் 2014.

சூதாட்டம் பற்றி இரண்டு சுவையான கதைகள் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் உள்ளன.

துரியோதனன் மனைவி பானுமதியும் கர்ணனும் ஒரு நாள் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். பாதி ஆட்டத்தில் திடீரென்று பானுமதி எழுந்தாள். அவள் தோற்கும் நிலையில் இருந்ததால் பயந்து ஓடப் பார்க்கிறாள் என்று நினைத்த கர்ணன் அவள் புடவையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சி செய்தான். கைதவறி பானுமதியின் இடுப்பில் இருந்த மேகலையில் கர்ணன் கை சிக்கவே மேகலையில் ஒட்டியிருந்த முத்துக்கள் சிதறின. பானுமதி திடீரென எழுந்ததற்குக் காரணம் அவளது கணவன் துரியோதனன் உள்ளே நுழைந்ததாகும். துரியோதணன் கண் முன்னால், முத்து மேகலை சிதறவே இருவரும் தலை குனிந்து நின்றனர்.

அடுத்தது என்ன நிகழுமோ என்று பானுமதியும் கர்ணனும் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், துரியோதனன் “ எடுக்கவோ கோக்கவோ என்றான். இந்த முத்துக்களை எடுக்கவா அல்லது மாலையாகக் கோர்த்துத் தரட்டுமா? என்று அன்போடு வினவுகிறான்.

banu karnan 2

கர்ணனின் நட்பைக் கடவுளுடன் கொண்ட நட்பாகக் கருதுபவன் துரியோதனன். கர்ணனுடைய ஒழுக்கத்தின் மீது அவனுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. கர்ணனே வியப்படையும் அளவுக்கு அவன் நடந்து கொண்டான. அதனால் அல்லவோ, அந்தப்புரத்தில் தன் மனைவியுடன் மாற்றான் ஒருவனை சொக்கட்டான் ஆட அனுமதித்தான். கர்ணனோ துரியோதணனுக்கும் மேலே ஒரு படி சென்று நட்புக்கு இலக்கணம் வகுத்தவன்.

கர்ணன் தனது மூத்த மகன் என்று கூறி குந்தி சொன்ன போதும் கட்சி மாற மறுத்தான் கர்ணன். அப்போது அவன் கூறிய சம்பவம் தான் மேலே கூறப்பட்ட முத்து மேகலை சம்பவம். இதைச் சொல்லி அம்மா! இப்படிப் பட்ட துரியோதணனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதே என் வாழ்வின் லட்சியம் என்று சொல்லிவிடுகிறான்.

வில்லிபாரதத்தில் வரும் இந்தக் காட்சியைப் படம்பிடித்துக் காட்டும் பாடல் இதோ:–

sokkattan

மடந்தை பொன் திருமேகலை மணிஉகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடந்தனில் புரிந்தே நானயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவோ என்றான்;
திடம்படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனை சென்று செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்குகு இனிப் புகழும், கருமமும் தர்மமும்.
—வில்லி பாரதம்

புறநானூற்றில் பிராமணன் – க்ஷத்ரியன் மோதல்

புறநானூற்றில் பிராமணப் புலவனும் – க்ஷத்ரியனனான சோழ மன்னனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். ஒரு காய் உருண்டோடியதால் சோழ மன்னன் கோபம் கொண்டான். உடனே சோழ மன்னன், சொக்கட்டான் காய்களைப் பிராமணப் புலவன் மீது வீசி எறிந்தான். உடனே புலவர் உன்னுடைய குலத்தில் “பார்ப்பனர் நோவன செய்யலர்” என்று நயமாகக் கூறினார். உடனே அவன் வெட்கித் தலை குனிந்தான்.

புறநானூற்றுப் பாடல் 43 இந்த சம்பவத்தை விளக்குகிறது. சோழன் நலங்கிள்ளி யின் தம்பி மாவளத்தானும் பார்ப்பனப் புலவர் தாமப் பல் கண்ணனாரும் வட்டு விளயாடுகையில் இது நடந்தது.
((வட்டு ஆடுதல் பற்றி அதிக தகல் இல்லை. இதை ஒரு வகை சொக்காட்டான் ஆட்டம் என்றே நான் கருதுகிறேன்)).
mahabharata-game-of-dice

புலவர் தாமப்பல் கண்ணனார் கூறுகிறார்:
கதிரவனைச் சுற்றி வரும் முனிவர்களும் வியப்படையும் வண்ணம் புறாவுக்காக உயிர்தர முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்த தேர்வண் கிள்ளியின் தம்பியே! உன் பிறப்பில் ஐயம் கொள்கிறேன். ஆத்திமாலை சூடிய சோழ மன்னன் எவரும் பிராமணர் வெறுக்கும் செயலைச் செய்யத் துணியார். நீ எப்படிச் செய்தாய்? என்று நான் வெகுண்டேன். இப்படி நான் சொன்னவுடனே உடனே என் மீது கோபிக்காமல் வெட்கப்பட்டாய். சோழர்குடியின் பெருமையை நிலை நாட்டிவிட்டாய். இப்போது நானே தவ்று செய்தேன் என்று தோன்றுகிறது. காவிரி ஆற்றின் மணலை விட நீ நீண்ட காலம் வாழ்வாயாக என்று தாமப்பல் கண்ணனார் வாழ்த்துகிறார்:

ஆர்புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் (புறம் 43)

மேற்கண்ட இரண்டு கதைகளும் விளக்கும் கருத்துகள் அற்புதமானவை.
–சுபம்–