
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,085
Date uploaded in London – 13 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 2
பாரதியாரைக் கற்றால் உலக கவிகளின் அறிமுகம் நமக்குக் கிடைக்கும்.
चिड़ियों से मैं बाज बनाऊ , गीदड़ों को मैं शेर बनाऊ ! सवा लाख से एक लडाऊ, तभी गोबिंद सिंह नाम कहउँ – சிட்டுக் குருவி ராஜாளி ஆகும், சிறு நரி சிங்கமாகும். ஒன்றேகால் லக்ஷம் பேருடன் ஒருவன் சண்டை இடுவான். அப்படி நேரும் போது அங்கே குரு கோவிந்த சிம்மன் பேரைக் கேட்பாய்!
இதை சொல் ஒன்று வேண்டும் என்ற பாடலில் ஈயைக் கருட நிலை ஏற்றுவீர்’ என்ற அவர் வரியில் காணலாம்.யோகசித்தி பாடலில் ‘பன்றிப் போத்தைச் சிங்கவேறாக்கல்” என்கிறார்.
‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதே லக்ஷ்மணா, ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி’ என்பதை பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற வரிகளில் காணலாம்.
To Sophia என்ற ஷெல்லியின் கவிதையில் வரும் Thy deep eyes a double planet என்பதை சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்பதில் காணலாம். இப்படி நூற்றுக் கணக்கில் உதாரணங்களை அடுக்கலாம்.
தனித்துவம் மிகுந்து உலகக் கவிஞர்களில் உயர்ந்தவன் என்பதைச் சுட்டிக் காட்ட, ஒரு பாடல் – ‘தேனை மறந்து விட்ட வண்டும், ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி, ஆசை முகம் மறந்து போச்சே!’ இந்த ஒன்று போதாதா, போதாது என்றால் இன்னொன்று இதோ – ‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட வெறும் வெளியிலிரத்த களியொடு பூதம் பாட, பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூட களித்தாடுங் காளீ, சாமுண்டி கங்காளீ, அன்னை அன்னை அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை’ என்ற பாடலுக்குத் தான் ஒப்புவமை உண்டா! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் உலக மகாகவியின் ஒப்பற்ற பாட்டுத் திறனுக்கு!
*
பாரதியாரைப் போற்றி ஆயிரக்கணக்கில் கவிதைகளும் கட்டுரைகளும் துணுக்குகளும் கடந்த நூறு ஆண்டுகளில் வெளி வந்துள்ளன. பாரதியாரைப் போற்றிய ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட எண்ணம் கொண்டு தொகுக்க ஆரம்பித்தேன். இந்தக் கவிதைகள் http://www.tamilandvedas.comஇல்11-12-2017இல் (கட்டுரை எண் 4479) ஆரம்பித்து 90வது அத்தியாயத்தில் 14-5-2008இல் (கட்டுரை எண் 5008) முடிவுற்றது. நேரம் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
வி.ஜி.சீனிவாசன்
இவரே சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் சிலை நிறுவுவதற்கான கமிட்டியின் செயலாளராக இருந்து சிலையை நிறுவியவர். பாரதியே இவர் சுவாசம். இவர் எங்களது பாரதி ஆசான். ஆகவே இவரது பாடல்களில் ஒன்றை முதலாவதாகக் கொண்டு இந்த நூலைத் தொகுத்தேன்.
தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்
தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்
செய்த புகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்
எய்திடுமோ என்றனுக்கு மே
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை பாடல்களில் பாரதி ஓர் ஆசான் என்ற கவிதையின் ஒரு பகுதி :

அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே
அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்
விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி
நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த
வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.
அழ.வள்ளியப்பா அவர்களின் கவிதையில் ஒரு பகுதி:
தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
அறிந்து செயலிலே காட்டிடுவோம்.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் நீண்ட கவிதையிலிருந்து ஒரு கண்ணி :
உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! – மிக்க
ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!
கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! – ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா!
பாரதிதாசன் : ‘புதுநெறி காட்டிய புலவன்’-இல் ஒரு பகுதி
பைந்தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ ! சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
கவியரசு கண்ணதாசன்:
சந்திர சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்று விட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்துவிட்டான்
இந்திரதேவரும் காலில் விழும்படி
என்னென்ன பாடிவிட்டான் – அவன்
இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி
ஏற்றமுரைத்து விட்டான்
பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) பாடலில் ஒரு பகுதி:
பூ மணக்குது புகழ் மணக்குது புண்ணியர் பாடலிலே
பா மணக்குது பயன் மணக்குது பாரதி பாட்டுள்ளே
கவிஞர் கே.பி. அறிவானந்தம்
2003ஆம் ஆண்டு பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர். பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.
நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், திருநாவுக்கரசர், உள்ளிட்ட பல மேடை நாடகங்களை எழுதியவர் இவரே. பாரத மாதா பார்வையில் பாரதி என்ற கவிதையில் ஒரு பகுதி.
சொந்த மண்ணை விட்டு வந்து
சோர்ந்து வாழ்தல் வாழ்க்கையோ?
இந்தி யாவில் சிறையி லென்னை
இட்ட போதும் தாழ்ச்சியோ?
இந்த வாழ்வு தேவை யில்லை
என்று வந்து சிறையிலே
தந்த துன்பம் ஏற்று மீண்டாய்
சார்ந்த நட்பால் விரைவிலே
ஹா.கி. வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் கவிதையில் ஒரு பகுதி:_
வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்! கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்!
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல் போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
சங்கு சுப்ரமணியன் – இலக்கியத் தலைவர் பாரதியார்
கம்பனைப் பெற்ற நாட்டில்
கவிமணம் ஓயு நாளில்
வம்பரின் மந்தை தன்னில்
வளர்த்திட தேச பக்தி
உம்பர் மா உலகதாக
உயர்த்திடத் தமிழகத்தை
அம்புவி வந்த வீர
அருங்கவி பாரதியார்
திருமதி சௌந்தரா கைலாசம் – தொழுகின்றோம் அருள்க நீயே!
எழுதுகின்ற எழுத்தாலே என்னென்ன
என்னென்ன செய்து விட்டாய்!
தொழுதுநின்ற ஏழைதனை, துள்ளுகின்ற
காளைகளாய் மாற்றி, துன்பம்
உழுதுநின்ற நெஞ்சுகளில் உவகையெனும்
தேனூற்றி, அச்சமென்னும்
பழுதுநின்ற இடத்தினிலே, பாரதியே!
வீரத்தைப் பயிர் செய்தாயே!
கவிஞர் K. ராமமூர்த்தி – மகாகவி பாரதி வாழ்க மாதோ!
சீர் மிகுந்த செந்தமிழின் சீராளர்;
செகம் புகழும் கவிதந்த பேராளர்
கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்
கதிரெனவே அவதரித்தார் பாரதியார்
கவிஞர் தமிழழகன் – கோகிலக் கவிஞன்
ஞாலம் வியந்திடக் காலம் கடந்தும் மெய்ஞ்
ஞானரதம் விடுவான் – அதன்
மூலம் புதுயுகச் சீலம் நமக்குற
மோன பதம் நடுவான்
மு.சதாசிவம் – பாரதி பிள்ளைத் தமிழ் – செங்கீரைப் பருவம்
சுவைபல தருமொழி ஒரு மொழி எங்கள் தங்கத் தமிழ் மொழியில்
கவிபல இசையுடன் உணர்வெனும் பக்தி சேர்ந்தே பலபாடல்
உவகையை “அவனு”ளம் கொளும்வகைப் பாடிப் போந்த திருவடியார்
உளம் செலும் வழியினில் உனதுளம் போக்கி; கண்ணன் எனுமிறையை
நவமுறைக் கவிகளில் நயமுறப்பாடும் நல்லோய்! தமிழ்நாட்டின்
நிறைபுகழ் பரவிட வழிசொலும் எங்கள் பாண்டித்திருமகனே!
புவிமிசைக் கவிகளில் தனியிடம் பெற்றோய்! செங்கோ செங்கீரை
புகழொடு வறுமையின் முழுமையைக் கண்டோய் செங்கோ செங்கீரை
** தொடரும்

tags – பாரதியார்! – 2