
Written by London swaminathan
Date: 1 January 2016
Post No. 2448
Time uploaded in London :– 9-31 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பாரதி பாடல்களில் மந்திர சக்தி இருக்கிறது!
காரணம்?
சதாசர்வ காலமும் “மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமென்று” அவர் கலைமகளை வேண்டி நின்றார். பாரதி பாட்டில் எனக்குப் பிடித்த வரிகள் எது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறேன். எல்லா வரிகளிலும் பாஸ்ட்டிவ் எனர்ஜி= ‘ஆக்க சக்தி’ பொங்கிப் பரிமளிக்கிறது.
‘ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா’ என்ற வரியா? ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்ற வரியா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற வரியா? அல்லது ‘எல்லாரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும்’ என்ற வரியா? அல்லது ‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்’ என்ற வரியா?, ‘இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்’ என்ற வரியா?, ‘கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்’ – என்ற வரியா – என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை.
நூற்றுக் கணக்கான மந்திரங்களை நமக்களித்த பாரதி, மேலும் ஒரு அருமையான சொற்றொடரைத் தந்துள்ளார். “அன்புதன்னில் செழித்திடும் வையம்”!
இந்த உலகம் வளம் பெற மழை வேண்டாம், உரம் வேண்டாம். ஆனால் அன்பு என்று ஒன்று இருந்துவிட்டால் தானாக மாதம் மும்மாரி மழை பெய்யும். நல்லறம், நல்லாட்சி நிலவும் இடங்களில் பயிர் செய்யாமலேயே தானியம் தானாக விளையுமாம்! இதை வள்ளுவனும் காளிதாசனும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். புல்வாயும் (மான்), புலிப்போத்தும் ஒரு துறையில் நீருண்ணுமாம். இதையும் கம்பனும் காளிதாசனும் சொல்லிவிட்டனர்.
அன்பு பற்றி பாரதி வேறு என்ன சொன்னார்?
முரசு கொட்டுங்கள்!
அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே! – இந்த
நாநில மாந்தருக்கெல்லாம்.

அன்பே சிவம்!
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே- இங்கு
முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி
மஹாகளியின் புகழ்
அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்
ஆக்கம் நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை
ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை
பாப்பாவுக்கு அன்பு ‘அட்வைஸ்’!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தனறிதல் வேணும்
புலியிடம் அன்பு! (ஞானிகளுக்கு அட்வைஸ்)
தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே
சிவசக்தி
அன்புறு சோதியென்பார் – சிலர்
ஆரிருட் காளியென்று உனைப் புகழ்வார்;
விநாயகர் நான்மணி மாலை
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க!
வாழ்க திலகன் நாமம்
அன்பெனும் தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன் பேர்
ஜாதீய கீதம் (பாரத அன்னை பற்றி)
அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;
தோளிடைவன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

முரசு
சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்- தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்
அன்பு குறித்து பாரதி பாடியது இத்தனைதான் என்று எண்ணிவிடாதீர். அவன் பாடல்களில் அன்பு என்ற சொல் இல்லாத இடங்களிலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்வதைக் காணலாம்.
-சுபம்-
You must be logged in to post a comment.