
Written by S NAGARAJAN
Date: 28 June 2017
Time uploaded in London:- 6-18 am
Post No.4031
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
ஹிந்து தர்ம அறநெறிக் கதை
பாவத்தின் தந்தை யார்? அரசனின் கேள்வி – பண்டிதரின் திண்டாட்டம்!
ச.நாகராஜன்
அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது.
பாவத்தின் தந்தை யார்?
அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான்.
அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.
பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?
அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்ட்னை உண்டு” என்று எச்சரித்தான்.
வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர்.
நாட்கள் கழிந்தன.
ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!
அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்.
“என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.
“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்.
பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!
“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்.
“சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்.
அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.
“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.
பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!
“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.
“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.
“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பைப் பாருங்கள். அதை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.
பண்டிதர் அவர் மார்பகங்களைப் பார்த்தார். அதில் அலங்கரிக்கும் வைர மாலை அவர் கண்களைக் கவர்ந்தது.
“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் அமர்ந்தார்.

ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.
பண்டிதர் துடிதுடித்துப் போனார்.
“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை, பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?” தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது.
அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது.
கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்.
சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டாது” என்று கத்திக் கொண்டே ஓடலானார்.
நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.
“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்.
“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.
“ஆஹா! பாவத்தின் தந்தை ஆசையா? பேராசையா. சரியான் பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை ந்ண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.
“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுற்க்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.
ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்!
***