
Written by London Swaminathan
Date: 27 October 2016
Time uploaded in London: 20-37
Post No.3295
Pictures are taken from various sources; thanks
மனு தர்ம சாத்திரத்தில் உள்ள அதிசயச் செய்திகளை இது வரை நாலைந்து கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்; எல்லாம் என்னுடைய பிளாக்கில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கிறது; நிதானமாகப் படியுங்கள். கட்டுரையைக் கண்டு பிடிக்காமல் போனால் எனக்கு ஈ மெயில் e mail அனுப்புங்கள். கட்டுரையின் முகப்பின் என் ஈ மெயில் e mail உள்ளது.
‘பூர்வ ஜன்மம் அறியும் உபாயம்’—என்பதை முதலில் காண்போம்:
“நன்னடத்தையும், வேத பாராயணமும், சுய கட்டுப்பாடும் (புலனடக்கம்), அக்னி கார்யமும் உடையோருக்கு தாழ்வு/ வீழ்ச்சி என்பதே வராது (மனு 4-146)
“தினமும் வேத பாராயணம், தவம், பிறருக்கு தீங்கு செய்யாமை — ஆகியன இருந்தால் முன் ஜன்மப் பிறவிகளை அறிய முடியும். (4-148)
“தினமும் வேத அத்தியயனம் செய்து பூர்வ ஜன்மத்தை அறியும் த்விஜன் (இரு பிறப்பாளன்) நித்திய ஆனந்தம், சதா ஆனந்தம் பெறுவான் (4-149)
பூர்வ ஜன்மத்தை அறிதல் பற்றி சுவாமி விவேகாநந்தர் சொன்னதை முன்னர் ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். அவரும் கூட பூர்வ ஜன்மத்தை தன்னால் அறிய முடியும் என்றும், ஒரு திரைப்படச் சுருள் போல அவை அனைத்தும் நம் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டுளது என்றும் ஆனால் கடந்த காலத்தை அறிய தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
பிராமணன் வெங்காயம் சாப்பிடலாமா?
“பிராமணர்களைக் கொல்லும் விஷயங்கள்:–வேதத்தைப் படிக்காமல் இருப்பது, ஆசாரத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பது, கடமையிலிருந்து தவறுவது, தவறான உணவு வகைகளைச் சாப்பிடுவது- இவையே பிராமணன் மரணம் அடையக் காரணங்கள் (இவை இல்லாவிடில் மரணமில்லாப் பெரு வாழ்வு கிட்டும்) –மனு 5-4
“வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காளான் (MUSHROOMS) வகைகள் ஆகியவற்றை இருபிறப்பாளர்கள் (பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்) சாப்பிடக்கூடாது. –மனு 5-5
“மரத்திலிருந்து வரும் சாறு, கன்று போட்ட பசுவின் பால் ஆகியவற்றையும் சாப்பிடக்கூடாது” 5-6
இதன் பிறகு மாமிச வகைகளில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற நீண்ட பட்டியலும் உள்ளது. ஆனால் இரு பிறப்பாளர் என்பதால் க்ஷத்ரியர்கள், வைஸ்யர்களுக்காச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் யாகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மாமிசத்தை கடவுளுக்குப் படைத்த பின்னர் சாப்பிடலாம் என்றும் ஐந்தாவது அத்தியாயத்தில் கூறுகிறார்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பிராமணர்கள் உணவு பற்றிச் சொல்லுகையில் முழுக்க முழுக்க மரக்கறி உணவுகளே இடம்பெறுகின்றன. நாயும் கோழியும் புக முடியாத தெருக்கள் பிராம ண ர்களின் அக்கிரகாரம் என்றும் சங்கத் தமிழ் இலக்கியம் செப்பும். இதைப் பார்க்கும்போது சங்க காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முந்தையது மனு தர்ம சாத்திரம் என்று தெரிகிறது.
அகத்தியர் மாமிசம் சாப்பிட்டார்!
“யாகத்திற்காகவும், உயிரே போய்விடும் என்றபொழுது உயிர் வாழ்வதற்காகவும் பறவைகள், காட்டு மிருகங்களை, பிராமணர்கள் சாப்பிடலாம். அகத்தியர் கூட இதைச் செய்தார்” (5-22)
இதை எழுதும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. என்னுடைய மனைவி வழியில் சொந்தம் உடைய ஒருவர் அடிக்கடி வெளி நாட்டிற்கு அலுவலக விசயமாக வருவார். சனிக்கிழமைகளில் மாலை வரை விரதம் இருப்பார். ஹோட்டல்களில் தங்கினாலும் அமாவாசை தர்ப்பணம் செய்யத் தவறமாட்டார். ஆனால் சந்தியாவந்தனம் முதலியன செய்வதில்லை. ஒரு முறை அவருடன் லண்டனில் Mac Donald மக் டொனால்டில் சாப்பிட நேரிட்டது அவர் Chicken சிக்கன் (கோழி இறைச்சி) ஆர்டர் கொடுக்கப்போனார். உடனே நான் கோபத்துடன் நீங்கள் எப்படி இதைச் செய்யலாம்? என்று கேட்டேன். பின்னர் நீங்கள் செய்யும் உபவாசம், தர்ப்பணம் இவைகளுக்கு எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடுமே என்றேன். வாக்குவாதம் வலுத்தது. “அகத்தியர் கூட மாமிசம் சாப்பிட்டிருக்கிறாரே” என்று சொன்னார். அப்போது எனக்கு மனுதர்மத்தில் அகத்தியர் பெயர் இருப்பது தெரியாது. ஆனால் இல்வலன் வாதாபி கதையில் அவர் நர மாமிசம் (வாதாபி ஜீர்ணோ பவ: கதை ) சாப்பிட்டது எனக்கு தெரியும் உடனே அப்படியே அகத்தியர் சாப்பிட்டதாக வைத்துக்கொள்வோம். அகத்தியர் கடலைக் குடித்தது போல் நீங்கள் குடிக்க முடியுமா? வாதாபி ஜீர்ணோ பவ என்று சொல்லி மனிதனை ஜீர்ணம் செய்தாரே அதைப் போலச் செய்ய முடியுமா? என்று கேட்டேன். நாங்கள் இருவரும் தமிழில் இப்படி சண்டைபோட்டதைப் பார்த்த வெள்ளைக்காரர்கள் எங்களை முறைத்துப் பார்த்தவுடன் வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு பேசாமல் சாப்பிட்டோம். அதிலிருந்து அவர் மீதான மதிப்பு போயே போய்விட்டது.
ஆக அகத்தியர் பெயரை மனுதான் சொன்னாரா அல்லது பிற்கால இடைச் செருகலா என்று தெரியாவிட்டாலும் யாராவது மாமிசம் சாப்பிட்டுவிட்டு, அகத்தியர் பெயரைச் சொன்னால் அகத்தியர் செய்த மற்ற செயலையும் செய்யச் சொல்லுங்கள்!!
–Subham–
You must be logged in to post a comment.