
Article written by S.NAGARAJAN
Date: 31 May 2016
Post No. 2855
Time uploaded in London :– 5-56 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
அரிய ஆன்மீகக் கட்டுரைகளைக் கொண்டு மாதந்தோறும் சென்னையிலிருந்து வெளி வரும் ஆன்மீக இதழ் ஞான ஆலயம். இதன் ஆசிரியை திருமதி மஞ்சுளா ரமேஷை தமிழ் மக்கள் நன்கு அறிவர். சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் : editorial @aalayam.co.in
ஞான ஆலயம் ஜூன் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.
தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!
ச.நாகராஜன்
பாரதமெங்கும் மஹாபாரதத் தலங்கள்
பரந்த பாரதமெங்கும் மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஏராளமான தலங்கள் உள்ளன. பெரும் வீரர்களாக இருந்ததினால் மட்டும் பாண்டவர்களை அனைவரும் கொண்டாடவில்லை, அந்த வீரர்கள் தர்மத்தின் பக்கம் சார்ந்து இருந்து இறைவனின் உற்ற அருளுக்குப் பாத்திரர்களாக விளங்கினர் என்பதனாலேயே அவர்களுக்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் உள்ளன.அவர்களை இன்றும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகின்றனர்.
இந்த தலங்களுள் பாண்டவர்களுடன் தொடர்புள்ள தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவை மிக முக்கியமானவையும் கூட. சிலவற்றை இங்கு பார்க்கலாம்:
திருவேட்களம்:
காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.
சிவபிரான் வேட ரூபம் கொண்டு அர்ஜுனனோடு போர் புரிந்த இடம். வேடன் களம் என்பது வேட்களமாக ஆகி விட்டது.
இங்குள்ள தல விருட்சம் : புன்கு
தீர்த்தம்: ஞான தீர்த்தம் அல்லது ஞான கங்கை
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம்.

திருவேட்டகுடி:
திருமேனியழகர் ; சுந்தரேஸ்வரர்
அம்பிகை: ஸௌந்தரநாயகி
தல விருட்சம் : புன்னை
சந்நிதிக்கு எதிரில் உள்ள தீர்த்தம் ருத்திர புஷ்கரணியாகும்.
அர்ஜுனனோடு சிவபெருமான் போர் செய்கையில் வேட வடிவம் எடுத்ததால் வேட்ட குடி. அக்காலத்தில் காவலாக இருந்தவர் சாஸ்தா. இவர் பெயர் பிரமனார்.
இந்த ஊருக்கு மேற்கே ஒரு மைலில் இப்போது வரிச்சாகுடியாக உள்ள ஊரின் பழைய பெயர் வஸிட்டா குடி.
பாண்டவர் பூஜித்த் சில தலங்கள்
பஞ்சபாண்டவர் பூஜித்த தலங்களில் சில: கோடம்பூர், தலையாலங்காடு, பெரும்பன்றியூர் முதலியன.
மண்ணிப்படிக்கரை
காவிரிக்கு வடகரையில் உள்ள தலம். .
இந்த தலத்தில் ஐந்து சிவ சந்நிதிகள் உண்டு. நீலகண்டேசுவரர் பிரதானமான வாயிலை சந்நிதியாகப் பெற்றுள்ளார். இவரை தருமபுத்திரர் பூஜித்தார். அம்பிகையின் நாமம் அமிருதகரவல்லி.
அடுத்து படிக்கரை நாதேசுவரரை அர்ஜுனன் பூஜித்தான். அம்பிகை மங்களநாயகி. இந்தக் கோவில் வடக்கே உள்ளது.
அடுத்து தெற்கேயுள்ள மூர்த்தி மகதீசர். இவரை பீமசேனன் பூஜித்தான்.
தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள பரமேசுவரரை நகுலன் பூஜித்தான்.
:இங்குள்ள முத்தீசுவரரை சகாதேவன் பூஜித்தான்.
இந்த தலத்திற்கு சுந்தரரின் பதிகம் ஒன்று உண்டு.
இந்த தலத்திற்கு திரிசிரபுரம் ம்கா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஒரு புராணம் இயற்றியுள்ளார்.

திரு மழபாடி
காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.
இங்குள்ள லிங்கத்தில் வைரம் இருக்கிறது. புருஷாமிருகம் பூஜித்து பேறு பெற்ற தலம்,
கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள மழபாடியில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அதற்கு உடல் வலிமையையும், தீர்க்க ஆயுளையும் பிறரால் வெல்ல முடியாத ஆற்றலையும் இறைவன் அருளினார்..
சிவலிங்கத்தைப் பெற தவம் செய்த புருஷாமிருகத்திற்கு பூமியைப் பிளந்து கொண்டு வஜ்ஜிர ஸ்தம்ப வடிவமாக ஈசன் தோன்றினார். அதனால் அவருக்கு வச்சிரஸ்தம்பேஸ்வரர் என்று பெயர். பிரமதேவன் பூஜித்த சிவலிங்கமே இங்கு இந்த வடிவமாகத் தோன்றியது. தான் பூஜித்த லிங்கத்தைக் காணாது திகைத்த பிரமதேவன் இந்த இடத்தில் வந்து அதைப் பார்க்கும் போது லிங்கத்தை புருஷாமிருகம் பூஜித்துக் கொண்டிருந்தது. உடனே பிரம்மா தனது லிங்கத்தை புருஷாமிருகம் திருடிக் கொண்டு வந்து விட்டதென்று எண்ணி அதனுடன் போர் செய்யத் தொடங்கினார். போர் நீடித்துக் கொண்டே போன சமயம் பரமசிவன் லிங்கத்தினின்று தோன்றி, “யாமே இந்த மிருகத்தின் தவத்திற்கு இரங்கி இங்கு வந்து விட்டோம் இந்த மிருகம் திருடவில்லை. இனி யாம் இங்கேயே இருப்போம். நீ இங்கு வந்து பூஜை செய்க” என்று அருளினார்.
சிவபூஜையைத் தொடர்ந்து செய்த புருஷாமிருகம் ஆடகேஸ்வரர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கும் கீலமலை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தது.
சிவபக்தியில் சிறந்து விளங்கிய புருஷாமிருகத்தை சிவ பகதர்கள் பெரிதும் போற்றுவர். இந்த புருஷாமிருகத்தைத் தனது யாகத்திற்கு அழைத்து வருமாறு தர்மபுத்திரர் பீமனைப் பணித்தார். ஜெயித்து அழைத்து வருதலே மரபாதலால, பீமன் இங்கு வந்து புருஷாமிருகத்தைப் போருக்கு அழைத்தான்
மழபாடியில் புருஷாமிருகத்தைக் காணாத பீமன் கீலமலையில் புருஷாமிருகத்தைக் கண்டு யுத்தத்திற்கு அழைக்க அந்த மிருகம் பீமனை நோக்கி, “நீ ஆயுதத்துடன் இருக்கிறாய். என்னிடமோ ஆயுதம் இல்லை.” என்றது. உடனே பீமன் தன் கதாயுதத்தை புருஷாமிருகத்திடம் அளித்தான்.

இப்போது புருஷாமிருகம்,” நீ இப்போது ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கிறாய். என்னிடமோ ஆயுதம் இருக்கிறது. ஆகவே உன்னிடம் யுத்தம் செய்வது தரமம் அல்ல” என்றது.
பீமன் யுத்தம் செய்யவே விரும்புகிறான் என்பதை நன்கு அறிந்த மிருகம், “ நான் மழபாடியை நோக்கி ஓடுவேன். என்னைப் பிடிப்பதற்குத் துரத்தி வர வேண்டும். நான் மழபாடியின் எல்லையைத் தாண்டுவதற்குள் என்னைப் பிடித்து விட்டால் நீ என்னை வென்றவன் ஆவாய்” என்று சொல்லி விட்டு ஓடத் தொடங்கியது.
பீமனும் துரத்தினான். ஆனால் அவன் புருஷாமிருகத்தைப் பிடித்த போது பீமனின் ஒரு கால் மழபாடி எல்லையிலும் இன்னொரு கால் எல்லைக்கு அப்பாலும் இருந்தது.
பீமன் தான் வென்றதாகக் கூற புருஷாமிருகமோ அதை மறுத்தது. வழக்கைத் தீர்த்து வைக்க தர்மபுத்திரரே உகந்தவர் என்று இருவரும் கருதி தர்மரிடம் வந்தனர்.
அனைத்தையும் கேட்ட தர்மபுத்திரர்,” புறவெல்லையில் காலை வைத்த பீமனின் ஒருகாலை நீ வெட்டி எடுத்துக் கொள்ளலாம்” என்று புருஷாமிருகத்திடம் கூறித் தீர்ப்பை அளித்தார்.
தர்மரின் நடுவுநிலைமையைக் கண்டு வியந்த புருஷாமிருகம் பீமனை வெட்டாமல் விட்டது.அனைவரும் ம்கிழ்ந்தனர்.
இந்த வரலாறு திருமழபாடி புராணத்தில் ஸ்தல சருக்கத்தில் விவரமாக உள்ளது.
இது மட்டுமின்றி திருவாழ்கொளிபுத்தூர், திருவிசயமங்கை, பிரபலமாக உலகுக்குத் தெரியாத இப்போது திண்டுக்கல் மலை என்று அழைக்கப்படும் பத்மகிரி உள்ளிட்ட ஏராளமான தலங்கள் பஞ்சபாண்டவருடன் தொடர்பு கொண்ட தலங்களாகும்.
ஒவ்வொன்றும் ஒரு சுவையான மகாபாரத வீரர்களின் வரலாற்றைத் தருவதாகும்!
**********
You must be logged in to post a comment.