ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!

india
Zodiac signs on Indian postage Stamps

Post No.1084 ; Dated 4th June 2014.

சங்க இலக்கியக் கூற்றின் படி ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!

by ச.நாகராஜன்

சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்!

பகுத்தறிவாளர்கள் தமிழன் பண்பாட்டிற்கு ஒவ்வாத ஜோதிடத்தின் பக்கம் போகலாமா என்று கேட்டு இதற்கு எதிராக ‘முழங்கி’ வருவதை எண்ணிப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது! தமிழர்களின் பாரம்பரியத்தின் படி ஜோதிடம் மகத்தான ஒரு இடத்தை அவர்கள் வாழ்வில் கொண்டிருந்ததை சங்க இலக்கியம் நன்கு விளக்குகிறது.

அஸிரிய, பாபிலோனிய, மாயா, கிரேக்க,எகிப்திய நாகரிகத்தை விடப் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை! தமிழர்களின் சங்க இலக்கியம் காலத்தால் முற்பட்ட கருத்துக் கருவூலம் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று! இந்த சங்க இலக்கியங்களில் சுமார் 154க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஜோதிடத்தைப் பற்றி உள்ளன!

அனைத்துத் தமிழ் இலக்கியத்தையும் ஆராயப் புகுந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழ்வை மேம்படுத்தும் சிறந்த ஜோதிடக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம். அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால் இயற்றப்பட்ட ஆயிரக் கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன. சரஸ்வதி மஹால் வெளியிட்ட மிகச் சில நூல்களைத் தவிர பல நூல்கள் அச்சேறாது சுவடி வடிவிலேயே இருக்கும் அவல நிலையும் நம்மிடத்தில் மட்டுமே உண்டு!

ஒவ்வொரு பழந்தமிழனும் ஜோதிடத்தைப் பார்ப்பவனே!
நாள்தோறும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு நாளும் ஒரையும் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள். நாள் என்ற தமிழ் வார்த்தையே நட்சத்திரத்தைக் குறிக்கும் என்பது ஒரு சுவையான செய்தி! களவொழுக்கத்தில் தலைவனுக்கு தீய ராசி, தீய நாள் இல்லை என்பதை “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்று தொல்காப்பியம் (1081) கூறுகிறது.
இதனாலேயே களவொழுக்கம் இல்லாத இயல்பான ஒழுக்கம் உடைய தமிழர் நாளும் ஒரையும் பார்த்து வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது இல்லையா!

israel
Zodiac Signs on Israel Stamps

கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிட மேதை!

பழந்தமிழில் ஜோதிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. மாறாகக் கணியம் என்ற சொல் பல இடங்களிலும் பயிலப் படுகிறது. உலகமே இன்று போற்றி வியக்கும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிடர்; வான நூல் விற்பன்னர். அதனால் தான் அவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற அடிப்படை ஜோதிட உண்மையைக் (அவனவன் கர்மமே அவனுக்கு நன்மையையும் தீமையையும் தருகிறது!) கூறினார்! கணியன் பூங்குன்றனாரை தலை சிறந்த உலகனாகச் சுட்டிக் காட்ட விழையும் பகுத்தறிவாளர்கள் அவர் ஒரு கணியன் என்பதால் ஜோதிடத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அல்லவா?

நற்றிணை (373.6), காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கை என்றும் அகநானூறு (151.15)கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே” என்றும் கூறுகின்ற வரிகளால் கணி என்ற வார்த்தை பயிலப்படுவதைப் பார்க்கலாம். கணிப்பது ஜோதிடம்; அதைக் கணிப்பவர் கணி அதாவது ஜோதிடர். இன்றும் கூட நாம் ஜாதகத்தைக் கணித்துத் தாருங்கள் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்!

கணிவாய் வேங்கை என்றால் என்ன?

மேலே கண்ட வரியில் வரும் கணிவாய் வேங்கை என்றால் என்ன? வேங்கை பௌர்ணமியன்று தான் பூக்கும்!அந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும்.ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டது! பல்லி சொல்வதை கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்தது!தன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள்! இப்படிக் கணித்துச் சொல்வதால் அதுவும் ‘கணிவாய்ப் பல்லி’எனப்பட்டது.

ஜோதிடம் இன்றித் தமிழரின் தொன்மம் இல்லை!

அன்று தமிழரின் வாழ்வில் (ஏன், இன்றும் தான்!) எப்படி ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு இன்னும் ஏராளமான சுவையான செய்திகளைச் சுட்டிக் காட்டலாம் – சங்க இலக்கியத்தின் மூலம்! ஆகவே ஜோதிடத்தை மறுத்தால் தமிழனின் பாரம்பரியமே கேள்விக்குறியாகி விடும்!அவ்வளவு தொன்மம் தமிழர் வாழ்வில் ஜோதிடத்துடன் இணைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு உண்மை!

நாள்மீனும் விண்மீனும்
அசுவனி முதலாக ரேவதி ஈறாக பெயர் சூட்டப்பட்ட 27 நட்சத்திரங்கள் நாண்மீன்கள் என்றும் பெயர் சூட்டப்பெறாத இதர நட்சத்திரங்கள் விண்மீன்கள் என்றும் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப் படுகின்றன.
maldive stamps

Zodiac Signs on Maldives Stamps

அருந்ததியின் சிறப்பு

அருந்ததியை புது மணம் புரிந்தோர் பார்ப்பது சம்பிரதாயமாக இருந்தது. அருந்ததியை சங்க இலக்கியம் வடமீன்,செம்மீன்,மீன்,சிறுமீன்,சாலினி,வானத்து அணங்கு எனப் பலவாறாகச் சுட்டிக் காட்டுகிறது! சில சங்க வரிகளைக் கீழே காணலாம்:

வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி 221)
வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை (புறம் 228-9)
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி (பதிற்றுப்பத்து 3127-28)
கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதரும்
கார்த்திகை நட்சத்திரம் அறுமீன் என்றும் ஆரல் என்றும் குறிப்பிடப்படுகிறது!
அறுமீன் பயந்த (நற்றிணை 202-9)
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் (அகநானூறு 141-8)

என்பதோடு அறுவர் பயந்த ஆலமர் செல்வ (முருகு 255) என்பதன் மூலம் கார்த்திகை மகளிர் அறுவரும் சுட்டிக் காட்டப்படுவதையும் கண்டு மகிழலாம்!

சுக்கிரனும் மழையும்

சுக்கிரன் மழை தரும் கிரகமாக தமிழர் தமது ஜோதிட -விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்திருந்தனர்! அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறது!இதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றன! (ஆர்வமுள்ளோர் பாடல்கள்172,383,384,386,388 ஐப் படித்துணரலாம்)
-தொடரும்