
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9534
Date uploaded in London – –26 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)
வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படி?

இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக நிற்பது வரதட்சிணை வாங்கும் – கொடுக்கும் வழக்கமாகும். இதில் விந்தை என்னவென்றால் சாஸ்திரங்களில் வரதட்சிணை கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை! அதைவிட பெரிய விந்தை என்னவென்றால் தமிழ் இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துள்ளனர். மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது போலும். பெண்ணின் அப்பா வரதட்சிணை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் பெண்ணை விற்பதற்குச் சமமாகிவிடும் என்று சாடுகிறார். ஒரு துளிக்கூட வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அது அசுரர் திருமணமாக ஆகிவிடும் என்றும் கூறுகிறார்.
பெண்களே பெற்று வந்த இந்த வரதட்சிணை எப்படி தலைகீழாக மாறியது? எப்போது இப்படி மாறியது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.
தமிழ் மன்னர்கள் மூவேந்தரும் குறுநில மன்னர்களின் பெண்களை மணக்க முயன்றபோது பெண்களுக்கு நிறைய பணம் கொடுத்ததை சங்க இலக்கியப் பாடல்கள் வருணிக்கின்றன.
ஆயமகள் மறவுரை :
இதோ ஆயர் முறைமையைப் பாடும் குரவைக் கூத்தாடும் தலைவி கூறுவன:
“கூடிக்கொல்லும் தன்மையுடைய ஏற்றின் கொம்புகளுக்கு அஞ்சுகிறவனை ஆயமகள் மறுபிறப்பிலும் விரும்ப மாட்டாள்” (கலி 103: 63-64)
“அஞ்சாதவராய் உயிரைத் துறந்து கொலைத் தொழிலையுடைய ஏற்றை வருத்தித் தழுவுதற்கு நெஞ்சில்லாதவர்கள் ஆயமகளிர் தோளை அடைவது அரிது” (கலி 103: 65-66)
“உயிரை ஒரு பொருட்டாக எண்ணி அதனால் ஏற்றின் மருப்பினை அஞ்சும் நெஞ்சினையுடையார் ஆயமகளிரின் தோளைப் பொருந்துவது எளிதல்ல”
“கொலைத் தொழிலினையுடைய ஏற்றினது கொம்பினிடையினிலே தாம் விரும்பும் மகளிர் மார்பில் விழுவது போல் வீழில் எம்முடைய இனத்தில் ஆயர்தம் மகளிருக்கு விலை வேண்டா” (கலி 103: 72-73)
ஆயமகளிர் ஆயரின் வீரத்தையே தம் காதலுக்கு விலையாக மதித்தனர். அவர் மறநெஞ்சின் மாண்பு மிகப் பெரியதேயாகும்.
XXX
பெண் ஆட்சியாளர்கள்
ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பையும் மரியாதையையும் கொண்டு அது எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையது என்று அளந்து விடலாம். இந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மற்ற நாகரீ கங்களை ஒப்பிடுகையில் இந்திய நாகரீகம் முன்னேறியிருந்தது என்று துணிந்து கூறலாம். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தாத பண்டைய சமுதாயம் எதுவும் இல்லை. எல்லா நாகரீகங்களிலும் 99 சதவிகித அரசர்களையும் 1 சதவிகித அரசிகளையும் காண்கிறோம். கவிஞர்கள் முதல் மருத்துவர்கள் வரை எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். ரிக் வேதத்திலும் சங்கத்தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் பெண் கவிஞர்கள் எண்ணிக்கை கூட வேறு எந்த சமுதாயத்திலும் இல்லை.
குழந்தைகளைப் பெறுவதும் அவர்களை ஆரோக்கியமாக நற்பண்புகளுடன் வளர்ப்பதும் பெண்களின் கடமையாக இருந்தது. இல்லத்தரசி (HOUSE WIFE) என்பதே அவளுடைய முக்கிய தொழில். ஒரு ஔவையாரும், ஆண்டாளும், காரைக்கால், அம்மையாரும், கங்காதேவியும், மீராபாயும், ஜானாபாயும் விதிவிலக்குகள் ஆவர். ‘மனைக்கு விளக்காகிய வாணுதல்’ (புறம் 314) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (குறுந் 135) என்பன இலக்கியச் சான்றுகள்.
போருக்குச் செல்லுதல், வேட்டையாடுதல், நிலத்தை உழுது பயிர் செய்தல், ஆயுதங்களை உருவாக்கும் இரும்பாலை நடத்தல் போன்ற தொழில்களில் எல்லாம் ஆண்களை மட்டுமே காண்கிறோம். தர்மயுத்தம் நடத்தும் (அறப்போர்) மன்னன் பெண்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முரசு அறிவித்த பின்னரே போர் நட்த்துவான் (புறம் 9 நெட்டிமையார் பாடல்). கண்ணகி மதுரையை எரித்த போதும் பசு பத்தினி பார்ப்பனர் ஆகியோரை விடுத்து மற்றவர்களை எரிக்கும்படி அக்னி தேவனுக்கு உத்தரவிடுகிறாள்.
ராமாயணத்தில் தசரதனுக்கும் சம்பரனுக்கும் நடந்த யுத்தத்தில் தேரோட்டிச் சென்று அவன் உயிரைக் காத்த கைகேயி, முல்லைப் பாட்டில் மன்னனுடன் பாசறைக்குச் சென்ற (முல்லை வரி 45-49) மகளிர் ஆகியோர் விதிவிலக்குகள். பொதுவாக வீரமகன்களை உருவாக்குவது மட்டும் (காண்க புறநானூறு 278-279) அவர்கள் பொறுப்பு, வீரப்போரில் ஈடுபடுவது அல்ல.
ஆயினும் 2000 ஆண்டு பாரத வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரடியாக ஆட்சி புரிந்த அரசிகளைப் பற்றி கேள்விப் படுகிறோம். மதுரையில் மீனாட்சி அரசாட்சி செய்ததும், பட்டாபிஷேகம் செய்து கொண்டதும் இன்று வரை ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவியின் உருவத்தையும் ஓவியத்தையும் இந்தியா முழுதும் காணலாம். (காண்க எல்லோரா, மகாபலிபுரம்…)
இவைகளை புராணம் என்று ஒதுக்கி விட்டாலும் கல்வெட்டுகள் சாசனங்கள் மூலம் பல ராணிகளை அறிகிறோம்.
சந்திரகுப்த விக்ரமாதித்தனின் மகளான பிரபாவதி தேவி தன் கணவன் ( வாகடக வம்ச மன்னன்) இளவயதில் இறந்ததால் அரசு கட்டில் ஏறினாள். குஜராத்தை சகரர்க ளிடமிருந்து வெல்வதில் தகப்பனுக்கு துணை புரிந்தாள்.
ஹர்ஷனுடைய ஆட்சியில் அவன் சகோதரி ராஜ்யஸ்ரீ முக்கிய பங்காற்றினாள். ராஜ ராஜ சோழனுக்கு அவன் தமக்கை குந்தவை ஆலோசகராக இருந்து ஆட்சியை வழிநடத்தினாள்.
ஜயசிம்மனின் சகோதரி அக்கா தேவி (கிபி 1025) ஆட்சிப்பொறுப்பிலும் போரிலும் முற்றுகையிலும் பங்கேற்றாள். காகதிய வம்சத்தரசி ருத்ராம்பாளும் மதுரை நாயக்கர் வம்சத்தரசி ராணி மங்கமாளும் மீனாட்சியும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தனர்.
சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த விஜய பட்டாரிகாவும் (கிபி—) காஷ்மிரத்தைச் சேர்ந்த சுகந்தாவும் தித்தாவும் (கி பி 10 11ஆவது நூற்றாண்டுகள்) ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தனர்.
சாளுக்கியர் ஆட்சியில் அக்கா தேவி தவிர, சோமேஸ்வரரின் ராணி மைலா தேவி (கிபி 1080), ஆறாவது விக்ரமாதித்தனின் முதல் ராணி லெட்சுமிதேவி (கி பி 1100) ஆகியோர் தீவிர பங்கேற்றனர்.
ரஜபுதனத்தில் அரசர் சமர்சீ இறந்தவுடன் அவனது மனைவி கூர்மாதேவி (கி பி 1195) ஆண்டாள். ராணா சங்காவின் மனைவி மர்னாவதி தனது வீராவேச உரையில் அனைவரையும் ஊக்குவித்தாள். மற்றொரு மனைவியான ஜவஹர்பாய் போரிட்டு களத்திலேயே மாண்டாள்.
மராட்டியர் வரலாற்றுக் கோலாப்பூர் தாராபாயும் சித்தூர் அகல்யா பாயும் போர்களத்தில் பெரும் பங்காற்றினர்.
ரஜபுதனத்து பெண்கள் தங்கள் கணவர்கள் போருக்குச் சென்றபோது இரத்தத் திலகமிட்டு வழியனுப்பினர். கணவன் இறந்து விட்டால் மாற்றான் வசம் சிக்காமல் தீயில் பாய்ந்து உயிர் தியாகம் செய்தனர்.
அலாவுதீன் கில்ஜியிடமிருந்து தப்பிப்பதற்காக சித்தூர் ராணி பத்மினி நூற்றுக் கணக்கான தோழியருடன் தீப்புகுந்து தியாகம் செய்த வரலாறு உலகம் அறிந்த ஒன்று.
இவ்வாறு தீப்பாய்ந்து உயிர்த்தியாகம் செய்த பெண்களின் கைச்சுவடுகள் பதித்த கல்வெட்டுகளை நாடு முழுதும் காணலாம்.

XXXXX subham xxxxx
tags- பெண்கள் வாழ்க17; வரதட்சிணை முறை, பெண் ஆட்சி