கல்விக்கு அழகு கசடற மொழிதல்

narendra-modi-speech

பிரதமர் நரேந்திர மோடி, டில்லி செங்கோட்டை

Article No. 2065

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 12  August  2015

Time uploaded in London :–  9-22 am

 

வாணீ = சொல்வன்மை = நன்மொழி தொடர்பான 30 பொன்மொழிகள்

 

1.அக்னிதா: அபி விசிஷ்டம் வாக் பாருஷ்யம் – சாணக்ய நீதி

சூட்டை விட சுடு சொல்லின் வெப்பம் அதிகம்.

((தீயினாற் சுட்ட புண் ஆறும், நாவினாற் சுட்ட புண் ஆறாது))

 

2.அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய

நல்ல விஷயங்களைச் சொல்ல்பவரும் கேட்பவரும் அரிது.

 

3.கர்தவ்யம் ஹி சதாம் வச: — கதாசரித் சாகரம்

நல்லோற் சொற்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

4.கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே – சாணக்ய நீதி

கேட்பாரில்லாவிடில் பேசுபவர் என்ன செய்வார்?

((கடை விரித்தேன், கொள்வாரில்லை (ராமலிங்க சுவாமிகள்))

 netaji

நேதாஜி வங்காளி மொழிப் பிரசங்கம்

5.கோ வா துர்ஜனவாகுராசு பதித: க்ஷேமேண யாத: புமான் – பஞ்ச தந்திரம், பர்த்ருஹரி

கெட்டவர்களின் வலையில் விழுந்தவர்கள், யார் நல்ல நிலையில் மீண்டு வந்தனர்?

((நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும் – பாஞ்சாலி சபதம், பாரதியார்))

 

6.க்ஷீயந்தே கலுபூஷணானி சததம் வாக்பூஷணம் பூஷணம் – பர்த்ருஹரி

உடம்பில் அணியும் அணிகலன்களுக்கு அழிவு உண்டு. சொல் எனும் அணிக்கு அழிவே இல்லை

 

7.ந ஹி ப்ரியம்  ப்ரவக்தும்  இச்சந்தி ம்ருஷா ஹிதைக்ஷிண:  — கிராதார்ஜுனீயம்

உண்மையான நலனை விரும்புவோர், இனிமையாக இருக்கும் என்பதற்காகப் பொய்யைச் சொல்லுவதில்லை.

 

8.நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத் – மனு

கேட்காததைச் சொல்லாதே

((பாத்திரம் அறிந்து தானம் செய்))

 

9.பரோபகரணார்த்தாய வசனே கா தரித்ரதா

பயனுள்ள சொற்களைச் சொல்வதில் கூடவா தரித்திரம்?

 

10.மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண: –  சிசுபாலவதம்

பெரியோர்கள் இயற்கையிலேயே குறைவாகப் பேசுவர்

(ராமபிரான் மித பாஷி, ஹித பாஷி, ஸ்ரீஉத பாஷி, பூர்வ பாஷி—வால்மீகி ராமாயணம்)

 nehru

பாரதத்தின் முதல் பிரதமர் நேருஜி சொற்பொழிவு

11.மிதம் ச சாரம் சவசோ ஹி வாக்மிதா — நைஷத சரிதம்

குறைவாக – பொருளுள்ள — விஷயங்களைப் பேசுவதே பேச்சுக் கலை

 

12.லௌகிகானாம் ஹி சாதூனாமர்தம் வாகனுதாவதி

ருஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தோ அனுதாவதி – உத்தர ராம சரிதம்

 

நாம் காணும் பெரியோர்களின் சொற்கள், பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படுபவை. ஆனால் ரிஷிகளின் சொற்களே பொருளாகி விடுகின்றன. (அதாவது ரிஷிகளின் சொற்களே அஸ்திவாரம்)

 

13.ஸ்ருதேன யத்னேன ச வாகுபாஸிதா த்ருவம் கரோத்யேவ கமப்யனுக்ரஹம்  — காவ்யதர்ச:

 

கேள்வி ஞானம் மூலம் அல்லது முயற்சியின் மூலம் கற்றோருக்கு, சரஸ்வதி தேவி, எப்படியாவது நற்பயனைத் தருவாள்.

((கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு))

14.பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற

சில சொல்லல் தேற்றாதவர் (குறள்  649)

சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)

 

15.சுமங்களோ பத்ரவாதி வதேஹ  — ரிக் வேதம்

மங்களகரமான, நன்மை பயக்கும் சொற்களைச் சொல்

 

indira UN Conference

ஐ.நா. சபையில் முன்னாள் பிரதமர் – இந்திராகாந்தி பேருரை

16.சதாம் ஹி வாணீ குணமேவ பாஷதே – கிராதார்ஜுனீயம்

நல்லோர்கள் எப்போதும் நற்குணங்களை மட்டுமே உரைப்பர்

 

17.சுதுர்லபா: சர்வமனோரமா கிர: – கிராதார்ஜுனீயம்

எல்லோரும் ஏற்கக் கூடிய இனிய சொற்களைப் பேசுவது கடினம்

 

18.ஹிதம் மனோஹாரி ச துர்லபம் வச: – – – கிராதார்ஜுனீயம்

நலம்பயக்கும், பிரியமான சொற்கள் கிடைப்பது அரிது.

 

19.ஆ நோ பத்ரா: ருதவோ யந்து விஸ்வத: – ரிக்வேதம் 1-89-1

எல்லா திசைகளிலிருந்தும் எங்களுக்கு உயர்ந்த கருத்துகள் வரட்டும்

 

20.சில்லெழுத்தினாலே பொருளடங்கக்

காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து (ஆசாரக்கோவை)

கொஞ்சமாகப் பேசு, பொருளோடு பேசு, காலம் அறிந்து பேசு, கேட்பவர் விருப்பம் அறிந்து பேசு

 

21.சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்

செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கும் – நன்னூல்

 martinluther

மார்ட்டின் லூத கிங்

  1. கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றி வேர்க்கை

 

23.சொற்சோர்வுபடேல் – ஆத்திச் சூடி

சொல்ல வேண்டியதை மறக்காமல் சுவைபடச் சொல்லுக

 

24.மிகைபடச் சொல்லேல் — ஆத்திச் சூடி

அதிகமாகப் பேசாதே

 

25.பிழைபடச் சொல்லேல் – ஆத்திச் சூடி

 

26.மொழிவதறமொழி — ஆத்திச் சூடி

பேசும் பொருளை சந்தேகம் வராதபடி விளக்குக

 

27.சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது

 

28.பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பொய் சொல்பவன் தேன் ஒழுகப் பேசுகையில் அது உண்மை போலத் தோன்றும்

  1. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.

vajayee

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயீ

30.சிறந்தமைந்த கேள்வியராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்றல் இனிது – இனியவை நாற்பது

பல நூல்களை நன்கு படித்திருந்தாலும், ஆராய்ந்த பின்னர் ஒன்றைச் சொல்லுவதே இனியது (நல்லது)

திருவள்ளுவரின் திருக்குறளில்  சொல்வன்மை (65 ஆவது) என்னும் அதிகாரத்தை ஒப்பிட்டு மகிழ்க!

‘மலர்ந்தும் மணம் வீசாத மலர்’

hibiscus

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்–887 தேதி: 5 மார்ச் 2014

ஆதி சங்கரர் எழுதிய அற்புதமான வினா – விடை (பிரஸ்னோத்தர ரத்னமாலிகா) துதியில் இருந்து இதுவரை பல அரிய கருத்துக்களை வள்ளுவன் முதலிய தமிழ்ச் சான்றோர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். பொது இடங்களில் பேசுவது எப்படி? art of public speaking பற்றி இன்று மேலும் சில கருத்துக்களை நோக்குவோம்.

நன்றாகக் கற்ற பின்னரும் சபையில் அதை எடுத்துரைக்க முடியாத ஆட்களை மலர்ந்தும் நல்ல மணம் பரப்பாத பூக்கொத்துகளுக்கு ஒப்பிடுகிறான் வள்ளுவன்:

இணரூழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் (குறள் 650)

ஆதிசங்கரரும் இதே கருத்தைதான் கொண்டுள்ளார்:

புத்தி இல்லாமையின் அடையாளம் என்ன?
தான் கற்றதை எடுத்துரைக்க இயலாததே. (பாட்டு 10)

யார் செவிடன்?
நல்லவர்களின் பேச்சைக் கேட்காதவன் என்பார் சங்கரர்.

என்ன அற்புத ஒற்றுமை! திருவள்ளுவரும் செவிடனென்ற சொல்லையே பயன்படுத்துகிறார்:
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கபடாத செவி (குறள் 418)

பொருள்: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத காதுகள், மற்ற ஒலிகளைக் கேட்கும் நல்ல காதுகளாக இருந்தாலும் அவை செவிட்டுக் காதுகளே.

அறிஞர்கள் எப்படிச் சிந்திக்கின்றனர் பாருங்கள்!
மற்றொரு கேள்வியை சங்கரர் கையாளும் விதத்தைப் பார்ப்போம்:

lecture
யார் முட்டாள்?
தேவையான நேரத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்

வள்ளுவனும் சொல்லுவான்:–
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் 100)

அடே, வந்திருக்கும் விருந்தாளிக்கு மாம்பழம் கொடுடா என்றால் புளிப்பு மாங்காயைக் கொடுப்பது போல சிலர் நல்லதையே சொல்லமாட்டார்கள். அவர்கள் எல்லாம் துரியோதனன் வாரிசுகள்!

புத்திசாலிகள் எதைத் தவிர்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு
மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பார் சங்கரர்.

எந்த வார்த்தை மகிழ்ச்சி தரும்? சத்தியம் (உண்மை விளம்புவது) என்பார் சங்கரர். இவை எல்லாம் இருவேறு கருத்துக்கு இடம் கொடுக்காத பெரிய உண்மைகள். ஆகவே விட்டு விடுவோம்.

எவனை ஊமை என்று அழைக்கலாம்?
தக்க நேரத்தில் ஆறுதல் சொல்லாதவனை என்பார் ஆதி சங்கரர்.

இதை வள்ளுவன்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் (646) —
என்ற குறள் மூலம் ஆமோதிக்கிறான்.

எவனுக்கு உலகமே அடிமையாகும்? என்ற கேள்விக்கு இனிமையான சொற்கள் உடையவனுக்கு உலகமே அடிமை ஆகும் என்பார் சங்கரர்.

lecture

சொல்லாற்றல் இருந்தால் அவன் சொல்லை உலகம் விரைந்து கேட்கும் என்று வள்ளுவனும் மொழிவான்:

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

இன்னொரு கேள்வியில் வள்ளவனும், சங்கரரும் 100 விழுக்காடு ஒத்துப் போகிறார்கள். காதில் தேனாகப் பாய்வது எது? என்ற கேள்விக்கு ஆதி சங்கரர் அளித்த பதில் பெரியோரின் நல்லுரை என்று மறுமொழி தருகிறார். இதையே வள்ளுவனும்

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றோரோடு ஒப்பர் நிலத்து (413) என்கிறார்.

நல்ல விஷயங்களைக் காதில் போட்டுக் கொள்பவர்கள் தேவ லோகத்தில் அமிர்தம் சாப்பிடும் தேவர்களுக்குச் சமமானவர்கள் என்று சொல்லுகிறார்.

ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவை எனது லண்டன் நண்பர் மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் கவிதை வடிவில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். மேலே கண்ட ஒரு வினா-விடைப் பகுதியை மட்டும் தருகிறேன்:–

செவியுள் அமுதெனச் சேர்க்கும் அனுபவம்?
சீரிய ஞானியர் செப்பிடும் நீதி!
புவியுள் எது மரியாதை தருவது?
பூமியுள் இரந்து பயனுற மறுப்பது (பாடல் 8)

seminar1a-resized

அனுமனின் சொல்லாற்றல்

அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.

ராமனின் குண நலன்களை வருணிக்கும் வால்மீகியோ, ராமனை

மித பாஷி= (குறைவாகப் பேசுபவன்)

ஹித பாதி= ( மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவதை சொல்பவன்)

ஸ்ருத பாஷி= (உண்மையே பேசுபவன்)

பூர்வ பாஷி (தலைக் கனம் கொஞ்சமும் இல்லாமல் நதானே போய் முதலில் பேசுபவன்)

என்று நான்கு அடைமொழிகளால் வருணிப்பார். இந்த நான்கு குணங்களும் இருந்தால் அவனை யார் வெல்ல முடியும்?

அனுமனின் சொல்லாற்றலுக்கு எடுத்துக் காட்டு, சீதையைக் கண்டு பேசிவிட்டு, முதல் முதலில் ராமனைச் சந்தித்தவுடன்,

கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

-சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், கம்ப ராமாயணம்

இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.

இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!

இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!

ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம். இவ்வாறு வடமொழி தென் மொழிப் பாடல்களில் இருவேறு உள்ளங்கள் இணையும் போது அளப்பற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

contact swami_48@yahoo.com