எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்–887 தேதி: 5 மார்ச் 2014
ஆதி சங்கரர் எழுதிய அற்புதமான வினா – விடை (பிரஸ்னோத்தர ரத்னமாலிகா) துதியில் இருந்து இதுவரை பல அரிய கருத்துக்களை வள்ளுவன் முதலிய தமிழ்ச் சான்றோர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். பொது இடங்களில் பேசுவது எப்படி? art of public speaking பற்றி இன்று மேலும் சில கருத்துக்களை நோக்குவோம்.
நன்றாகக் கற்ற பின்னரும் சபையில் அதை எடுத்துரைக்க முடியாத ஆட்களை மலர்ந்தும் நல்ல மணம் பரப்பாத பூக்கொத்துகளுக்கு ஒப்பிடுகிறான் வள்ளுவன்:
இணரூழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் (குறள் 650)
ஆதிசங்கரரும் இதே கருத்தைதான் கொண்டுள்ளார்:
புத்தி இல்லாமையின் அடையாளம் என்ன?
தான் கற்றதை எடுத்துரைக்க இயலாததே. (பாட்டு 10)
யார் செவிடன்?
நல்லவர்களின் பேச்சைக் கேட்காதவன் என்பார் சங்கரர்.
என்ன அற்புத ஒற்றுமை! திருவள்ளுவரும் செவிடனென்ற சொல்லையே பயன்படுத்துகிறார்:
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கபடாத செவி (குறள் 418)
பொருள்: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத காதுகள், மற்ற ஒலிகளைக் கேட்கும் நல்ல காதுகளாக இருந்தாலும் அவை செவிட்டுக் காதுகளே.
அறிஞர்கள் எப்படிச் சிந்திக்கின்றனர் பாருங்கள்!
மற்றொரு கேள்வியை சங்கரர் கையாளும் விதத்தைப் பார்ப்போம்:

யார் முட்டாள்?
தேவையான நேரத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்
வள்ளுவனும் சொல்லுவான்:–
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் 100)
அடே, வந்திருக்கும் விருந்தாளிக்கு மாம்பழம் கொடுடா என்றால் புளிப்பு மாங்காயைக் கொடுப்பது போல சிலர் நல்லதையே சொல்லமாட்டார்கள். அவர்கள் எல்லாம் துரியோதனன் வாரிசுகள்!
புத்திசாலிகள் எதைத் தவிர்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு
மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பார் சங்கரர்.
எந்த வார்த்தை மகிழ்ச்சி தரும்? சத்தியம் (உண்மை விளம்புவது) என்பார் சங்கரர். இவை எல்லாம் இருவேறு கருத்துக்கு இடம் கொடுக்காத பெரிய உண்மைகள். ஆகவே விட்டு விடுவோம்.
எவனை ஊமை என்று அழைக்கலாம்?
தக்க நேரத்தில் ஆறுதல் சொல்லாதவனை என்பார் ஆதி சங்கரர்.
இதை வள்ளுவன்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் (646) —
என்ற குறள் மூலம் ஆமோதிக்கிறான்.
எவனுக்கு உலகமே அடிமையாகும்? என்ற கேள்விக்கு இனிமையான சொற்கள் உடையவனுக்கு உலகமே அடிமை ஆகும் என்பார் சங்கரர்.
சொல்லாற்றல் இருந்தால் அவன் சொல்லை உலகம் விரைந்து கேட்கும் என்று வள்ளுவனும் மொழிவான்:
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)
இன்னொரு கேள்வியில் வள்ளவனும், சங்கரரும் 100 விழுக்காடு ஒத்துப் போகிறார்கள். காதில் தேனாகப் பாய்வது எது? என்ற கேள்விக்கு ஆதி சங்கரர் அளித்த பதில் பெரியோரின் நல்லுரை என்று மறுமொழி தருகிறார். இதையே வள்ளுவனும்
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றோரோடு ஒப்பர் நிலத்து (413) என்கிறார்.
நல்ல விஷயங்களைக் காதில் போட்டுக் கொள்பவர்கள் தேவ லோகத்தில் அமிர்தம் சாப்பிடும் தேவர்களுக்குச் சமமானவர்கள் என்று சொல்லுகிறார்.
ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவை எனது லண்டன் நண்பர் மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் கவிதை வடிவில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். மேலே கண்ட ஒரு வினா-விடைப் பகுதியை மட்டும் தருகிறேன்:–
செவியுள் அமுதெனச் சேர்க்கும் அனுபவம்?
சீரிய ஞானியர் செப்பிடும் நீதி!
புவியுள் எது மரியாதை தருவது?
பூமியுள் இரந்து பயனுற மறுப்பது (பாடல் 8)
அனுமனின் சொல்லாற்றல்
அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.
ராமனின் குண நலன்களை வருணிக்கும் வால்மீகியோ, ராமனை
மித பாஷி= (குறைவாகப் பேசுபவன்)
ஹித பாதி= ( மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவதை சொல்பவன்)
ஸ்ருத பாஷி= (உண்மையே பேசுபவன்)
பூர்வ பாஷி (தலைக் கனம் கொஞ்சமும் இல்லாமல் நதானே போய் முதலில் பேசுபவன்)
என்று நான்கு அடைமொழிகளால் வருணிப்பார். இந்த நான்கு குணங்களும் இருந்தால் அவனை யார் வெல்ல முடியும்?
அனுமனின் சொல்லாற்றலுக்கு எடுத்துக் காட்டு, சீதையைக் கண்டு பேசிவிட்டு, முதல் முதலில் ராமனைச் சந்தித்தவுடன்,
கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்
-சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், கம்ப ராமாயணம்
இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.
இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!
இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!
ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம். இவ்வாறு வடமொழி தென் மொழிப் பாடல்களில் இருவேறு உள்ளங்கள் இணையும் போது அளப்பற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.