
Post No.7727
Date uploaded in London – 22 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பேரியம் (Barium) என்னும் மூலகம் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம் . இதுவரை அமெரிஷியம், ஆர்செனிக், பிஸ்மத், காட்மியம், குரோமியம், கோபால்ட், க்யூரியம் , ப்ளோரின், அயொடின், லித்தியம், மக்னீஷியம், பொட்டாசியம், ரேடியம், செலீனியம் , தாலியம் , தோரியம், யுரேனியம் , துத்தநாகம், பாதரசம், மாலிப்டினம், நிக்கல் ஆகிய மூலகங்கள் பற்றிய சுவைமிகு செய்திகளை எடுத்துரைத்தேன். இன்று பேரியம் கஞ்சி (Barium Meal) சாப்பிடுவோம்.
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த மூலகம் / தனிமம் பேரியம். ஆனால் நீ ங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள் . தீபாவளி அன்றும் அதற்கு முன்னாலும் நீங்கள் விட்ட பச்சை மத்தாப்பில் பேரியம் உப்பு (Barium Nitrate and Barium Chlorate) இருப்பதால்தான் அது அப்படி சுடர்விட்டுப் பிரகாசித்தது . இது போல வாண வேடிக்கைகளிலும் பச்சை வர்ணத்தைக் கொணர பேரியம் அவசியம்.
யாருக்கேனும் வயிற்றில் நோவு ஏற்பட்டு சாதாரண சிகிச்சையில் குணப்படுத்த முடியாவிட்டால் உடனே டாக்டர்கள் உங்களை பேரியம் கஞ்சி குடிக்க (Barium Swallow Test) அனுப்பிவிடுவார். அதாவது எக்ஸ்ரே கருவிக்கு முன்னர் நிற்பதற்கு முன்னர் உங்களை ஒரு சுவையற்ற கஞ்சியைக் குடிக்கச் சொல்லுவார்கள். இது பின்னர் தீங்கின்றி மலத்துடன் வெளியேறிவிடும். ஏன் பேரிய உப்பிலான (Barium Sulfate) கஞ்சியைத் தருகிறார்கள்? இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 118 மூலகங்களில் பேரியத்தை ஏன் பிரியத்துடன் தேர்ந்தெடுத்தார்கள்?
இந்தக் கஞ்சி பேரியம் சல்பேட்டினால் (Barium Sulfate) ஆனது. அது உப்பு வகைகளில் எளிதில் கரையாத உப்பு. மகா சண்டித்தனம் செய்யும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் கூட இதைக் கரைக்க முடியாது. உடலுக்குத் தீங்கும் விளைவிக்காது . இது வயிற்றின் வழியாக குடலில் பரவிய பின்னர் அப்பகுதிகளை ஸ்கேன் (Scan) செய்தால் ஏதேனும் உறுப்புகளில் நோய், நொடி இருந்தால் தெரிந்து விடும். எக்ஸ்ரே கதிர்களை உட்கொண்டு பேரியம் மட்டும் காட்சி தரும். தெளிவான எக்ஸ்ரே படம் கிடைப்பதால் டாக்டர்களின் பணியை எளிதாக்கிவிடும் .

பேரியம் கஞ்சி மலச் சிக்கலை உண்டாக்கும் . ஆகையால் நிறைய தண்ணீர் குடிக்கச் சொல்லுவார்கள். சில நாட்களுக்கு மலம் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதுதான் வெள்ளை நிற பேரியம் கஞ்சியின் மகிமை.
பொதுவாக பேரியம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. நம் உண்ணும் உணவு மூலமும் உள்ளே செல்கிறது. ஆனால் குறிப்பிட்ட பலன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. காரட் , வெங்காயம், பீன்ஸ், தானிய வகைகள், பிரேஸில் நட் (Brazil Nut) எனப்படும் பருப்பு ஆகியவற்றில் இது அதிகம் காணப்படுகிறது பேரியம் கார்பனேட் போன்ற சில உப்புகள் உடலுக்குத் தீங்கிழைக்கும். இது எலி மருந்தில் கலக்கப்படுகிறது . சில வகை பேரிய உப்புக்கள் இதயத்தைப் படபடக்கச் செய்யும். அதிக அளவு உடலுக்குள் சென்றால் வாந்தி, வயிற்று போக்கு, பக்கவாதமும் வரும். ஆனால் முன்னர் கண்ட பேரியம் கஞ்சியினால் தீங்கு ஏற்படாது .
பேரியம் பற்றிய ஒரு அதிசயச் செய்தி
பச்சை நிற பாசிகளை(Algae) நாம் பார்க்கிறோம். இதில் ஒரு செல் மட்டுமுள்ள பாசி வகையை டெஸ்மீட்ஸ் (Desmids) என்பர். மழை நீர் மட்டுமே கிடைக்கும், சத்தான பொருட்கள் கிடைக்காத சதுப்பு நிலங்களில் கூட இவை வளரும். இதில் கிளாஸ்டிரியம் (Closterium) என்ற பாசி வகையை ஆராய்ந்ததில் அது முழுவதும் பேரியம் சல்பேட் படிகங்களை கொண்டிருந்தது. இது ஒரு மில்லிமீட்டர் நீளத்துக்குத்தான் வளரும். இந்தவகை பாசிகள் விஷமூட்டக்கூடிய அளவுக்கு பேரியமுள்ள இடங்களிலும் கூட வளருகின்றன. எதற்காக இவை பேரியம் சல்பேட் படிகங்களைச் சேர்க்கின்றன, எப்படி உயிர்வாழ்கின்றன என்று தெரியவில்லை. பேரியமும் கால்சியமும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதால் பாசி வகை இப்படிச் செய்கின்றன போலும்!

பேரியம் பற்றிய ரசாயன/ வேதியியல் செய்திகளைக் காண்போம்
இது பூமியில் எங்கும் கிடைக்கும் . இது உலோக வகையைச சேர்ந்தது. வெள்ளி (Silvery white metal) நிறத்தில் இருக்கும். இரும்பின் அடர்த்தியில் பாதிதான் இதன் அடர்த்தி. இதற்கு எழுவகை ஐசடோப்புகள் இருக்கின்றன
பேரியத்தின் குறியீடு – பிஏ Ba
அணு எண் – 56
உ ருகு நிலை – 729 டிகிரி ஸி /C
கொதி நிலை – 1637 டிகிரி ஸி/C
பொருளாதாரப் பயன்கள்
இது இதாலி , பிரிட்டன், அமெரிக்க, ஜெர்மனி, செக் குடியரசு நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவை பேரியம் சல்பேட் , கார்பனேட் வடிவத்தில் கிடைக்கின்றன.

பெனிடோட்( benitoite) என்பது அபூர்வமாகக் கிடைக்கும். இது ஒருவகை ரத்தினைக் கல். இதன் ரசாயனப் பெயர் பேரியம் டைட்டேனியம் சிலிகேட். (Barium titanium silicate ) இது நீலக் கல் போல இருக்கும்.
பேரியத்தை மற்ற உலோகங்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவர்.
பேரியம் ஆக்ஸைட் – ப்ளுரோசென்ட் (Fluorescent ) பல்புகள்
பேரியம் /நிக்கல் கலப்பு உலோகம்- ஸ்பார்க் (Spark plugs) பிளக், எலெக்ட்ரான் ட்யூப் .
பேரியம் சல்பேட் – மருத்துவத் துறை, எண்ணை , எரிவாயு ஆராய்ச்சி
பேரியம் , கால்சியம், ஈயம் கலப்பு உலோகம் – பேரிங்ஸ் (Bearings)
பேரியம் நைட்ரேட் , குளோரேட் – பச்சை மத்தாப்பு, வாண வேடிக்கைகள் (Fire works, Sparklers)
பெயிண்ட் தொழில்
1600ம் ஆண்டு வாக்கில் ஒரு இத்தாலியர் இதைக் கண்டுபிடித்தார். போலோக்நா (Bologna) எற ஊரில் கண்டுபிடித்ததால் முதலில் இதை போலோக்நா கல் (Bologna Stone) என்று அழைத்தனர். இதை வெப்பமாக்கினாலோ சூரிய ஒளியில் நீண்ட நேரம் வைத்திருந்தாலோ இது இரவில் பிரகாசிக்கும். அதற்குப் பின்னர் கார்ல் ஷீல் , டாக்டர் வில்லியம் விதரிங், ஹம்ப்ரி டேவி ஆகியோர் இதன் வெவ்வேறு உப்புக்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டனர்.
–subham–