ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1

most of the pictures Yogic white

ஆய்வுக் கட்டுரை எண்: 1630; தேதி : 7 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

இந்து மதத்தின் மூன்று சிறப்புகள்:

1.உலகின் எந்தப் பகுதியிலும் சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள், புனிதர்கள் தோன்ற முடியும். அவர்கள் அவதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்து மதம் ஒப்புக் கொள்கிறது

2.ஏனைய மதத்தினரை ‘காபிர்’ (KAFIR) என்றோ, ‘பேகன்’ (PAGAN) என்றோ ஏசுவதில்லை. எல்லோரையும் ‘அம்ருதஸ்ய புத்ராஹா’, ‘திவ்யாத்ம ஸ்வரூபலாலா’ (ஏ! இறைவனின் புதல்வர்களே) என்று அழைப்பர்.

3.உலகின் பழைய மதம் என்றாலும் பின்னர் வந்த தத்துவ ஞானிகள், இறைவனின் தூதர்கள், மத ஸ்தாபகர்கள் ஆகிய அனைவர் சொன்னதும் இந்து மத நூல்களில் ஏற்கனவே உள்ளன. இதன் காரணமாக யாரையும் மதம் மாற்றியதும் (PROSELYTISATION)  இல்லை; யாருடனும் மதம் தொடர்பாக “புனிதப் போர்” (CRUSADES, JIHADS) நடத்தியதும் இல்லை.

இந்து மத நூல்கள் கடல் போலப் பரந்து விரிந்தவை; அதில் இல்லாதது ஏதும் இல்லை.எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, சுமேரிய பழங்கதைகளைப் படிப்போருக்கு, அட! நம்மைக் காப்பி அடித்து எழுதி இருக்கிறார்களே! –என்று நினைக்கத் தோன்றும். அத்தோடு அவ்விலக்கியங்களில் காண முடியாத உயரிய கருத்துக்களும் இந்துமத நூல்களில் இருக்கும். (உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் கடைசி பாடல் கருத்து பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்).

இன்ன பல சிறப்புகளால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏசு கிறிஸ்து இந்தியாவில் இமயமலைக்கு வந்து குருகுல வாசத்தில் அமர்ந்து உபநிஷதங்களைக் கற்று, ஆட்டு இடையர்களுக்கும், சடங்குகளை மட்டும் அர்த்தம் இன்றிப் பின்பற்றியோருக்கும் உபதேசம் செய்தார். அவர் பிறவியிலேயே ஞானி. இதற்குக் காரணம் அவர் பிறந்த யூதமதப் பிரிவான ஈசன்னியர் (ESSENES) பிரிவு இந்து மத யோகியர் போன்ற நடை,உடை,பாவனை உடையதொரு ஒரு பிரிவு (கட்டுரைக்குள் இவர்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லியுள்ளேன். மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களை நாடலாம்).

ஜீசஸ் கிரைஸ்ட் (JESUS CHRIST)  இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர். அதற்கு சில மறுப்புரைகளும் வந்து விட்டன. ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டாத சில விஷயங்களை நான் தொகுத்து — “பைபிளில் சம்ஸ்கிருதம்” (SANSKRIT IN BIBLE, PART 1 AND PART2 ) என்ற இரண்டு பகுதி கட்டுரையை மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டேன். சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி (JESUS MYSTERY: DID HE LEARN AT HINDU GURUKULA?) என்று இன்னொரு கட்டுரையும் எழுதினேன். அதன் சுருக்கத்தை தமிழில் சிறு சிறு பகுதிகளாகத் தருகிறேன்.

ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் (GOSPELS OF MARK, MATEW, LUKE AND JOHN) ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு (NEW TESTAMENT) நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர். இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க.

christ and krishna

ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம். அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும். இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு- உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது. வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு படைத்து, துணி துவைத்து பாடத்தையும் படி — என்று குருகுல வாசம் செய்ய ஏழு வயதில் அனுப்பிவிட்டனர். பின்னர் 20 வயதில் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டனர். இதற்குப் பின் கெட்ட வழியில் செல்வது கடினம். மேலும் வாத்தியார் வீட்டில் 13 ஆண்டுகளுக்கு தினமும் மிலிட்டரி ட்ரில் (MILITARY DRILL)  போல செய்துவந்தது அதே நல்ல வழியில் செல்லவும் உதவியது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” (HABITS DIE HARD) — என்பது தமிழ் பழமொழி. நல்லதானாலும் கெட்டதானாலும் சின்ன வயதில் படித்தது அவ்வளவு எளிதில் மாறாது.

அந்தக் காலத்தில் ஒரே குருவிடம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். அததகைய குருமார்களை குலபதி என்று பட்டம் கொடுத்து அழைப்பர். அது மட்டுமின்றி ஏசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தட்சசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இந்திய நகரங்களில் மாபெரும் பல்கலைக் கழகங்களும் நடந்துவந்தன.

இந்த குருகுலவாசம் பற்றி ஈசன்னிகளுக்குத் தெரியும். அதனால் ஏசுவை இங்கே அனுப்பிவைத்தனர்.ஈசன்னிகள் என்பது ஈச, ஈச்வர (இறைவன்) என்னும் மூலத்தில் இருந்து பிறந்த சொல் என்பது எனது துணிபு. இந்த யூதமதப் பிரிவு பற்றி பிளினி (கி.பி.70 PLINY THE ELDER), ஜோசபஸ் முதலியோர் கொஞ்சம் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் கூறுவதாவது: இந்தப் பிரிவினர் தினமும் குளிப்பார்கள் (இது பாலஸ்தீனத்தில் ஒரு அதிசயம்!!). இவர்கள் இறை நாட்டம் உடைய யோகியர். இவர்களில் பெரும்பாலோர் கல்யாணம் செய்து கொள்வதில்லை (பிரம்மசாரி). சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்து யோகிகள் பற்றி என்ன என்ன சொல்வோமோ அததனையும் ஈசன்னிகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளன. இந்தக் குலத்தில் பிறந்தவர்தான் ஏசு. ஆகையால் அவர் குருகுல வாசத்துக்கு இமயமலைக்கு வந்ததில் வியப்பதற்கு ஒன்றுமிலை.

மேலும் காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் (JEWS) உள்ள தொடர்பு பற்றி பல ஆய்வுகள் உண்டு. கி.மு 1000 ஆண்டில் இருந்த சாலமன் (SOLOMON THE WISE) காஷ்மீருக்கு வந்ததாக செவிவழிக் கதைகள் உள்ளன. அவன் விக்ரமாதித்தன்போல பெரிய அறிவாளி. இது தவிர சிலுவையில் அறைபப்பட்ட மூன்றாம் நாள் ஏசு உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து 120 வயது வரை யோகி போல வாழ்ந்தார் என்றும் காஷ்மீரில் அவரது சமாதி உள்ளது என்றும் ஒரு புத்தகம் வேறு வெளியாகி இருக்கிறது. யூதர்களின் 12 பிரிவுகளில் ஒன்று காஷ்மீருக்கு வந்தது என்ற ஐதீகமும் உண்டு.

Jesus-Christ-and-Krishna1

பைபிள்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

இந்து மதப் புராணங்களில் எப்படிப் பல இருக்கின்றனவோ இப்படி ஏசு பற்றி புராணங்களும் ( மாறுபட்ட பைபிள் பதிப்புகள்) ஏராளமாக இருந்தன. துரு கியில் இருந்த கான்ஸ்டன் டைன் (EMPEROR CONSTATNTINE 272-337 CE) என்ற மன்னன் ஒரு பைபிள் மகாநாடு கூட்டி எல்லா பைபிள்களையும் எரித்துவிட்டு ஒரே பைபிள் மட்டும் வைத்துக் கொண்டார். அதனால் ஏசு 12 வயது முதல் 30 வயது வரை 18 ஆண்டுகள் என்ன செய்தார், எங்கே இருந்தார் என்பதெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது. அது இப்பொழுதும் தூய ஏசுவின் வாழ்வில் ஒரு ஓட்டை போல, கறை போல பைபிளில் உள்ளது. பைபிளை யாரும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது, யாரும் மொழி பெயர்க்கக் கூடாது, வாரம்தோறும் சர்ச்சுக்கு வந்துதான் கேட்க வேண்டும் என்று அவர் உத்தரவு போட்டார். இதை மீறிய பலர் மரண தண்டணைக்குள்ளான சோக சம்பவங்களை பைபிளின் கதை என்ற (The Story of the Bible) புத்தகத்தில் காணலாம். எல்லாம் நூல் வடிவிலும் இந்தெர்நெட்டில் கட்டுரை வடிவிலும் உள்ளன.

இப்பொழுது பலவிதமான பைபிள்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் பூசி மெழுகிவருகின்றனர். சாக்கடல் பகுதியில் (Dead Sea Scrolls) கிடைத்த சுவடிகள் பற்றி பலவிதமான செய்திகள் வருகின்றன. லண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் மாஸ்கோ, ஜெர்மனி முதலான இடங்களிலும் துண்டு துண்டாக இருந்த கிரேக்க மொழி பைபிளை (Sinai Bible) அனைத்து நூலகங்களும் இணைந்து, துண்டுகளை ஒட்டுப்போட்டு இப்பொழுது இணைய தளத்தில் வெளியிட்டுவிட்டன. ஆனால் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வில்லை. சினாய் பைபிள் (Codex Sinaiticus)  என்ற இதை யார் வேண்டுமானாலும் கிரேக்க மொழியில் படிக்கலாம். இதற்கும் கிறிஸ்தவ பைபிளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பதாக பைபிள் மோசடி (The Bible Fraud by Tony Bushby)  என்ற நூல் கூறுகிறது.

இனி வரும் கட்டுரையின் தொடர்ச்சியில் ஏசு கிறிஸ்து பற்றி விவேகாநந்தரின் விநோதக் கனவு, பைபிளில் அத்வைதம் எப்படி படிப்படியாக மலர்கிறது என்ற விவேகாநந்தரின் சொற்பொழிவு, ஏசுவின் ஒரு மண்டல கால விரதம், மாதா கோவில்களில் புத்தமத வழக்கங்கள், ஏசுவுக்கு மீன் பெயர் வந்தது ஏன்?, பகவத் கீதையும் பைபிளும், கிறிஸ்துவும் கிருஷ்ணரும், விதுர நீதியும் ஏசு உபதேசமும், உபநிஷத் கதைகளும் ஏசுவின் கதைகளும், ஏசு பக்தர்கள் போட்ட நமஸ்தேயும் நமஸ்காரமும், துரதிருஷ்ட எண் 13, ஏசு செய்த பாதபூஜை ஆகிய விஷயங்களைக் காண்போம்.

தொடரும்…………………………..