Painting at Singapore temple (from twcenter.net)
காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!!
கட்டுரையாளர் ; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.
ஞானிகளுக்கு மரணம் என்பது உடைகளை மாற்றுவது போல.
“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”
என்கிறார் பட்டினத்தார்.”ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச” (2-27) என்று பகவான் கிருஷ்ணன் கூறியதன் விளக்கமே இது.
உலகில் எதையும் இரண்டாகப் பார்ப்பவர்களுக்குதான் பயம் என்பது உண்டு என்று ஞானிகள் பகர்வர். இதைப் படிப்பது எளிது. ஆனால் செயலில் கொண்டுவருவது எளிதல்ல. இந்து மதத்தின் எல்லா சடங்குகளும், ஒருவரை, இந்த திசையில் அழைத்துச் செல்லும்.
Shiva kicking Yama to save Markandeya.
உலகிலேயே மிக வினோதமான பிரார்த்தனை இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது! எல்லோரும் தன்னலம், குடும்ப நலம், நாட்டு நலத்துக்குப் பிரார்த்திப்பர். ஆனால் இந்துக்கள் மட்டும் இந்த மூன்று நலத்தோடு வேறு ஒன்றையும் சேர்த்துக் கொள்வர். எந்தக் காலத்திலும் எனக்கு ஜன்ம, ம்ருத்யு (பிறப்பு,இறப்பு) வர்க்கூடாது என்று. இதை பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆழ்வார் பாடல். தேவாரத் திருவாசகப் பாடல்கள் எல்லாவற்றிலும் காணலாம்.”இனி பிறவாமை வேண்டும், பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்”– என்று பிரார்த்திப்பதில் எல்லோரும் முன்னிற்பர்.
ஆகையால் ஞானிகளுக்கு எமதர்மனை எள்ளி நகையாடும் பக்குவம் வந்துவிடுகிறது. இதைப் படிக்கும் நமக்கும் மரண பயம் நீங்கி விடுகிறது. நான் லண்டனில் ஒரு மருத்துவ மனையில் பகுதி நேர மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்தேன். ஒரு விஷயத்தை வெள்ளைக்கார டாக்டர்கள் புரிந்துகொள்ள முடியாவே இல்லை.
பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒருவர் இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று தெரிந்தால் அதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுவர். ஆனால் மிகவும் பக்குவமாக, பீடிகை போட்டு, மெதுவாக, அழகாகச் சொல்லுவர். இப்படிப் பலருக்கு மரணச் செய்தி அறிவிக்கும் கட்டியங்காரனாக வேலை பார்ப்பது எனது வேலையின் ஒரு சிறு பகுதிதான். இப்படிப்பட்ட ஒரு கெட்ட செய்தியைக் கொடுத்தபிறகு அவர்கள் “தொச்சு” கொட்டிக்கொண்டு, அலட்சியமாக நான் “இப்பவே ரெடி, காடு வா என்கிறது, நாடு போ போ”– என்கிறது என்பர். இதை நான் அப்படியே மொழி பெயர்த்தால் வெளி நாட்டு டாக்டர்களுக்குப் புரியாது. கொஞ்சம் கலாசாரப் பின்னனி வசனங்களைப் பேசிவிட்டு விளக்குவேன். நோயாளிகளின் முகத்தில் பயங்கரமான அதிர்ச்சி (ஷாக்) வரும் என்று எதிர்பார்த்த டாக்டரின் முகத்தில் நான் ஷாக்கையும் வியப்பையும் ஒருங்கே காண்பேன்.
இதுதான் இந்து மதத்தின் மிகவும் வியப்பான பகுதி. வேதத்தில் உள்ள எல்லாப் பிரார்த்தனைகளும் நமக்கு ‘பாஸிட்டிவ்’ எண்ணங்களை உண்டாக்குவதோடு நமக்கு உள்ளே “ஷாக் அப்சார்பர்” களையும் பதித்துவிடும். ஆகையால் எந்தக் கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ள முடிகிறது. இதை உலகம் முழுதும் நாம் பரப்பினால் தற்கொலைகள் குறைந்துவிடும். ‘சைக்கியாட்ரிஸ்ட்’, ‘சைகாலஜிஸ்ட்’ எல்லோருக்கும் வேலை மிக மிகக் குறைந்துவிடும்.
(‘சைக்கியாட்ரிஸ்ட்’ என்பவர் மன நோயை மருந்து மூலம் குணமாக்குபவர். ‘சைகாலஜிஸ்ட்’ என்பவர் மன நோயை ஆறுதல்–ஆலோசனை வழங்கல் மூலம் குணமாக்குபவர்.)
நமது ஞானிகளின் ஆவேசத்தைக் கீழ்கண்ட பாடல்களில் பாருங்கள்:
1.திருமூலர் என்ன சொல்கிறார்: ‘ஞான வாளால் எமனை வெட்டுவேன்!’
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)
எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை.(Tirumanthiram)
2.பாரதியின் வீரம்! ‘’உன்னைப் புல் போல மிதிப்பேன்!’’
‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’ — என்பார் பாரதி.
அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? அதற்கு அவரே கூறும் பதில்:
“ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைப்பவருக்கு
அச்சம் உண்டோடா? – மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா.”—(பாரதி பாடல்)
நம்மாழ்வார் திருவாய் மொழி
3.பாரதியாக்கு மிகவும் பிடித்த நம்மாழ்வாரும் நமன் எதிர்ப்பு அணியில் சேர்ந்து பாடுகிறார்:
பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டுகொண்மின்;
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மையப் புகுந்து, இசை பாடி,
ஆடி, உழிதரக் கண்டோம் (திருவாய்மொழி)
3.அருணகிரிநாதர் பாடுவார்: ‘’முருகன் அருகில் இருக்க பயமா?’’
“நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த
கோள் என் செயும் , கொடுங்கூற்று என் செயும், குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்
தோளும்,கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
(39, கந்தர் அலங்காரம்)
4.அப்பர் சூளுரை: ‘’சிந்தையில் சிவன் இருந்தால் பயமேது?’’
நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை –(6-961)
5.பட்டினத்தார் பாடுகிறார்: ‘’நமனை வெல்ல மந்திரம்!’’
நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)
கையில் கம்பு இருந்தால் நாய் பற்றிய பயம் போய்விடும். பிச்சை கேட்டுக் கொஞ்சம் உணவு கிடைத்தால் போதும். சோறு பற்றிய கவலையே இல்லை. நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லுவோருக்கு எம பயம் இல்லை. திரு நீறு அணிவோருக்கு பேய் பயமில்லை. பிறவிப் பிணிக்கு கடவுளின் அருள் இருந்தால் போதும். இந்தப் பிறவிப் பிணியைத்தான் வள்ளுவன் திருக்குறளின் முதல் அதிகாரத்திலேயே செப்பிவிட்டான். இதுதான் இந்துக்களின் தனிச் சிறப்பு.
நசிகேதன் என்ற சிறுவனும், சாவித்திரி என்ற பத்தினிப் பெண்ணும் எமனுடன் வாதாடி வெற்றி பெற்றனர். மார்க்கண்டேயன் என்ற 16 வயதுச் சிறுவன் சிவ பக்தியால் — என்றும் 16 வயது — என்ற வரம் பெற்றான் என்பதையும் இத்தருணத்தே நினைத்தால், மரண பயம் நீங்கி, அப்பர் சொல்வது போல ‘’இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று நாமும் பாடி ஆடலாம்.
Please read my earlier post: முன்னர் எழுதிய கட்டுரையும் காண்க:
தமிழில் யமன்
contact swami_48@yahoo.com




You must be logged in to post a comment.