
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9895
Date uploaded in London – – 26 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
வசனமிகவேற்றி மறவாதே, மனது துயராற்றில் உழலாதே
இசை பயில் சடாக்ஷரமதாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்றருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ, அமரர் சிறை மீட்ட பெருமாளே!
அருணகிரிநாதர் திரு நாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் ஆறு படைவீடுகளில் மூன்றாவது படை வீடாக அமையும் பழநி என்று அனைவராலும் அறியப்படும் திருவாவினன் குடி ஆகும். இந்தத் தலம் தமிழகத்தில், கொங்கு நாட்டில் திண்டுக்கல் மாவட்டதில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லிலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து இது 123 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள கோவிலின் மூலவர் குழந்தை வேலாயுதர்.
மலை மீதுள்ள கோவிலின் மூலவர் தண்டாயுதபாணி நவபாஷாண மூர்த்தி. தல விருக்ஷம் – நெல்லி மரம். தீர்த்தம் – ஷண்முக நதி.
பழனியில் முருகன் கோவில் கொண்டுள்ளதைப் பற்றிய பிரசித்தமான வரலாற்றை அனைவரும் அறிவர். ஒரு முறை மாம்பழம் ஒன்றை நாரத முனிவர் சிவபிரானிடம் அளிக்க அவருடன் இருந்த இரு குமாரர்களான விநாயகர் மற்றும் முருகனை நோக்கி அவர், “யார் உலகை முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கே இந்தக் கனி” என்றார். உடனே முருகன் தன் மயில் வாகனத்தில் ஏறி அதிவேகத்துடன் உலகை வலம் வரப் புறப்பட்டார். ஆனால் விநாயகரோ சிவபிரானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து “நீவீரே உலகம். உம்மை வலம் வந்து விட்டேன்” என்றார். இதனால் சிவபிரான் அவரிடம் அந்தக் கனியைத் தந்தார். உலகைச் சுற்றி விட்டு அங்கு வந்த முருகன், கனி விநாயகர் கையில் இருப்பதைக் கண்டு, வெகுண்டு அங்கிருந்து அகன்றார். பழநித் தலத்தில் தண்டாயுதபாணியாக நின்றார். பார்வதி தேவியும் சிவபிரானும் அவரை நோக்கி, “பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா” என்று கூறி அவரது கோபத்தைத் தணித்து, இந்தத் தலத்தை முருகன் இருக்கும் தலமாக பெருமையுறச் செய்தனர். திரு ஆவினன் குடி என்ற பெயருக்கான காரணம் திரு – லக்ஷ்மி, ஆ – காமதேனு, இனன் – சூரியன், கு – பூமி, டி – அக்னி ஆகியோர் இந்தத் தலத்தில் வந்து வழிபட்டமையால் இது திருவாவினன் குடி என்ற பெயரைப் பெற்றது.

சங்க இலக்கியத்தில் பொதினி என்று கூறப்படுகிறது இந்தத் தலம்.
மலையின் மீதுள்ள முருகனின் சிலையை பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் ஸ்தாபித்தார். இந்தச் சிலை நவபாஷாணத்தால் ஆனது. சிலை காலப்போக்கில் பழமையானதை ஒட்டி இங்கு விக்ரஹ அபிஷேகம் எதுவும் செய்யப்படாமல் சந்தனப் பூச்சு மட்டும் பூசப்படுகிறது. இந்த சந்தனத்தைப் பெறுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதி பக்தர்கள் இதைப் பெறுகின்றனர். பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் நைவேத்யம் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவது ஒரு தனிச் சிறப்பாகும்.
தைப்பூசம், பங்குனிஉத்தரம், சூர சம்ஹாரம் உள்ளிட்ட பல திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பழநியில் உள்ள தங்கத் தேர் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.

இங்கு மலை மீது போகருக்கான சமாதி உள்ளது. முருகன் சந்நிதியிலும் போகர் சந்நிதியிலும் மரகத லிங்கங்கள் உள்ளன. பழநியில் இடும்பனுக்கு ஒரு கோவில் உண்டு. இங்குள்ள சிவசக்தி மலைகளையும் இடும்பனையும் பற்றி, பழநித் தலபுராணமும் கொங்கு மண்டல சதகமும் விரிவாகக் கூறுகின்றன. சூரபன்மனுக்கு அஸ்திர சஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்த குரு இடும்பாசுரன்.முருகபிரான் அசுரர்களை அழித்த பின் நல்லறிவு பெற்ற அவன் தன் மனைவி இடும்பியோடு பொதியமலை வந்து, அகத்தியப் பெருமானிடம் அடைக்கலம் புகுந்தான். அகத்தியர் அவனிடம் வடக்கே சென்று, அங்கே கேதாரத்தில் உள்ள சிவ, சக்தி ஆகிய இரு மலைகளைக் கொண்டு வந்தால் அவனுக்கு போகம், முக்தி இரண்டும் கிடைக்கும் என்று கூறி அருளினார். அகத்தியர் கூறியபடியே, இடும்பாசுரன் சிவ, சக்தி ஆகிய இரு மலைகளையும் தோள் சுமையாக, காவடியாகத் தூக்கி வந்தான். வழி தெரியாமல் இடும்பன் திருவாவினன் குடியை – பழனியை- அடைந்தான். பசி, தாகம் இரண்டும் அவனை வருத்த தன் தோளில் இருந்த சிவ,சக்தி,மலைகளைக் கீழே இறக்கி வைத்தான். பசி தாகம் நீங்கிய பின்னர் மலைகளை மீண்டும் தூக்கினான். ஆனால் மலைகள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சந்தேகம் கொண்ட இடும்பன் மலைகளின் மீது ஏறிப் பார்த்தான். அங்கே தண்டம் தாங்கி இருந்த குமரவேல், இடும்பனை நோக்கி, “அசுரனே, இந்த மலைகளை இங்கேயே விட்டுச் செல்” என்றார். கோபம் கொண்ட இடும்பன் குமாரவேளின் மேல் பாய, நடந்த சண்டையில் இடும்பன் மாய்ந்தான்.
இதை அறிந்த இடும்பி குமரவேளைத் துதித்து அருள் வேண்டினாள்.
முருகனின் கிருபையால் இடும்பன் உயிர் பிழைத்து அவரைத் துதித்தான். தனக்குக் குற்றேவல் செய்து வருமாறு இடும்பனை முருகன் பணித்தார். ஆக இப்படிப்பட்ட ஏராளமான வரலாறுகள் பழநியைப் பற்றி உண்டு. அருணகிரிநாதர் இந்தத் தலத்தில் முருகனை வழிபட்டு 95 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். பழநியில் நெடுங்காலம் தங்கி அதன் சிறப்புக்களையும் வரலாறுகளையும் அறிந்த அவர் ‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று கூறிப் பாராட்டுகிறார். பழநி மலையை வலம் வருவது பாவத்தைப் போக்கும். மலை மீது ஏற யானைப் பாதை ஒன்றும், படிக்கட்டுகள் மீது ஏறிச் செல்லும் வழியும் உண்டு. மலை மீதுள்ள கோவிலை அடைய விஞ்ச் (Winch) வசதியும் உண்டு.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பழநி முருகன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். அருணகிரிநாதரின் அருள் வாக்கு இது.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல்
வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்ம்யில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
வெற்றி வடி வேலனுக்கு அரோகரா! நன்றி வணக்கம்!
****

tags- போகர், சமாதி, பழனி, பழநி,


