கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1283; தேதி: 12 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆய்வுக்கட்டுரை வரிசையில் நேற்று மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். இன்னும் நிறைய ஜோதிடச் செய்திகள் இருந்தும் மாதிரிக்காக கொஞ்சம் விஷயங்களைக் குறிப்பிட்டேன். அது போலவே புத்தர் பற்றிப் பல அற்புதச் செய்திகள் இருக்கின்றன. இலங்கைக்கு புத்தர் வந்தாரா? என்ற தலைப்பில் அவற்றைத் தனியாகத் தருவேன்.
மகாவம்சத்தை எழுதியதே ஒரு தமிழராகவோ அல்லது சங்கத் தமிழ் இலக்கியத்தைப் படித்தவராகவோ இருக்க வேண்டும் என்பது எனது துணிபு. மநுநீதிச் சோழன் கதை, குமணன் கதை, கோப்பெருஞ்சோழன் நட்பு, கிளி நெல் கொண்டு வந்த கதை, குழந்தையை யானை காலில் இடறவிட்ட கதை போன்ற பல சங்கத் தமிழ் கதைகளும் சங்க காலப் பெயர்களான கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன், ஏராளமான நாகர்கள் பெயர்களும் மகாவம்சத்தில் வருவதால் இது தமிழ் வரலாற்றுக்குத் துணைபுரியக்கூடும். அதையும் தனியாக எழுதுவேன். நேரடியாகத் தமிழர் பற்றிச் சொல்லும் கதைகளை எல்லோரும் முன்னரே அறிவர்.
மகாவம்சம் என்னும் பாலி மொழி நூல் இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் என்பதை முதல் பகுதியில் விளக்கி இருக்கிறேன். மகவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உண்டு.
அற்புதச் செய்தி 1
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் பற்றிய பத்தாவது அத்தியாயத்தில் ஸ்வர்ணபாலி என்பவர் செய்த அற்புதம் வருகிறது. அவர் தங்கக் கிண்ணத்தில் உணவு கொடுத்த பின்னர் அவர் பறித்த ஆலமர இலைகள் எல்லாம் தங்கக் கோப்பைகளாக மாறிவிடுகின்றன. இதை மஹாபாரத ராஜசூய கீரி கதையுடன் ஒப்பிடலாம். தர்மம் செய்த ஒரு ஏழைப் பிராமணன் வீட்டில் சிந்தப்பட்ட உணவில் புரண்ட கீரியின் பாதி உடல் மட்டும் தங்கமான கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன். உணவு தானம் செய்வோர் தொட்டதெல்லாம் தங்கமாகும். ‘’மண் எல்லாம் பொன் ஆகும் ராமர் வரவாலே’’ என்ற சம்பூர்ண ராமயணத் திரைப்படப் பாடலையும் நினைவிற் கொள்க.
அற்புதச் செய்தி 2
தேவனாம்ப்ரிய திஸ்ஸன் பற்றிய பதினோறாவது அத்தியாயத்தில், நாட்டில் ரத்தினக் குவியல்கள் பூமிக்குள்ளிருந்து தானாக வந்த செய்திகளும் எலிகளும் கிளிகளும் உண்வுதனியங்களைக் கொண்டு குவித்த செய்திகளும் உள்ளன. குதிரை முத்து , யானை முத்து , ரத முத்து ,மணி முத்து , அணி முத்து , மோதிர முத்து , காகுத பழ முத்து, சிப்பி முத்து ஆகிய எட்டு வகை முத்துகள் கடலுக்கு வெளியே கரையில் குவிந்த அற்புதச் செய்திகளும் உள. அந்த மன்னன் அவைகளை அசோக மாமன்னனுக்கு அனுப்ப நினைக்கிறான். இருவரும் பார்த்ததே இல்லை. ஆயினும் ஆப்த நண்பர்கள்! பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல!!
அற்புதச் செய்தி 3
மகாவம்சத்தில் பல இடங்களில் பூமி அதிர்ச்சி அற்புதங்கள் வருகின்றன. 15-ஆவது அத்தியாயத்தில் பௌத்தர்களுக்கு மகாமேக வனத்தைக் கொடுக்க தாரை (நீர்) வார்த்தவுடன் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன், இலங்கைத் தீவில் பௌத்த தர்மம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார். மன்னன் கொடுத்த மல்லிகைப் பூவை எட்டு திசைகளிலும் போட்டவுடன் மீண்டும் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன் போதி (அரச) மரம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார்.
அற்புதச் செய்தி 4
புத்தரும் பல தேரர்களும் பறவைகள் போலப் பறந்து வருவதும் காற்றில் மிதப்பதும் பல இடங்களில் பேசப்படுகிறது. இது இந்துமதப் புராணங்களில் காணப்படும் காட்சியே. நாரதர் என்ற முனிவர் த்ரிலோக சஞ்சாரி. அவர் ஒரு விண்வெளிப் பயணி. கிரகம் விட்டு கிரகம் தாவுவார். 14-ஆவது அத்தியாயத்தில் தேரர்களை அழைத்துவர ரதத்தை அனுப்பினான் மன்னன். அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டு வானத்தின் வழியே பறந்து வந்து இறங்கினர் என்று 14-ஆவது அத்தியாயம் பகரும் ஜாம்பூத்வீபத்தில் (இந்தியாவில்) உள்ள துறவிகளுக்கு மற்றவர் எண்ணங்களை அறியும் சக்தி உண்டு என்றும் அவர்கள் ‘’தெய்வீகக் காது’’ படைத்தவர்கள் என்றும் தேரர்கள் விளக்குகிறார்கள்.
அற்புதச் செய்தி 5
17-ஆவது அத்தியாயத்தில் ஒரு யானை புத்தரின் அஸ்திக் கல்சத்தைச் சுமந்து வருவதையும் அந்தக் கலசம் தானாக வானில் பறந்து மிதந்ததையும் படித்தறியலாம். மன்னரும் மக்களும் அதைக் கண்டு வியக்கின்றனர்.
அற்புதச் செய்தி 6
19-ஆவது அத்தியாயத்தில் போதி மரம் வருகை பெற்றி விவரிக்கப்பட்டுளது. முழுக்க முழுக்க அதிசய சம்பவங்கள் வருணிக்கப்பட்டுள்ளன போதிமரத்தைக் கடவுள் போல வழிபட்டு ஊர்வலம் நடத்தியது, பூஜை போட்டது, ஊரையே அலங்கரித்தது, மன்னன் அதன் பின்னாலேயே வந்தது எல்லாம் உள. அனுராதபுரத்தில் அதை இறக்கியவுடன் அது 80 முழ உயரத்துக்கு வானில் பறந்து தானாகவே அதற்கு நிர்மாணிக்க்ப்பட்ட பூமியில் இறங்கியது. உடனே பூமியே அதிர்ந்தது. மன்னன் தேவனாம்ப்ரிய திஸ்ஸனும் பல்லாயிரக் கணக்கானோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்தனர்.
அற்புதச் செய்தி 7
12-ஆவது அத்தியாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் விழுங்கிவிடும் கடல் பூதத்தை ஒரு தேரர் அடக்கிய கதை விவரிக்கப்படுகிறது. அவர் பெயர் சோனதேரர். அதிலிருந்து அரண்மனையில் குழந்தை பிறந்தால் அதற்கு சோனதேரா என்னும் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டது. கடல் பூதம் ஓட்டம் பிடித்தது.
இதுபோன்ற அற்புதச் செய்திகளில் அற்புத அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிப்படும். ஆகையால் இத்தகைய செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அறிவு எனும் மைக்ரஸ்கோப்பின் அடியில் வைத்த ஆராய்வது நலம் பயக்கும்.
அற்புதச் செய்தி 8
28-ஆவது அத்தியாயத்தில் துட்டகாமனி, புத்த சைத்தியம் கட்டுவதற்காக, இந்திரன் உத்தரவின் பேரில் விஸ்வகர்மா கற்களைத் தயார் செய்தான். அதை ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் சென்று கண்டுபிடித்து மன்னனிடம் சொன்னான். கற்கள் இருந்த இடத்தை அவனுக்குக் காட்ட, வனதேவதை ‘உடும்பு’ உருவத்தில் வந்து அவனை அழைத்துச் சென்றது. அதற்குப்பின் நாடு முழுதும் ரத்தினக் கற்களும், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களும் கிடைத்தன.
தமிநாட்டிலுள்ள 38,000 கோவில்களின் தல புராணங்களைப் படிப்போருக்கு இந்த அற்புதங்கள் வியப்பளிக்கா. ஏனெனில் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு பறவை, விலங்கு, மரம் முதலியன் தொடர்பு பெற்று இருக்கும். இலங்கை பூமி — இராவணன், குபேரன் காலத்தில் இருந்தே ரத்னம் கொழித்த பூமி. இதை வால்மீகி முனிவரும் தொட்டுக்காட்டி இருக்கிறார். இலங்கையின் பொன்மயமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய லெட்சுமணனிடம், ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’’ என்று கூறி ஸ்வர்ணமய இலங்கையை நிராகரித்து விடுகிறான் ராமன். ஆகவே துட்ட காமினி சேதியம் கட்டத்துவங்கியவுடன் ஆளுக்கு ஆள் பூமியைத் தோண்டத் துவங்கினர் என்றும் அப்போது எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் கிடைத்தன என்றும் பொருள் கொள்வதில் தடை ஏதும் இல்லை.
அற்புதச் செய்தி 9
12 அரசர்கள் பற்றிய 35-ஆவது அத்தியாயத்தில் யானை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. ராணியானவள் ஒரு குழந்தையை யானையின் காலுக்கு அடியில் வைத்துக் கொல்லச் சொல்கிறாள். அதை எடுத்துச் சென்ற சேவகப் பெண் யானையிடம் உண்மையைச் சொன்னவுடன் அது கண்ணீர் வடித்து கோபம் கொண்டு அரண்மனை வாயிலைத் தகர்த்து, சிறைப்பட்ட மன்னனை விடுவித்து, அவன் மறுகரைக்குச் செல்ல கப்பல் ஏற உதவிய கதை அது. இது போன்ற யானைக் கதைகள் சங்க கலம் முதல் ஏராளமாக உள. அத்தனையையும் யானை அதிசயங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். இதே போல சோழ மன்னன் ஒரு குழந்தையைக் கொல்ல எத்தனித்தபோது கோவூர்க் கிழார் சென்று தடுத்ததை புறநானூற்றில் (பாடல் 46) காண்க. மாபெரும் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் அனுப்பிய யானை அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்துவிட்டது!
அற்புதச் செய்தி 10
36-ஆவது அத்தியாயத்தில் மழை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. இது போன்ற செய்திகளையும் மழை அதிசயங்கள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சங்கபோதி என்ற மன்னன் நாட்டில் வறட்சி மிகவே, மகாஸ்தூப முற்றத்தில் படுத்துக்கொண்டு மழை பெய்யாதவரை நான் வெளியேறமாட்டேன். மழை பெய்யாவிடில் இங்கேயே உயிர் துறப்பேன் என்று சபதம் செய்கிறான். உடனே தேவர்கள், தீவு முழுதும் மழை பெய்யவைத்து வளம் ஊட்டினர்.
இது போன்ற எத்தனையோ அதிசயங்கள் மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றன. படித்து மகிழ்க. அவற்றின் உட்பொருளை உணர்க!!
contact swami_48@yahoo.com







You must be logged in to post a comment.