
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9991
Date uploaded in London – 18 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

அன்றிலிருந்து அவர், அற்புதமாக சீதாதேவி தானே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த மூலராமரின் பூஜையை உரிய முறையில் செய்து அனைவருக்கும் அக்ஷதை வழங்கி கடினமான ஸ்லோகங்களுக்கு விளக்கவுரையும் அளித்து வரலானார்.
நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு ஏராளமான ஸ்தலங்களுக்கு அவர் விஜயம் செய்தார். செல்லும் வழியில் எல்லாம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். உலகமே வியந்தது அவரது அருளாற்றலைக் கண்டு.
அத்வைனி என்ற இடத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன் அவன் பெயர் வெங்கண்ணா. எழுத்தறிவு இல்லாத அவனுக்கு அருள் பாலித்த ராகவேந்திரர் அவனுக்கு அக்ஷதை பிரசாதம் வழங்கினார். அவன் ராகவேந்திரரின் நாமத்தை உச்சரித்து வரலானான்.
அந்தக் காலத்தில் அரசு புரிந்த சுல்தானின் பிரதிநிதியாக இருந்தவன் அஸதுல்லாகான் என்பவன். அவன் வெங்கண்ணாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான். திகைத்துப் போன வெங்கண்ணா ராகவேந்திரரை நினைத்து வேண்ட, அவர் அருளால் அதை வெகு எளிதாகப் படிக்க முடிந்தது. இதனால் மகிழ்ந்த அஸதுல்லாகான் வெங்கண்ணாவை அன்புடன் அரவணைத்து ஆதரிக்கலானான். காலகிரமத்தில் அவன் திவானாக நியமிக்கப்பட்டான்.
இப்படி ராகவேந்திரர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம். தஞ்சாவூரில் பல காலம் வசித்து வந்த ராகவேந்திரர் கும்பகோணத்திற்கு மீண்டும் வந்தார். ஒருநாள் அங்கு வந்த சில பிராமணர்கள், ‘ராகவேந்திரர் நினைத்ததை எல்லாம் தருபவராமே, நாம் சில பண்டங்களை நினைத்துக் கொண்டால் அவர் தருவாரா என்று பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டனர். காவிரிக் கரையில் இருந்த அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பட்சணத்தை நினைத்துக் கொண்டனர். அப்போது ராகவேந்திரரின் காஷாயத்தை துவைப்பதற்காக வந்த அவரது சீடன் ஒருவன், “வாருங்கள், சீக்கிரம் வாருங்கள், உங்களுக்கான அனைத்து பக்ஷணங்களும் தயார்” என்றான்.
இதனால் திகைத்துப் போன அவர்கள் நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டனர். அப்போது அவன் கையிலிருந்த காஷாயம் கீழே நழுவி விழுந்தது. அவன் உடனே, “நான் என்ன சொன்னேன். ஒன்றுமே சொல்லவில்லையே” என்றான். ‘இல்லை நீ சொன்னதை நினைத்துப் பார்’ என்றனர் பிராமணர்கள். அப்போது நழுவி விழுந்த காஷாயத்தைக் கையில் எடுத்த அந்த சிஷ்யன் உடனே அவர்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அவர்களுக்கு உடனே புரிந்து விட்டது – அந்த சிஷ்யன் கூறுவது எல்லாம் அந்த காஷாயத்தை அவன் தொட்டதால் ஏற்பட்ட மகிமையாலேயே என்று. அவர்கள் மடத்திற்குச் செல்ல அங்கு அவர்கள் நினைத்த உணவு வகைகள் அனைத்தும் கிடைத்தன. அங்கு வந்த ராகவேந்திரர், “ வேண்டியது கிடைத்ததா?” என்று பரிவுடன் விசாரித்தார்.
இப்படி அன்றாடம் நடக்கும் அற்புதங்கள் ஏராளமாக இருந்தன; அவரது அருள் புகழ் நாடெங்கும் பரவியது. எழுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து அருள் பாலித்த ஸ்வாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்ய உத்தேசித்து மாஞ்சாலி என்ற கிராமத்தை உகந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்த இடம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1671ஆம் ஆண்டு சிராவண கிருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று அவர் ஜீவ சமாதி அடைந்தார். அந்த கிராமம் மந்த்ராலயம் என இனி அழைக்கப்படும் என்றும் அவர் அருளினார். அப்போது ஆண்டு வந்த சுல்தான் மசூத்கான் அந்த கிராமத்தை ராகவேந்திரருக்கு அளித்தான். பிருந்தாவன பிரவேசத்திற்கு முன்னர் அவர் அற்புதமான ஒரு உரையைத் தனது பக்தர்களுக்காக ஆற்றினார்.
மந்த்ராலயத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் மூலம் நாடெங்கும் சுமார் 300 பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவரை வணங்குவோர் அடையும் பலன்களை வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாது.
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் அவர் ஜீவனுடன் இன்றும் இருந்து அருள் பாலிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தினமும் அதிகாலையில் அவர் துங்கபத்ரா நதிக்கு நீராடச் செல்லும் பாதக்குறடுகளின் சப்தம் எழுகிறது. அதே போல அவர் மூலராமருக்கு பூஜை செய்யும் போது எழும் மணி ஓசையும் தினம் கேட்கிறது.
ராயர் என்று பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படும் ராகவேந்திரர் மதராஸ் பிரஸ்டென்ஸி என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட சென்னை ராஜ்யத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத் தலைவராக இருந்த சர் தாமஸ் மன்ரோவிற்கு தரிசனம் தந்த சம்பவம் சுவையான ஒன்று. (மன்ரோ பிறந்த தேதி : 27/5/1761 மறைந்த தேதி : 6/7/1827)
·
· தொடரும்

tags- மந்த்ராலய மஹான், ஸ் ராகவேந்திரர்! – 2,