யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!

doctor-joke-funny-picture

சம்ஸ்கிருத செல்வம் by S Nagarajan
அத்தியாயம் 19

Post No 728

யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!
இந்தக் கால ஆஸ்பத்திரிகளையும் மருத்துவர்களையும் நினைத்தாலேயே மனம் பதை பதைக்கிறது.
மருத்துவக் காப்பீடு செய்திருந்தால் அதில் உள்ள கடைசி பைசா வரை மருத்துவர்கள் கறந்து விடுகின்றனர். இல்லையேல் ‘அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்’ என்று உயிர் போகுமுன்னே பணத்தையும் போக வைத்து விடுகின்றனர்.

இதை எண்ணிப் பார்த்தார் பழைய காலக் கவிஞர் ஒருவர். அந்தக் காலத்திலும் இதே நிலை தான் போலும்! அப்படியே மனதில் தோன்றியதை கவிதையாகப் பொழிந்து விடுகிறார் இப்படி:-

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர I
யமஸ்து ஹரதி ப்ராணான் த்வம் து ப்ராணான் தனானி ச II

doctor joke2

வைத்ய ராஜ – ஓ வைத்திய ராஜரே! (Oh! King among Doctors!)
யமராஜ சஹோதர – யமராஜனின் சகோதரரே!
நமஸ்துப்யம் – உமக்கு நமஸ்காரம்!
யமஸ்து ஹரதி – யமனின் வருகை
ப்ராணான் – உயிரை எடுப்பதற்காக மட்டுமே
த்வம் து – ஆனால் உமது வருகையோ
ப்ராணான் ச தனானி – உயிரோடு எங்கள் பணத்தையும்
அபகரிப்பதற்காகவே!
இதே போல இன்னொரு பாடலும் உள்ளது!

Doctor-and-Patient

வைத்யராஜ! நமஸ்துப்யம் க்‌ஷயிதா சேஷ மானவ I
த்வயி வின்யஸ்தபாரோயம் க்ருதாந்த: சுகமேததே II

வைத்யராஜ! – ஓ வைத்திய ராஜரே! (Oh! Doctor!)
நமஸ்துப்யம் – உமக்கு நமஸ்காரம்!
க்‌ஷயிதா சேஷ மானவ – நீரே அனைத்து மனிதர்களையும் அழிப்பவர்!
த்வயி வின்யஸ்தபாரோயம் – உம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு
க்ருதாந்த: – அனைத்து உயிர்களையும் எடுக்கும் எமராஜன்
சுகமேததே – சுகமாக ஓய்வு எடுக்கிறான்

யமன் ‘ரெஸ்ட்’ எடுக்க உதவி செய்யும் வைத்ய ராஜனுக்கு தனது மனமார்ந்த ‘வணக்கத்தைச்’ சொல்கிறார் கவிஞர்!

வைத்தியர்களுக்கு ஆதரவாக வைத்தியர்களின் குணங்களைப் பற்றி எடுத்துக் கூறி சமாதானம் அடைகிறார் இன்னொரு கவிஞர்!அவரது பாடல் இது தான்:-

வ்யாதேஸ்தத்வ பரிஞானம் வேதநாயாஸ்ச நிக்ரஹ: I
ஏதத் வைத்யஸ்ச வைத்யத்வம் ந வைத்ய: ப்ரபுராயுஷ: II

வ்யாதேஸ்தத்வ பரிஞானம் – வியாதிகளின் மூல காரணங்களை உணர்வதும்
வேதநாயாஸ்ச நிக்ரஹ: – அவற்றினால் ஏற்படும் வேதனைகளைக் குறைப்பதும் ஆகிய
ஏதத் வைத்யஸ்ச வைத்யத்வம் – இவையே ஒரு வைத்தியரின் குணங்களாகும்
ஆயுஷ: – ஆயுளுக்கு (ஆயுள் இவ்வளவு என்று அதை தருவதற்கான)
ப்ரபு – எஜமானன் (அதிகாரி)
ந – (வைத்தியர்) இல்லை!
doctor8

ஒரு டாக்டரின் கடமையையும் அவர் இந்தக் காலத்தில் எப்படிச் செயல் படுகிறார் என்பதையும் அந்தக் காலத்திலேயே சொல்லி விட்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் ஆச்சரியம் தான் வருகிறது இல்லையா!
*******************