
WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 10,050
Date uploaded in London – 3 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மல்லிநாதா தன் விவரணம் ஒவ்வொன்றுக்கும் காவியக் கருவுக்கேற்பத் தலைப்புக் கொடுத்திருக்கிறார். அதன் விளக்கத்தையும் பார்ப்போம்…….
சஞ்சீவினி–காளிதாசனின் ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் -விவரணம்
காளிதாசனின் சொற்பிரயோகத்தை அரைகுறையாகப்புரிந்துகொண்டு,சகட்டுமேனிக்கு விமரிசத்தவர்களைக் கட்டோடு அவருக்குப் பிடிக்கவில்லை.மேகதூதத்தைச் சரிவரப் புரிந்துக் கொள்வதிலேயே காலம் கடந்து விடுகிறதே என அங்கலாய்க்கிறார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதைப் போல் பலவிதமான தரங்கெட்ட வியாக்கி யானங்களால் ஒன்றும் சரியாகப் புரியாமல் மயங்கிக் கிடந்த ரசிகர்களை மிருத சஞ்சீவினி மூலிகைச் சாறு கொடுத்து மீண்டெழ வைப்பது போல் தனது விளக்க வுரை அமைந்திருக்கும் என்று அவரே சொல்கிறார். அதனாலேயே அந்த வியாக்கி யானத்துக்கு “சஞ்சீவினி” எனப் பெயரிட்டார்.
கண்டாபத– பாரவியின் கிராட்டார்ஜுனீயம்- விளக்கவுரை
“கண்டாபத” என்பது பட்டத்து யானை போகும் ராஜபாட்டை, நகரின் முக்கியச் சாலை. அது குண்டு,குழி, மேடு-பள்ளமில்லாமல்,மனதுக்கு இதமளிக்கும் மரங்கள் நிறைந்து ஒரே சீராக அமைந்திருப்பது போன்று,பாரவியின் “கிராட்டார்ஜுனீயம்” உள்ளதாம். அது மாதிரி விளக்கவுரை எனும் ஒரு மணிப்பாதையைக் கட்டமைத்து, சீரற்ற, அபாயகரமான வளைவுகள், குறுகிய ஒருவரே செல்லக் கூடியதுமானப் பாதைகளைப் போன்ற உப்புச் சப்பில்லாத விமர்சனங்களால் பாழடைந்துக் கிடக்கும் ரசிகர் உள்ளங்களைப் பாதுகாப்பான, மனதைக் கொள்ளை கொள்ளும் “பாரவியின் காவிய ராஜபாட்டையில் அழைத்துச் செல்வேன் என்கிறார். இளம் தேங்காயைப்
பிளந்து,இளநீரைப் பருகி, அதனுள்ளே இருக்கும் வழுக்கையைச் சுவைத்து உண்ணும் சுகானுபவத்தை அளிக்கவல்லது கவியின் சொல்லாடல், கவிதை நடை என்கிறார். கண்டாபத எப்படிப்பட்டப் பொருத்தமானப் பெயர்!
சர்வங்கச– கவி மாகாவின் சிசுபாலவதம்–வியாக்கியானம்
மாகா தனது காவியத்தில், தண்டின் வகுத்துக் கொடுத்துள்ள அலங்கார சாஸ்திர வகைப்பாடுகள்,சாக்ய யோகம், ஜோதிடம், பிராணிகள் பற்றிய ஞானம் என அனைத் தையும் படிப்பவர் மனம் கவரும் வண்ணம் அளித்துள்ளார். அவர் எடுத்துக் கையா ளாதச் சொற்களே கலைக்களஞ்சியத்தில் இல்லை எனலாம் என்றுத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் மல்லிநாதர். எளிதில் புரிந்துக் கொள்ள முடியாத அவரதுக் கடினச்
சொல்லாடலைப் பதம் பிரித்து, அதன் சாரத்தைச் சுவைபட விளங்க வைப்பதே தனது தலையாய நோக்கம் என்கிறார். கச (कस)=பொருளின் சாரம். அங்கச (अङ्कस)= அடிபணிய வைப்பது, தாழ்மைப் படுத்துவது என்று அர்த்தம். சிசுபாலன் கிருஷ் ணனை ஏசி,தாழ்மைப் படுத்த, அந்த வில்லனை அடக்கியாண்டு சம்ஹாரம் செய்கி றான் கிருஷ்ணன். இவ்விருச் செயல்களைக் குறிப்பது தான் “ஸர்வங்கச” வியாக்கி யானத் தலைப்பு
ஜீவாது– ஶ்ரீஹர்ஷரின் நைஷத சரிதம்—விரிவுரை
நள-தமயந்தி கதையைத் தான் ஶ்ரீஹர்ஷர் சுவாரசியமிக்கச் சரிதமாக ஆக்கியுள்ளார். ஆனால் முடிவு பெறாமலேயே முடிகிறது! இதுவும் அன்றாட வாழ்வின் அவலநிலை யைத் தான் சுட்டிக் காட்டுகிறதோ, என்னவோ? தனது கருப்பொருளாலும், சொற்கள், வாக்கியங்கள் பொருத்தமானதாக அமைந்த விதத்தாலும் இக் காவியம் ஜீவனுள் ளதாக விளங்குகிறது.அரசனோ, ஆண்டியோ வாழ்வில் தினசரி அவன் சந்திக்கும் வெற்றித் தோல்விகள்,அலைக்கழிக்கும் ஆசாபாசங்கள், வஞ்சகம்,புகழ்ச்சி, அரசனும் ஆண்டியாகலாம் எனும் நிதர்சன உண்மை,எல்லாம் தலை விதி வசம் போலவே நடக்கும் என்பனவற்றை இச் சரிதம் சுட்டிக் காட்டுவதால், தன் விரிவுரைக்கு “ஜீவாது” எனத் தலைப்புக் கொடுத்துள்ளார். ஜீவாது (जीवातु) =ஜீவித்திருக்க
வேண்டியச் சாதனங்கள்.
சர்வபதீனா– கவி பட்டியின் பட்டிகாவியம்—திறனாராய்வு
ஶ்ரீராமரின் வீர தீரச் செயல்களைக் கவிதை வடிவில் எடுத்துச் சொல்லி, அதே சமயம் அனைவருக்கும் புரியும்படியாக இலக்கண விதிகளைக் கையாளும் முறை மற்றும் அணியிலக்கணம் ஆகியவற்றை மணிச்சுருக்கமாக விவரிக்கிறது பட்டி காவியம். அதை மேலும் திறனாய்வுச் செய்து ஶ்ரீராமரின் பயணத்துக்கு உற்ற வழிகாட்டியாகத் திகழ்கிறார் மல்லிநாதர்—-பதீனா (पथीना)=பயண வழிகாட்டி .அதையே
தன் விரிவுரையின் தலைப்பாக வைத்தார்.
மல்லிநாதாவைப் பற்றிய வாழ்க்கை வரலாறு என்று ஒன்றுமில்லை. ஆனால், மரபுவழி, செவிவழிக் கதைகளாகச் சில நடப்புகள் கூறப்படுகின்றன. அவற்றிலிருந்து இரு சுவாரசியமிக்கச் சம்பவங்களை விவரித்து இக்கட்டுரையை முடித்து வைப்போம்……..
ஆரம்பக் காலத்தில் நடை, உடை பாவனைகளில் அக்கரைக் கொள்ளாதவராகவே மல்லிநாதா இருந்தார். ஒரு சமயம் ராஜா சிம்ஹபூபாலனைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடைகிழிந்து, கந்தலாகியும், சுருக்கம் விழுந்துக் கோணல் மாணலாகவும் தோற்றமளித்தது. கையிலோ ஒரு அசிங்கமான வளைந்த தடி. இதைக் கண்டவர்கள்,’நாட்டு அரசனைப் பார்க்க இப்படியாப் போவது?’ எனக் கேட்டனர், அதற்கு அவர் அளித்த நெத்தியடிப் பதில் இதுவே-
वाससा चीकरिबाकिरेण
किं दारुणा वङ्कर-टिङ्करेण |
सर्वज्ञभूपालविलोकनार्थं
वैदुष्यमेको विदुषां सहायः ॥
கிழிந்த ஆடை அணிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல, இந்த வளைந்தத் தடி யாருக்கும் ஊறு விளைவிக்காது, ஒரு அறிவாளி ராஜாவைப் பார்க்கப் போகவேண்டுமென்றால் அவருக்கு இருக்க வேண்டியத் தகுதி கல்வியறிவும், சாஸ்திரப் புலமையும் தான்!” என்றவுடன் வம்பர்களின் கொட்டம் அடங்கிவிட்டது.
‘சீக்கரி-பாக்கிரி(கிழிந்த, கந்தல்), வங்கரி-டிங்கரி (சுருக்கம், கோணல்-மாணல்) இவையிரண்டும் தெலுங்கு மொழிச் சொற்கள். அதை உபயோகித்திருப்பதால் மல்லியின் தாய்மொழி சுந்தரத் தெலுங்கு எனத் தெரிய வருகிறது.
அடுத்தச் சம்பவம்:
செல்வச் செழிப்புள்ளக் குடும்பத்தில் பிறந்ததாலும், எதிலும் அதிகச் சலுகைக் கொடுத்துச் செல்லமாக வளர்க்கப்பட்டதாலும் படிப்பில் அவ்வளவாக நாட்டம் ஏற்படவில்லை. பணபலம்,வசீகரத் தோற்றம் இரண்டும் சேர்ந்து அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் முண்டியடித்து வந்தனர். முடிவில் மெத்தப் படித்த ஒரு வெகு புத்திசாலிப் பெண் அவருக்கு மனைவியானாள். கூடிய சீக்கிரமே அவளுக்குப்
புரிந்து விட்டது மல்லிநாதா அவளுக்கேற்றப் புத்திசாலி அல்ல என்று. ஒருநாள் தெருவில் வீசியெறியப்பட்ட ஒரு மலரை மல்லி புகழ்ந்துக் கூறினார். உடனே அவள், “இந்தப் பூவின் அழகால் என்ன பயன்? அதனிடம் வாசமில்லை, இறைவழி பாட்டுக்கும் உகந்தது இல்லையே!” என மறைமுகமாக அவரைக் குத்திக் காட்டினாள். அதனால் மனதளவில் காயமடைந்தவர், படிப்பைத் தொடர ஒரு குருகுலத்தில் சேர்ந்தார்..அச்சூழ்நிலை கடினமாக இருந்தாலும் அவர் கவனம் பூராவும்படிப்பிலேயே இருந்தது. அவரைச் சோதிக்க எண்ணியக் குருநாதர் சாப்பாட்டில் நெய்க்குப் பதில் வேப்பெண்ணையை இடச் சொன்னார். இன்பக் கல்விச் சுவையில் மூழ்கியிருந்த வருக்கு உணவுக் கசந்தது தெரியவேயில்லை. காலப்போக்கில் அவர் ஒரு சிறந்தக் கல்விமானாகத் திகழ்ந்தார். குருகுலத்திலிருந்து விடைபெறும் நாள் அன்று உணவ ருந்தும் போது சாப்பாடு கசந்ததால் குருபத்தினியிடம் ,”மாதே! இன்று உணவு கசப்பது ஏன்?” எனக் கேட்க குருஜி விஷயத்தை விளக்கினார். கற்றவைக் கற்ற பின்புதான் உணவின் ருசியை அவரால் உணர முடிந்தது! மனத் திருப்தியுடன் வீடு திரும்பியவருக்கு மனைவி நல்ல வரவேற்பளித்தாள்.காவியங்களுக்கு வியாக்கி யானம் எழுதுவது ஆரம்பமானது. கதை இத்துடம் முடியவில்லை, சுவாரசியமானப் பகுதி இனிமேல் தான் வருகிறது..…
கவிஞனின் மனைவிக்குக் கணவன் தன்னைப் பற்றிப் பாடல் எழுதமாட்டானா என்ற ஆதங்கம் இருக்காதா, என்ன? அதையேதான் கேட்டாள் மல்லியின் மனைவியும்.
ரொம்ப வற்பொறுத்தலின் பேரில் மல்லி, பெரிய சாதனையாளன் போல் பாடினார்–“அன்பே! (रामवैरिभगिनीव राजसे !)–ஶ்ரீராமனின் எதிரி ராவணனின் தங்கை சூர்பநகா போல் ஜொலிப்புடன் இருக்கிறாய்!” என்று. எரிச்சல் அடைந்தவள் சரியானச் சந்தர்ப்பம்
அமையக் காத்திருந்தாள். அந்நாளும் வந்தது. மல்லிக்கு ஒரு பழக்கமுண்டு. திறனாறாய்வில் சொல்வது போல் “இத்யார்த்த:” =இது தான் பொதுவான அர்த்தம், “இதி பாவ:”= இதன் உட்கருத்து இதுதான்,எனும் இவ்விரு வார்த்தைகளையும் அன்றாடம் பேசுவதிலும் உபயோகிப்பார். அதை வைத்தே அவருக்குப் பாடம் புகட்ட நினைத்தாள். அப்பாவியாய் மல்லி, “இன்றைக்கு என்ன சாப்பாடு?” என்று கேட்க
மனைவி இப்படிப் பாடினாள்–
“इत्यर्थ-क्वथितं चैवेतिभाव-तेमनं तथा இத்யர்த்த-க்வதிதம் ச இதிபாவ: தேமனம் ததா
सज्जीकृतेद्य भुक्त्यर्थं तुष्यतां भवदाशयः। சஜ்ஜிக்ருதேத்ய புக்த்யர்தம் துஷ்யதாம் பவதாஷய:|
அதாவது, இத்யார்த்தாவைச் சாதமாக வடித்திருக்கிறேன்; இதிபாவ:வை வ்யஞ் ஜனம்( காய்கறிப் பொரியல்) செய்திருக்கிறேன். மனத் திருப்தியுடன் வயிறார உண்பீர், என் பிரியநாதா!”என்றாளே, பார்க்க வேண்டும்! மனைவியைச் சீண்டினால் இப்படித் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்! மல்லி இதை ஒரு பொருட்டா கவே எடுத்துக் கொள்ளவில்லை. அவளின் சாதுரியப் பேச்சைக் கேட்டு ரசிக்கவே செய்தார். இதுமாதிரி சாமர்த்தியமானப் பேச்சுக்கள் சிலேடைப் பொங்க அவரது வியாக்கியானங்களில் அங்கெங்கேப் பிரதிபலிப்பதைக் காணலாம்!
இப்போது புரிகிறதா மேலே ஆரம்ப முதல் பத்தியில் சொன்னது எவ்வளவு அவசியம் என்று!
ஜயது, ஜயது சம்ஸ்க்ருதம்!

நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்.
சான்று ஆதாரம்: P.G.LALYE – Mallinathamaneeshaa-Osmania University Sanskrit Seminar papers &
Makers of Indian Literature.
Sathaavathani Dr.R. Ganesh- KAVITEKONDU KATHE- English Translation from Kannada
International Journal of Research and Analytical Reviews-Vol 4,Issue3 2017 —————————————————————————————————————–
TAGS- மல்லிநாத சூரி-2